ஜயா.பழ.நெடுமாறன் உட்பட அனைவரும் இன்று விடுதலை!

20.11.13

உலக தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் உட்பட 85 பேருக்கு பிணை வழங்கி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது.

பெரும் சர்ச்சைக்கிடையே உலக தமிழர் பேரமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட இந்த நினைவு முற்றம் கடந்த 8ஆம் திகதி திறக்கப்பட்டது.

இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து நினைவு முற்றம் கட்டப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு அதன் சுவர் இடிக்கப்பட்டது.

அதேவேளையில், விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் அங்கு ஒலிப்பெருக்கி பயன்படுத்தியதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் உட்பட 85பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

அதன் அடிப்படையில் பழ.நெடுமாறன் உள்பட 85பேரும் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர். கைதான 85 பேரும் பிணை கோரி தஞ்சாவூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

ஆனால், அவர்களின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தற்போது, பழ.நெடுமாறன் உள்பட 85 பேர் சார்பில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பழ.நெடுமாறன் உட்பட 85 பேருக்கும் பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

0 கருத்துக்கள் :