முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பாதுகாப்பதும், பராமரிப்பதும் தமிழர் கடமை

15.11.13

தமிழினப் பேரழிப்பை 2009 இல் முடித்த கையோடு, தமிழர்களின் அடையாளங்களையும் தமிழர் தாயகத்தில் இருந்து சிங்களப் பேரினவாதம் துடைத்தழிக்கத் தொடங்கியது. மாவீரர் துயிலும் இல்லங்களைத் தகர்த்தழித்து, உலகத்தில் எந்தவொரு மனித இனமும் இதுவரை செய்யாதளவிற்கு, விதைக்கப்பட்ட மாவீரர்களின் கல்லறைகளுக்குள் இருந்த எலும்புகளையும் வெளியே வீசியெறிந்து மிகக்கேவலாமாக நடந்துகொண்டது.

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கான அடையாளங்களை மறைத்துவிட்டால், தமிழினத்தின் மீதான தங்களின் இன அழிப்பும் மறைந்து போய்விடும் என்று சிங்களப் பேரினவாதம் நம்புகின்றது. தமிழரின் விடுதலைக்கான போராட்டத்தின் எந்தவொரு அடையாளத்தையும் விட்டுவைக்க மாட்டோம் என்பதில் சிங்களப் பேரினவாதம் இறுமாப்போடு நிற்கும் அதேவேளை, தமிழினத்தின் விடுதலைக்கான அத்தனை அர்ப்பணிப்புக்களுக்கான அடையாளங்களையும் இருந்த இடம்தெரியாமல் அழித்து மறைத்துவிட்டு, தமது வெற்றிச் சின்னங்களை மட்டும் தமிழர்களின்
இரத்த ஆறு ஓடிய மண்ணெங்கும் நிறுவிவருகின்றது.


ஆனால், சிங்களத்தின் இந்தச் சிந்தனையில் பேரிடியாக வந்தமைந்துள்ளது முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம். நூற்றாண்டுகள் பல கடந்தும் சிங்களப் பேரினவாதத்தின் இன அழிப்பை சாட்சியமாக நின்று உலகிற்கு எடுத்துரைக்கப் போகின்றது இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்.

 இதனை ஆரம்பத்தில் சாதாரணமாக நினைத்தவர்கள் கூட, இன்று இதனைப் பிரமிப்போடு வியக்கின்றார்கள். தமிழர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை, அதற்காக தமிழினம் நடத்திய வீரம்மிக்க போராட்டத்தை, தமது விடுதலைக்காக தமிழினம் புரிந்த அர்ப்பணிப்புக்களை என்றும் அழிக்க முடியாத வரலாற்றின் கல்வெட்டுக்களாக இந்த நினைவு முற்றம் எழுந்து நிற்கின்றது.

அதனால்தான், இந்த நினைவு முற்றத்தை திறந்துவிடாமல் தடுப்பதற்கு சிங்களப் பேரினவாதம் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டது. தமிழின அழிப்பிற்குத் துணைபோன இந்திய மத்திய அரசு இந்த நினைவு முற்றத்தை திறக்கவிடாமல் தடுப்பதற்குக் களமிறங்கியது.
 வழக்கும் தாக்கல் செய்து, திறப்பு விழாவைத் தடுக்க முயன்றது. ஆனால், நீதிமன்றம் நீதியின் பக்கம் நின்று நேர்மையான தீர்ப்பை வழங்கியது. கொங்கிரஸ் ஆட்சியாளர்கள் மீண்டும் வழக்குகளைத் தாக்கல் செய்து, திறப்பு விழாவிற்கு முட்டுக்கட்டைகளைப் போட்டுவிடக்கூடும் என்ற நிலையில், திறப்பு விழாவிற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே அதனைத் திறந்துவைத்து, அவர்களின் திட்டங்களை தவிடுபொடியாக்கிவிட்டார் ஐயா பழ.நெடுமாறன்.

உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் தஞ்சாவூர் விளார் சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை மொழிப்போர் மறவர் ம.நடராசன் தலைமையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் கடந்த 6ம் திகதி புதன்கிழமை திறந்துவைத்திருக்கின்றார். அறிவித்ததுபோல் மூன்று நாள் நிகழ்வுகள் மிகவும் எழுச்சியோடு நடந்து முடிந்திருக்கின்றன.

தமிழீழ விடுதலைப் போருக்குக் கிடைத்த அரும்கொடைகளில் ஒருவர் ஐயா பழ.நெடுமாறன். கியூபாவின் விடுதலைக்கு சேகுவேரா எப்படியோ, தமிழீழ விடுதலைக்கு ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் அப்படி. தமிழினத்திற்காக பலமுறை சிறைகளுக்குள் அடைக்கப்பட்டும், இன்றுவரை எத்தனையோ வழக்குகளை எதிர்கொண்டும் சற்றும் மனம் தளராது உறுதியோடு உழைப்பவர். அவரின் கனவின் வெளிப்பாடுதான் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்.

நூற்றாண்டுகள் பல கடந்தும் நிலைத்து நிற்கும் வகையில் இந்த நினைவு முற்றத்தை மூன்றாண்டுகளுக்கு மேலாக களத்தில் நின்று அதன் உருவாக்கத்திற்காக கடுமையாக உழைத்திருக்கின்றார். “முள்ளிவாய்க்கால் போரில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ஈழத் தமிழர்கள் பதைபதைக்க படுகொலை செய்யப்பட்டனர். இந்தத் துயரச் சம்பவத்தை வருங்கால தலைமுறையினர்கள் அறிந்து கொள்வதற்காக தான் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது” என ஐயா பழ.நெடுமாறன் அவர்களே இது அமைக்கப்பட்டதன் நோக்கத்தை தெரிவித்துள்ளார்.

இந்த நினைவு முற்றம் நூற்றாண்டுகள் பல கடந்தும் நிலைத்துநின்று உலகத்திற்கு உண்மையை உரைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் தமிழினத்தின் எதிர்பார்ப்பும். இதனைக் கட்டியமைத்ததைவிட, இதனைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் அதிக செலவு காத்திருக்கின்றது. இதன் பராமரிப்புப் பணி என்பது மிகவும் கடினமானது. தலைமுறைகள் பல கடந்தும் எடுத்துச்செல்லப்பட வேண்டிய கடமை இது. இந்த நினைவுச் சிக்கத்தைத் தமிழர்கள் தங்கள் அடையாளமாகக் கருதவேண்டும். இதற்காகும் செலவுகளை உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பொறுப்பேற்கவேண்டும்.

‘தமிழினம் அழிவின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருக்கின்றது. இலங்கையில் தனித்துவம் பெற்ற தேசமாக வாழும் ஈழத்தமிழர்களுக்கு இன்று ஏற்பட்ட கதி நாளை மலேசியாவிலும், தென்னாபிரிக்காவிலும், பிற நாடுகளிலும் சிறுபான்மையினராக வாழ்ந்து வரும் தமிழர்களுக்கும் ஏற்படலாம். எனவே தமிழகத்தில் ஏழுகோடிக்கு மேற்பட்டவர்கள் வாழ்ந்தும் எமக்கு மிக அண்மையில் உள்ள இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட கொடிய அவலத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை அனைத்துத் தமிழர்களுக்கும் அரணாகவும் அவர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கவும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் உலகத்தமிழர்களும் தொடர்ந்தும் ஒன்றுபட்டுப் போராடவும் கை கோத்து நிற்க வேண்டும்.

இந்தியாவிலும் உலக நாடுகளிலும் உள்ள ஜனநாயக சக்திகள், சமத்துவ சிந்தனையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரை நம்முடன் இணைந்து குரல்கொடுக்க அவர்கள் அனைவரையும் நமக்கு ஆதரவாக ஒன்று திரட்டியாக வேண்டும். உலகத் தமிழர்கள் தமது கடமைப் பொறுப்பபுக்களையும் எதிர்காலத்தில் எதிர்கொள்ள இருக்கின்ற அபாயங்களையும் உணர்ந்து உடனடியாக செயல்பட வேண்டிய காலகட்டம் இதுவாகும்’ என முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திறப்பு நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் வாசித்த கொள்கைப் பிரகடனத்தில் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழினம் ஒன்றுபட்டு நின்றாலேயே எதனையும் சாதிக்க முடியும். தமிழனத்தை ஒன்றிணைக்கும் சக்தி இப்போது இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கே இருக்கின்றது.

நன்றி: ஈழமுரசு

0 கருத்துக்கள் :