தென் மாகாணத்தில் முதல் முறையாக வீதி ஒன்றுக்கு தமிழ் தலைவரின் பெயர்

17.11.13

தென் மாகாணத்தில் முதல் முறையாக வீதியொன்றுக்கு தமிழ் தலைவர் ஒருவரின் பெயர் சூடப்பட்டுள்ளது.

இலங்கையின் சிரேஷ்ட தமிழ்த் தலைவரான சேர் பொன்னம்பலம் இராமநாதனின் பெயர் அங்குள்ள வீதியொன்றுக்கு சூடப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்டத்தின் பழைய தங்காலை வீதி மற்றும் கொட்டுவேகொட பிரதான வீதியை இணைக்கும் வீதிக்கு சேர் பொன்னம்பலம் இராமநாதன் மாவத்தை என்று சூடப்பட்டுள்ளது.
இந்த வீதியின் பெயர் பலகையை இளைஞர் விவகாரம் மற்றும் நிபுணத்துவ அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும இன்று மாலை 4.30 அளவில் திறந்து வைத்தார்.

சேர்.பொன்னம்பலம் இராமநாதன், இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரை தமது தலைவராக ஏற்றுக்கொண்டனர்.
1879 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டசபைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார்.

1897ம் ஆண்டு விக்டோரியா மகாராணியாரின் 50வது ஆண்டு விழாவிற்கான இலங்கையின் பிரதிநிதியாக செல்ல பொன்னம்பலம் இராமநாதனே தெரிவு செய்யப்பட்டார்.

அந்த விழாவின் போது அவருக்கு பிரித்தானிய அரசினால் இலங்கையின் முழுமையான தேசியவாதி எனும் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசினால் பிரபுப் பட்டம் (Sir) வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

மிகுந்த சொல்வன்மையும் வாதத் திறமையும் கொண்டிருந்த இவர், இலங்கையில் பிரித்தானியரின் பல நடவடிக்கைகளுக்கு எதிராக வாதாடி இலங்கையரின் நலன்களைப் பாதுகாத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :