காமன்வெல்த் மாநாட்டுக்கு போலாமா...? வேண்டாமா?

9.11.13

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, இலங்கை காமன்வெல்த் மாநாட்டில், இந்தியாவின் சார்பில், பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க, காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு, நேற்று ஒப்புதல் அளித்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த விவகாரத்தில், இன்னமும் விவாதிக்க வேண்டியிருப்பதாக கூறி, அதிகாரப்பூர்வ அறிவிப்பை, காங்கிரஸ் கட்சி தள்ளி வைத்துள்ளது. இதனால், இந்த விவகாரத்தில், "சஸ்பென்ஸ்' நீடிக்கிறது.

இலங்கை தலைநகர் கொழும்பில், வரும், 15ம் தேதி துவங்கி, 17ம் தேதி வரை, காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடக்கிறது. காமன்வெல்த் அமைப்பில், இடம் பெற்றுள்ள இந்தியா சார்பில், இம்மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ள, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

"இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள், தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டித்து, இந்த மாநாட்டை, இந்தியா புறக்கணிக்க வேண்டும்' என, தமிழக கட்சிகள் எதிர்ப்புக்குரல் எழுப்பி வருகின்றன. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன், தமிழக சட்டசபையிலும், இதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த, 21 தமிழ் அமைப்புகள் இணைந்து, "இலங்கைக்கு, இந்தியா சார்பில், பிரதமரோ அல்லது இந்திய பிரதிநிதியோ செல்லக் கூடாது' என்பதை வலியுறுத்தி, வரும், 12ம் தேதி, "பந்த்' நடத்த அழைப்பு விடுத்துள்ளன.
இப்பின்னணியில், பிரதமரின் இலங்கை பயணத் திட்டம் குறித்துவிவாதிக்க, காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு, டில்லியில் நேற்று கூடியது. காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில், அவரது வீட்டில் நடந்த கூட்டத்தில், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக, விவாதம் நடந்தது. "உள்நாட்டு அரசியல் நிர்ப்பந்தங்களுக்காக, இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையை மாற்றியமைக்க இயலாது; அண்டை நாடுகளுடனான நட்புறவை வளர்க்கும் விதமாக, இலங்கை மாநாட்டில், பிரதமர் பங்கேற்க வேண்டும்' என, வெளியுறவு அமைச்சகம் அளித்துள்ள பரிந்துரையே, விவாதத்தில் முக்கிய இடம் பிடித்தது.

உயர்மட்டக் குழுவில் உள்ள, மத்திய அமைச்சர்களுக்கு இடையே, இதுதொடர்பாக கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. அதையடுத்து, வெளியுறவு அமைச்சகமும், பிரதமர் அலுவலகமும் ஆலோசித்து, இந்தவிவகாரத்தில் எடுக்கும் முடிவை ஏற்பது என்றும், இலங்கை மாநாட்டில் பிரதமர் பங்கேற்க, உயர்மட்டக் குழுவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, கூறப்படுகிறது.

ஆனாலும், அதை வெளியிடாமல், " சஸ்பென்ஸ்' ஆக, உயர்மட்டக் குழு கலைந்தது. இப்போதே, முடிவை வெளியிட்டால், எதிர்ப்பு போராட்டங்கள் வலுவடையும். அதை தவிர்க்கவும், சர்ச்சையை தடுக்கவும், 14ம் தேதி, அதாவது, மாநாடு துவங்குவதற்கு முன்தினம், மத்திய அரசு தனது நிலையை அறிவிக்கும் என, காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்தது.

0 கருத்துக்கள் :