இனஅழிப்பின் இன்னொரு வடிவம் கட்டாயக் கருக்கலைப்பு

22.12.13

சிறீலங்கா அரசாங்கம் தமிழர் தாயகத்தில் மேற்கொண்டு வருகின்ற இன அழிப்பின் உச்சக்கட்டம் தற்போது அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. அதுதான் தமிழ்ப் பெண்களுக்கான திட்டமிட்ட, கட்டாயப்படுத்தப்பட்ட கருத்தடை முறைமையாகும்.

தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த காரணத்தாலேயே அவர்கள் தங்களுக்கு எதிராக போராடினார்கள் என்று நம்புகின்ற சிங்களம், தமிழ் மக்களின் எண்ணிக்கையில் பாரிய மாற்றங்களைச் செய்தால் அவர்களின் பலத்தைக் குறைக்கலாம் என்று கருதுகின்றது. அந்தக் கருத்தியலின் அடிப்படையிலேயே சிங்களம் இன்று தமிழ் மக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு மிகவும் தீவிரமாகவும் இரகசியமாகவும் நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஆனால், அந்த இரகசியம் தற்போது பரகசியமாகியிருக்கின்றது.
தமிழ் மக்களின் எண்ணிக்கையைக் குறைக்கின்ற திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைக்கு என்றே சிங்கள அரசாங்கம் குறிப்பிட்டளவான மருத்துவர்களைத் தெரிவுசெய்து களமிறக்கியிருக்கின்றது என்று கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னரே ஈழமுரசு சுட்டிக்காட்டியிருந்தது. ஆனால், அது குறித்து எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இந்த விடயத்தில் வாய்மூடி மௌனியாக இருந்தனர். அதன் பின்னரே கிளிநொச்சி மாவட்டம் மலையாளபுரத்தில் 50 வரையான பெண்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. அந்தக் கருத்தடைக்குப் பின்னர்தான் இந்த விடயம் சிறிது பேசப்படும் பொருளாக மாறியிருக்கின்றது. இது விரைவில் மறக்கப்படவும் கூடும்.

தமிழர் தாயகப் பிரதேசத்தில் திட்டமிட்ட கருத்தடையை மேற்கொள்வதற்கு என்று குறிப்பிட்டளவான மருத்துவ குழாம் ஒன்று வடக்கில் களமிறக்கப்பட்டுள்ளது. சிங்கள மருத்துவர்கள் மட்டுமன்றி தமிழ் மருத்துவ அதிகாரிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இந்த மருத்துவர் குழாம் உண்மையிலேயே இராணுவப் புலனாய்வுத்துறை போன்றது. ஏன், அவர்களைவிட ஆபத்தானவர்கள் என்றுகூடச் சொல்லாம். இவர்கள் தமது செயற்பாடுகள் முழுவதையும் மிகவும் இரகசியமாக வைத்திருக்கின்றனர்.

ஏனைய மருத்துவர்களுடன் சாதாரணமான மருத்துவர்கள் போன்று பழகுகின்ற இந்த கருத்தடை மருத்துவக் குழுவானது, தமிழ் மக்களுக்கு நன்மை செய்வது போன்று நடித்து தமது கைங்கர்யத்தை நிறைவேற்றுகின்றது.
அதாவது, மிகவும் கஸ்டப்பட்ட கிராமங்களில் குடும்பத் திட்டமிடல் என்ற பெயரிலேயே இந்தக் கருத்தடை முறைமை அமுல்படுத்தப்படுகின்றது.

 ஒரு குடும்பத்தில் இரண்டு, மூன்று குழந்தைகள் இருந்தால் அவர்களை வளர்ப்பதில் கஷ்டம் என்பதைக் காரணம் காட்டி நீங்கள் குழந்தைகளைப் பிற்போட முடியும் தானே. ஏன் கஸ்டப்படுகின்றீர்கள் என்று தாய்மாருக்கும் தந்தையர்களுக்கும் ஆலோசனை என்ற பெயரில் அவர்களின் மனங்களில் நஞ்சூட்டப்படுகின்றது.

மருத்துவர்கள் தானே அவர்கள் எங்களுக்கு நன்மைக்கு தானே சொல்கிறார்கள் என்று நம்புகின்ற அப்பாவி மக்கள், கருத்தடைக்கு உடன்படுகின்றார்கள். இப்படியாக அந்தக் கிராமத்தில் பல தாய்மார்களை ஒன்று திரட்டி ஒரேயடியாக கருத்தடை செய்யப்படுகின்றது. இந்த நடைமுறைகளே அண்மையில் வன்னியில் பூநகரி, மலையாளபுரம் மற்றும் யாழ்ப்பாணத்தில் கோப்பாய், உரும்பிராய் ஆகிய இடங்களில் நடைபெற்றிருக்கின்றது.

கிளிநொச்சி மலையாளபுரத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் சுமார் 50 பெண்களுக்கு அவர்களுடைய கணவர்மாரின் அனுமதிகள் பெறப்படாமல் கட்டாய கருத்தடை செய்யப்பட்டுள்ளது. இதில் சதீஸ்குமார் மஞ்சுளா (வயது 26) என்ற ஒரு பிள்ளையின் தாயார் உயிரிழந்துள்ளார். இவர் கர்ப்பமடைந்திருந்த நிலையிலும் அதனை துளியளவேனும் கணக்கெடுக்காத சிங்களக் கைக்கூலி மருத்துவர்கள், அந்தப் பெண்ணுக்கு கருத்தடை செய்து பின்னர் அவரைக் கொலை செய்துள்ளனர். இதற்கு முன்னதாக பூநகரியிலும் கட்டாய கருத்தடை இடம்பெற்றிருக்கின்றது. இதனை விட யாழ்ப்பாணத்தில் கோப்பாய், உரும்பிராய், மருதங்கேணி ஆகிய இடங்களிலும் கட்டாய கருத்தடை இடம்பெற்றுள்ளது. இவையனைத்தும் காதுக்கு எட்டிய செய்திகள். ஆனால், தெரியாமல் இன்னும் பல இடங்களில் ஏராளமான தமிழ்ப் பெண்களுக்கு கட்டாய கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் ஆச்சரியமான அதேவேளை கவலைக்குரிய விடயம் என்னவென்றால், ஒரேயரு குழந்தையுடைய இளம் தாய்மார்கள் பலரும் இந்தக் கருத்தடைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். 23 தொடக்கம் 28 வயதுடைய இளம் தாய்மாருக்கு ஏற்கனவே ஒன்றோ இரண்டோ குழந்தைகள் இருக்கின்ற நிலையில் அவர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு குழந்தைகள் பிறக்காதவாறான கருத்தடை முறைகள் செய்யப்படுகின்றன.

இது தற்காலிக கருத்தடையே என்றும் ஐந்து வருடங்களுக்கு பின்னர் குழந்தைகள் பிறக்கும் என்றும் கூறியே இந்தக் கருத்தடைகள் இடம்பெறுகின்றன. ஆனால், 28 வயதில் உள்ள ஒரு  தாய்க்கு ஏற்கனவே ஒரு குழந்தைதான் உண்டு என்ற நிலையில் அவருக்கு கருத்தடை செய்யப்பட்டால் அவர் மற்றைய குழந்தையை 33 வயதில்தான் பெறவேண்டும். இது சாத்தியப்படுமா? அப்படி சாத்தியப்படுத்தினால்கூட அவர் ஒரு குழந்தையை மட்டுமே பெற்றுக்கொள்வார்.

இதனைவிட சாதாரண தாய் ஒருவர் என்றால் அவர் ஏறத்தாழ ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுப்பார். ஆனால், கருத்தடை செய்யப்பட்டால் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுடன் நிறுத்த வேண்டிய நிலையே ஏற்படும். தமிழர் பிரதேசத்தை எடுத்துக்கொண்டால் நகரப்புறத்தில் வாழ்கின்றவர்கள் அரச உத்தியோகம் மற்றும் பல வேலைகளின் நிமித்தம் இரண்டு அல்லது மூன்று குழந்தைகளை மட்டுமே பெற்றெடுப்பர். ஆனால், கிராமங்களில் உள்ள தாய்மாரே ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வர். கிராமங்கள்தான் தமிழ் மக்களின் சனத்தொகையை மேல்நிலைப்படுத்துகின்றன. இதனால்தான் தற்போது சிங்களத்தின் இராஜதந்திரம் மூலமாக கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு கருத்தடைகள் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக, வன்னியின் சில இடங்களில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் மூலம் திடுக்கிடும் உண்மைத் தகவல்கள் தெரியவந்துள்ளன. அதாவது, ஆய்வுக்குப்படுத்தப்பட்ட அந்தக் கிராமங்களில் கடந்த 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் முன்பள்ளி அல்லது தரம் 1 வகுப்பில் படிக்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை 38 ஆக இருந்தது. ஆனால், அதாவது, 2012 மற்றும் 2013 ஆகிய காலப்பகுதிகளில் அதே தரம் ஒன்று வகுப்பிற்கு 15 தொடக்கம் 18 வரையான பிள்ளைகளே இணைந்திருக்கின்றனர்.
 இதிலிருந்தே தமிழ் மக்களின் பிறப்பு வீதம் எப்படி குறைக்கின்றது, எப்படிக் குறைக்கப்பட்டிருக்கின்றது என்ற உண்மை தெரியவருகின்றது. இவையனைத்தும் திட்டமிட்ட கருத்தடை மூலம் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களேயாகும்.

இந்த நிலையில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் சத்தியலிங்கம் சிறிலங்கா அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற போர்வையில் செயற்பட்டுவருகின்றார். மலையாளபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட கருத்தடைச் செயற்பாடு கட்டாயப்படுத்தி இடம்பெறவில்லையென்றும் தாய்மாரின் ஒப்புதலுடனேயே இடம்பெற்றது என்றும் கருத்துக் கூறியிருக்கின்றார்.

ஆனால், குறித்த கருத்தடைப் பிரச்சினை பெரிதாகியதைத் தொடர்ந்து அதனை விசாரிப்பதற்கென்று இவரால் நியமிக்கப்பட்ட குழுவானது, மலையாளபுரத்தில் கருத்தடை செய்யப்பட்ட 50 பேரிடமும் இவரின் ஆலோசனையின் பேரில் கடிதங்களைப் பெற்றுக்கொண்டிக்கின்றது. குறித்த கருத்தடையானது கட்டாயத்தின் பேரில் இடம்பெறவில்லையென்று எழுதப்பட்ட கடிதங்களில் தாய்மாரின் ஒப்பம் பெறப்பட்டிருக்கின்றது. ஆனால், இந்தக் கடிதத்தையே அந்தக் குழு தங்களைக் கட்டாயப்படுத்தியே பெற்றுக்கொண்டதாக தாய்மார் தெரிவிக்கின்றனர். ஆக, வடமாகாண சுகாதார அமைசர் மருத்துவர் சத்தியலிங்கம் சிறிலங்கா அரசுக்கு துணைபோய்விட்டார் என்பது துலாம்பரமாகத் தெரிகின்றது. இதையே வடக்கு மாகாண மக்களும் கூறுகின்றனர்.

 தமிழ் மக்களைக் களையெடுப்பதற்காக காலத்திற்கு காலம் தமிழ்
அடிவருடிகளில் சிலரை கோடரிக்காம்புகளாகப் பயன்படுத்துவதில் சிங்கள தேசம் வெற்றி கண்டு வருகின்றது. அந்த வகையில் இன்று சத்தியலிங்கத்தை சிங்களம் தனது வலைக்குள் விழுத்தியிருக்கின்றது. எனவே, நாங்கள் அனைவரும் இந்த விடயத்தில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். எமது தமிழ் மக்களின் செயற்பாடுகளில் 95 வீதத்திற்கு மேலானவை புலம்பெயர் தேசத்தில் இருந்தே நடைமுறைப்படுத்தப்படுவதாக மகிந்த ராஜபக்ச கூறுவது போன்று புலம்பெயர் தேசத்து மக்கள் தான் எமது மக்களைத் தயார்படுத்த வேண்டும்.

நீங்கள் இங்கே தாயகத்திலிருக்கின்ற உங்கள் உறவுகளுடன் உரையாடுகின்றபோது சிறிலங்கா அரசின் இந்த கபடத்தனத்திற்கு துணைபோக வேண்டாம் என்று எடுத்துக்கூறுங்கள். எங்கள் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் வெற்றி பெறுகின்ற நிலை வரும் என்பதில் அனைவரும் உறுதியாக இருக்கின்றோம். அப்படி விடுதலை கிடைக்கின்ற போது நாங்கள் பலமானவர்களாக இருக்க வேண்டும். இல்லையேல் சிங்கள தேசம் மீண்டும் எமது இறைமையில் கைவைக்க எத்தனிக்கும். இதனை முறியடிப்பதற்கு நாங்கள் எங்கள் உறவுகளைத் தயார்படுத்துவோம். அத்துடன் நாங்களும் இந்த விடயத்தில் மிக விழிப்பாக இருப்போம்.
-
நன்றி: ஈழமுரசு

0 கருத்துக்கள் :