வரலாறு தன் தலையில் தூக்கிவைத்த போராளி

12.12.13

ஒரு காலம், இராஜதுரோகியாகவும், பயங்கரவாதியாகவும், கலகக்காரனாகவும், வன்முறையாளனாகவும், நாசவேலை புரிபவனாகவும் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்ட ஒருவர், அரைநூற்றாண்டு கடந்தநிலையில், உலகமகா தலைவனாக, உலகம் திரண்டு உச்சிமுகர்ந்து, இறுதிப் பயணத்தில் வழியனுப்பிவைக்கும் காலமுரணை சாதித்து நிமிர்ந்து நிற்கின்றார் நெல்சன் மண்டேலா அவர்கள்.

நிறவெறிக்கும், அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆட்பட்டு வாழ்வில் நிமிர்வில்லாத அடிமைவாழ்வில் நசியுண்டு கிடந்த கறுப்பின மக்களின் விடுதலைக்காக தன் இளமை வயதில், போராடப் புறப்பட்ட விடுதலைப் போராளி நெல்சன் மண்டேலா.

தன் வாழ்க்கை முழுவதையுமே அடக்கிஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவே ஒப்படைத்த போராளி.
கறுப்பினமக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வெள்ளை நிறவெறியின் கொடுங்கோன்மைக்கு எதிராக, அவர் முன்னெடுத்த போராட்டம் தென்னாபிரிக்க மக்களின் விடுதலைக்கு வழிகோலியதுடன், சமவுரிமைக்காகவும், சமூக நீதிக்காகவும், நிறவெறிக்கு எதிராகவும், இனஒதுக்கலுக்கு எதிராகவும் போராடும் உணர்வின் குறியீடாக அவரை அடையாளப்படுத்தியது.

அமைதிக்கான, சமாதானத்திற்கான போராளியாக உலகம் அவரை கௌரவிக்கக் காரணமாக இருந்தது.
தான்கொண்ட இலட்சியத்தை அடைய அவர், ஆயுதப் போராளியாகவும், அகிம்சைப்போராளியாகவும் காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிப் போராடினார்.
இந்தப் பூமியில் பிறந்ததற்குண்டான தனது பணியை பூரணமாக நிறைவேற்றிக்கொண்டு, தனது தொன்னூற்றி ஐந்தாவது வயதில், அவர், இந்தப் பூமியில் இருந்து சென்றுவிட்டார்.

நெல்சன் மண்டேலா அவர்களை, போராடும் காலத்தே, அவரை நிராகரித்தவர்கள், அவருக்குத் தண்டனை விதித்தவர்கள், அவரது பயணங்களுக்கு தடைவிதித்தவர்கள், அவரைப் பயங்கரவாதி என முத்திரை குத்தியவர்கள், அவரை இழித்தும் பழித்தும் புறம்பேசியவர்கள், பின்னாளில், அவரை இருகரம் நீட்டி வரவேற்று வாழ்த்தி மகிழ்ந்து பெருமைகொண்டனர்.
இதற்கு நெல்சன் மண்டேலா அவர்களின் உருக்குறுதிவாய்ந்த போராட்டமும், திடசங்கற்பமும், அப்பழுக்கற்ற அர்ப்பணிப்புமே காரணம். வெற்றிபெற்ற நியாயமே அதற்குக் காரணம். வெற்றியின் பின் அவர் கடைப்பிடித்த பெருந்தன்மையே காரணம்.

வரலாற்றின் ஏட்டில், மதிப்பு மிக்க உலகப் பெருந்தலைவனாக வீற்றிருக்கும் நெல்சன் மண்டேலா அவர்கள், எமைப்போன்ற போராடும் இனங்களுக்கு ஒரு வழிகாட்டி. அவரது போராட்ட வாழ்கை இருள்அற்ற ஒளிப்பாதை.
நெல்சன் மண்டேலா அவர்களின் வாழ்வும், போராட்டமும் விடுதலைக்குப்போராடும் மக்களுக்குச் சிறப்பான பாடப்புத்தகம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
தமிழர் நடுவம்- பிரான்ஸ்.

0 கருத்துக்கள் :