மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு: தாம்பரத்தில் ரெயில் மறியல்- பள்ளி மாணவர்கள் கைது

4.11.13

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்ற எதிர்ப்பு வலுத்து வருகிறது. தாங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் கூட்டமைப்பினர் சேப்பாக்கத்தில் இருந்து பிரசாரம் செய்தபடி தஞ்சை செல்ல முடிவு செய்தனர். இதனை நடிகர் சத்யராஜ் தொடங்கி வைப்பதாக இருந்தது.

இதற்காக சேப்பாக்கத்தில் மாணவர் கூட்டமைப்பினர் கார்த்திக் தலைமையில் திரண்டனர். தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த 14 பேரை கைது செய்தனர்.
இதில் பங்கேற்ற ராஜீவ் கொலை குற்றவாளி பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளும் கைது செய்யப்பட்டார்.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பில் பல்லாவரம் மறைமலை அடிகள் பள்ளி மாணவர்கள் 30 பேர் தாம்பரம் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அவர்களை தாம்பரம் போலீசார் கைது செய்தனர்.

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரில் விடுதலைப் புலிகளின் ஊடகப்பிரிவு நிகழ்ச்சி தொகுப்பாளர் இசைப்பிரியா மிக கொடூரமான முறையில் பாலியல் சித்ரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொடூர காட்சியை சேனல்–4 தொலைக்காட்சி வெளியிட்டது. இது அனைத்து தரப்பினரிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தமிழக முன்னேற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் அடையாறில் இன்று திடீர் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

ஆனாலும் தடையை மீறி தென்சென்னை மாவட்ட தலைவர் வேல்ராஜ் தலைமையில் மறியலில் ஈடுபட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கட்சி நிர்வாகிகள் குமார், பழனி உள்பட 75 பேர் கைது செய்யப்பட்டனர்.

0 கருத்துக்கள் :