இசைப்பிரியா தமிழ்ப்பெண்கள் மீதான சிங்களக்கொடூரங்களின் அடையாளம்!

2.11.13

சிங்கள தேசத்தின் கொடூர முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தும் இன்னொரு காணொளியை 'சனல் - 4' தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு என்ன நிகழ்ந்தது? என்பதற்கு இதற்கு மேலும் சாட்சிகள் தேவை இல்லை என்ற வெளிப்படுத்தல்களுக்குப் பின்னர் இந்த உலகம் ஈழத் தமிழர்களுக்கு வழங்கப் போகும் நீதி என்ன? என்பதுதான் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனித இனத்தின் கேள்வியாக இருக்கப் போகின்றது. 
இசைப்பிரியா என்ற தமிழ்ப் பெண் சிங்களப் படையினரால் சிதைக்கப்பட்டு, பின்னர் கொல்லப்பட்ட காட்சி, மிகத் துல்லியமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னர் வெளிவந்த காணொளிக் காட்சிகள் போன்று இந்தக் காட்சி கைத் தொலைபேசியினால் ஏதேதோ காரணங்களுக்காகப் பிடிக்கப்பட்டதல்ல. கைதேர்ந்த களமுனைப் படப்பிடிப்பாளரால் அசையாமல் பொருத்தி வைக்கப்பட்ட தொழில் வீடியோ கமெராவினால் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இது, இறுதிப் போர் நிகழ்வுகளைப் படம்பிடிக்க சிங்கள அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட ஊடகப் படப்பிடிப்பாளாகளால் முழுமையாகக் காட்சிப்படுத்தப்பட்ட காணொளி ஒன்றின் சிறு காட்சியாக இருக்கும் என நம்பப்படுவதால், இன்னமும் கோரமான பதிவுகள் நிச்சயம் 'சனல் - 4' இடம் இருக்கலாம் என்பது உறுதிப்படுகின்றது. 
இந்தக் காட்சிகள் பதிவு செய்யப்பட்ட இடம் யுத்தம் நடைபெறாத வெட்டைவெளிப் பிரதேசமாக இருப்பதனால், இசைப்பிரியா சிங்களப் படையினரால் மக்கள் நடமாட்டம் இல்லாத வெட்டை வெளி ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மிகக் கொடூரமான பாலியல் சித்திரவதைகளின் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகின்றது. இத்தகைய கொடூரங்கள் இசைப்பிரியாவுக்கு மட்டும் நிகழ்ந்தது என்பதல்ல. இந்தக் காணொளி மூலம் இசைப்பிரியா தமிழ்ப் பெண்கள்மீதான சிங்களக் கொடூரங்களின் அடையாளமாக உலகின் மூன் நீதி கேட்டு நிற்கின்றார். 
'சனல் - 4' வெளியிட்டுள்ள இந்தப் புதிய காணொளிக் காட்சியையும் சிங்கள இராணுவம் நிராகரித்துள்ளது. 
'இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் நிராகரிக்கின்றோம். அடிப்படையற்றக் குற்றச்சாட்டுக்கள் அவை. இசைப்பிரியா என்பவர் விடுதலைப்புலிகளின் ஆயுதப்பயிற்சி பெற்ற லெப்டினன் கர்ணல் தரத்திலுள்ள போராளி. புலிகளின் தொலைக்காட்சியிலும் தீவிரமாக இயங்கியவர் என்று எங்களுக்குத் தெரியும். ஒருபோதும் அவரோ வேறுயாருமோ உயிரோடு பிடிபடவில்லை. வீடியோவில் அந்தப் பெண்ணைத் தான் காட்டுகிறார்களா அல்லது யாரையாவது நடிக்க வைத்திருக்கிறார்களா என்று எங்களுக்கு தெரியவில்லை. இது நடிப்பாகக் கூட இருக்கலாம். இந்த வீடியோவை தொழிநுட்ப ரீதியில் ஆராய்ந்துபார்க்க வேண்டும். இந்த வீடியோ ஒரு நாடகம் என்றுதான் நாங்கள் கருதுகிறோம்' என்று சிங்கள இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். 
ஏற்கனவே, இதுவரை வெளிவந்த ஈழத் தமிழினத்தின்மீதான போர்க் குற்ற ஆதாரங்கள் அனைத்தையும் சிங்களப் படைகளும், சிங்கள ஆட்சியாளர்களும் இதுபோன்றே நிராகரித்தும், மறுத்தும் வந்திருக்கிறார்கள். 
'சனல் - 4' வெளியிட்டுள்ள இந்தப் புதிய போர்க் குற்ற ஆதாரம் இந்திய அரசியலில் பெரும் அதிர்வினைத் தோற்றுவித்துள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் ஆட்சியாளர்கள்மீதான தமிழக மக்களது அதிருப்தி உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கும், மனித குலத்திற்கெதிரான குற்றங்களுக்கும் சிங்கள ஆட்சியாளர்கள் போலவே, காங்கிரஸ் கட்சிக்கும் சம பங்கு உள்ளது என்று தமிழக ஊடகங்கள் அறிக்கையிட்டு வருகின்றன. 
கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளக் கூடாது என்ற தமிழகத்தின் உணர்வலைக்கு மறுப்புத் தெரிவிக்க முடியாத நிலையில் இருந்த தமிழக காங்கிரஸ் கட்சி, தற்போதைய காணொளிக் காட்சியினால் பலமான சிதைவினை எதிர்கொண்டுள்ளது. கொழும்பு மாநாட்டிற்குப் பிரதமர் மன்மோகன் சிங் செல்வாரோயானால், தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இனி எதிர்காலமே இல்லை என்ற நிலை உருவாகி வருவதனால், ஜி.கே.வாசன் தலைமையில் மீண்டும் தமிழக காங்கிரஸ் கட்சி உருவாக்கப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழகத்தில் காங்கிரஸ் வாக்கு வங்கியைத் தக்க வைப்பதற்கான காங்கிரஸ் கட்சியின் தந்திரோபாயமாகவே இந்த நகர்வும் நோக்கப்படுகின்றது. 
பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ள வேண்டும் என்ற காங்கிரஸ் வாதத்திற்கு வட மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனின் வார்த்தைகளே கேடயமாகப் பயன்படுத்தப்படுகின்றது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்ற முதல்வர் விக்னேஸ்வரனின் கருத்தும், மன்மோகன் சிங் யாழ்ப்பாணத்திற்கு வரவேண்டும் என்ற அவரது பிந்தைய அழைப்பும் தமிழகத்தின் உணர்வலைக்கு எதிரான போராயுதமாக காங்கிரஸ் கட்சியினரால் பயன்படுத்தப்படுகின்றது. விக்னேஸ்வரனின் கருத்தை தமிழீழ மக்களது கருத்தாகப் பிரச்சாரப் படுத்துவதன் மூலம், இந்திய ஆட்சியாளர்கள் தாம் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதை நியாயப்படுத்த முனைகின்றார்கள். 
வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் வயதும், அறிவும் அவர் பயன்படுத்தும் வார்த்தைகளால் புனிதப்பட வேண்டும். மாறாக, எதிரிகளுக்கான போர்க் கவசமாக மாறும் நிலை இனிமேலும் உருவாகாமல் பார்த்துக் கொள்வதே காட்சிகளுக்குள்ளும் வராமல் புதைந்துபோன இசைப்பிரியாக்களுக்கான அவரது அஞ்சலியாக இருக்கும். 
- சுவிசிலிருந்து கதிரவன்

0 கருத்துக்கள் :