பிரபாகரன் சிறந்த தலைமைத்துவ குணாதிசயங்களை கொண்டவர்:கோத்தபாய புகழாரம்

6.11.13

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் ஜே.வி.பியின் ஸ்தாப தலைவர் ரோஹன விஜேவீர ஆகியோர் சிறந்த தலைமைத்துவ குணாதிசயங்களை கொண்டவர்கள் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் வேறுப்பட்டவர்கள். உண்மையில் இவர்கள் இருவரையும் ஒருவரோடு ஒருவர் ஒப்பிட முடியாது.

முதலில் விஜேவீர 1971 ஆம் ஆண்டுகளில் செயற்பட்டது போன்று 87,88,89 ஆம் ஆண்டுகளில் செயற்படவில்லை. ஜே.வி.பியினர் இந்த காலப் பகுதியில் பிரபாகரனின் செயல் முறைகளையே பின்பற்றினர்.

இவர்கள் இருவரும் இரண்டு நோக்கங்களுக்காக செயற்பட்டனர். அது பற்றி எந்த தர்க்கங்களும் இல்லை.

பிரபாகரன் இனவாத்திற்காக குரல் கொடுத்தார். இனவாதமே இலகுவாக மக்களிடம் சென்றடைய கூடிய வழிமுறையாகும்.

இனவாதத்தின் மூலம் மக்களை வென்றெடுக்க முடியும். பிரபாகரன் மக்களை வென்றெடுத்தார்.

எனினும் விஜேவீர முதலாளித்துவத்திற்கு எதிராக வகுப்பு நிலை தொடர்பில் செயற்பட்டார். அவரால் அதனை நோக்கி செல்ல முடியாது போனது.

சமவுடமை, மாக்ஸிம், கம்யூனிசம் போன்றவற்றை விட இனவாதம் வலுவானது. இவர்கள் இருவரில் பிரபாகரன் இனவாதி. இவர்கள் இருவருக்கும் இருக்கும் பொதுவான அடையாளம் இருப்பு.

சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்துவது இவர்கள் ஏற்படுத்திய அமைப்புகளின் பொதுவான வழிமுறையாக இருந்தது. அச்சம் என்ற காரணத்தை அடிப்படையாக கொண்டே இந்த இரண்டு அமைப்புகளும் செயற்பட்டன.

பிரபாகரனின் அச்சுறுத்தல் என்ற செயற்பாட்டையே விஜேவீர 87,88,89 ஆம் ஆண்டுகளில் கடைபிடித்தார். இதுவே இந்த இரண்டு அமைப்புகளினதும் பிரதான நடைமுறையாக இருந்தது.

விஜேவீர ஏற்படுத்திய அடிப்படையில் அவர்கள் இன்றும் ஒரு அரசியல் கட்சியாக உள்ளனர். விஜேவீரவிடம் சிறந்த தலைமைத்துவ குணாதிசயம் இருந்தது. அவர் ஒரு திறமைசாலி.


பிரபாகரன் , துரையப்பாவை கொலை செய்து சிறிதாக தனது அமைப்பை ஆரம்பித்த காலத்தில் நான் யாழ்ப்பாணத்தில் இருந்தேன். அந்த காலத்தில் பிரபாகரனுக்கு பெரிய ஆதரவு இருக்கவில்லை. அறிவும் இருக்கவில்லை. நோக்கம் இருக்கவில்லை.

நாமே அவருக்கான அடிப்படையை ஏற்படுத்தி கொடுத்தோம் . 83 ஆம் ஆண்டு ஜூலை இனக்கலவரம், ஜே.ஆர். ஜயவர்தனவுக்கும் இந்திரா காந்திக்கும் இடையில் காணப்பட்ட முரண்பாடுகள் என்பன காரணமாக தமிழ் மக்கள் பிரபாகரனிடம் நெருங்கி சென்றனர். அத்துடன் இந்தியாவும் கூடியளவில் உதவியது.

அன்று மற்றுமொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு இந்தியாவே பயற்சி வழங்கியது. அது பற்றி அன்று உலக நாடுகளோ, மனித உரிமை அமைப்புகளோ பேசவில்லை.

அன்று 10 போருடன் பிரபாகரன் ஆரம்பித்த அமைப்பு, பிற்காலத்தில் பாரிய இராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளை கொண்ட வலுவான அமைப்பாக ஒரு பிரதேசத்தை கைப்பற்றி வைத்திருந்தது.

அது மாத்திரமல்ல உலக நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி ஆயுதங்களை கொண்டு வந்து அவற்றை கொண்டு இலங்கையிலேயே பயிற்சிகளை பெற்று செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.

இது இலகுவான காரியமல்ல. ஒரு நாட்டின் பாரிய இராணுவம் ஒன்றுக்கு சாவலை ஏற்படுத்தி, கட்டமைப்பு ஒன்றை கட்டியெழுப்பும் வல்லமை திறமையாளருக்கே இருக்கும். சாதாரணமான ஒருவருக்கு அப்படியான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது.

இதனால் விஜேவீரவை போன்ற சிறந்த தலைமைத்துவ குணாதிசயங்களை நான் பிரபாகரனிடமும் காண்கிறேன். அதேபோல் பிரபாகரன் ஒரு திறமைசாலி என்றார்.

0 கருத்துக்கள் :