மாநாட்டில் மன்மோகன்சிங் கலந்துகொள்வார்? டில்லி இராஜதந்திர வட்டாரம் தகவல்!

8.11.13

கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதா அல்லது மாநாட்டைப் புறக்கணிப்பதா என இறுதித் தீர்மானமொன்றை எடுப்பதற்காக தடுமாறி வந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், குறித்த மாநாட்டில் பங்கேற்பதென முடிவெடுத்துள்ளார் என்று டில்லி இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.

இதேவேளை எதிர்வரும் 13ம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் அவர், வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்துவதுடன், இந்திய அபிவிருத்தித் திட்டங்களையும் பார்வையிடுவார்.
இதற்கான ஏற்பாடுகளை யாழ். இந்திய துணைத் தூதரகம் மேற்கொண்டுள்ளதாக நம்பகரமாகத் தெரிய வருகிறது.

நேற்று வியாழன் இரவு இடம்பெற்ற இந்திய அமைச்சரவைக் கூட்டத்திலும் மன்மோகன் கலந்து கொள்வது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஆயினும் அவர் மாநாட்டில் பங்கேற்பதற்கு முடிவு செய்துள்ளார் என்று புதுடில்லி வட்டாரங்களில் இருந்து நேற்றிரவு அறிய முடிந்தது.
பிரதமரின் இந்த முடிவை பகிரங்கமாக அறிவித்தால், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு மேலும் உக்கிரமடைந்து நிலைமை மோசமடையலாம் என்ற அச்சத்தாலேயே இதுவிடயத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு சமாளித்து வருகின்றது.

கொழும்புப் பயணத்துக்கு மத்திய அமைச்சரவை மன்மோகனுக்கு ஒப்புதல் வழங்கினாலும், உள்நாட்டு அரசியல் நெருக்கடி உட்பட முக்கிய சில காரணங்களால் அவரது கொழும்பு பயணத்துக்கு முதல்நாளே மாநாடு குறித்த அறிவிப்பை டில்லி உத்தியோக பூர்வமாக விடுக்கும் எனவும் அவ்வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியாவின் சார்பில் எவரும் பங்கேற்கக்கூடாது என ஆரம்பம் முதலே வலியுறுத்தி வந்த தமிழக சட்டசபையிலும் இதனை மீள வலியுறுத்தி ஏகமனதாக தீர்மானமொன்றை நிறைவேற்றியது.

அத்துடன், தமிழகத்தில் ஆங்காங்கே மாநாட்டு எதிர்ப்புப் போராட்டங்களும் இடம்பெற்று வருவதால் இந்திய மத்திய அரசுக்கு மாநாடு விடயத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டது.

இவை ஒருபுறமிருக்க மறுபுறத்தில் மத்திய அமைச்சர்களான ப.சிதம்பரம், வாசன், ஜெயந்தி நடராஜன், அந்தோனி ஆகியோரும் மாநாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டது.
இவ்வாறு எதிர்ப்புகள் வலுத்தாலும், இந்திய வெளியுறவுத்துறை, மாநாட்டில் பிரதமர் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என பரிந்துரையை செய்தது. இதனையடுத்து, இதுவிடயத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தை பிரதமரிடம் ஒப்படைத்துவிட்டு மத்திய கூட்டணி அரசின் பிரதான கட்சியான காங்கிரஸும் அதிலிருந்த நழுவியது.

எனவே, முடிவெடுக்கும் சக்தி அமைச்சரவைக்கு வழங்கப்பட்டது. மாநாட்டில் பங்கேற்க மன்மோகன் முடிவெடுத்துள்ளதால் அதற்கு அமைச்சரவை பச்சைக்கொடி காட்டும் என்ற கருத்தில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்று டில்லி அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
இழுத்தடிப்பை மேற்கொண்டு வந்த பிரதமர் மன்மோகன் சிங் கொழும்பு மாநாட்டில் பங்கேற்கும் முடிவை எடுப்பதற்கு கீழ்வரும் காரணங்கள் ஏதுவாக அமைந்தன என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

அவற்றில்,

1) தெற்காசிய நாடொன்றில் பொதுநலவாய மாநாடு நடைபெறவுள்ள நிலையில், குறித்த வலயத்தில் பலம் பொருந்திய நாடான இந்தியா அதை புறக்கணிப்பதால் சர்வதேச ரீதியில் ஏற்படும் தாக்கங்கள்.

2) மாநாட்டை புறக்கணித்தால் இலங்கையில் காலூன்றும் சீனாவின் ஆதிக்கம் மேலும் தலைதூக்கும். இதனால் இந்தியாவுக்கு பொருளாதார ரீதியில் இழப்புகள் ஏற்படும் அபாயம்.

3) இலங்கை சம்பந்தப்பட்ட மாநாடு அல்ல. பொதுநலவாய அமைப்பின் மாநாடு. எனவே, அதன் அங்கத்துவ நாடாக இருந்து கொண்டு அதில் பங்கேற்காவிட்டால் எதிர்காலத்தில் ஏற்படும் சர்வதேச நெருக்கடிகள்.

4) இலங்கையுடன் அண்மையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள்.

இவையே பட்டியலில் முன்னிலையில் இருக்கும் காரணிகளாகும்.

அதேவேளை, கொழும்பு மாநாட்டுக்குச் சென்றால் தமிழகத்தில் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்கவும் சவுத் புளொக் பிரதமருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. அதாவது, இலங்கைப் பயணத்தின் போது யாழுக்கு முதலில் சென்று அங்கு கூட்டமைப்புடன் பேச்சு நடத்தினால் நெருக்கடிகளை ஓரளவேனும் சமாளிக்கலாம் என்பதே அந்த ஆலோசனை என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், பிரமதர் மன்மோகனின் பயண நிகழ்ச்சி நிரலை இந்தியா இன்னும் வெளியிடவில்லை. எது எப்படியிருந்த போதிலும், கொழும்பு மாநாட்டுக்கு மன்மோகன் வருவாரா? வரமாட்டாரா என்ற கேள்விக்கு, வருவார் என்ற பதில் தற்போது கிடைத்துள்ளது.

0 கருத்துக்கள் :