வன்னியில் கார்த்திகைப் பூக்களை அழிக்கும் படையினர்

23.11.13

வன்னியில் கார்த்திகைப் பூமரங்களை அழிக்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து இலங்கை அரச படையினருக்கு எதிராக போரிட்டு மாய்ந்தவர்களை நினைவுகூறும் மாவீரர் வாரத்தை முன்னிட்டே படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

கார்த்திகை மலரை தமிழீழத்தின் தேசிய மலராக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். மாவீரர் வாரம் வரும் கார்த்திகை மாதத்திலேயே இந்தப் பூக்கள் அதிகமாக பூக்கின்றன. வன்னிப் பிரதேசம் எங்கும் இந்தப் பூக்கள் பூத்திருப்பதைக் காணமுடியும். இந்தப் பூக்களின் ஊடாகவும் மாவீரர்களை அவர்களது உறவினர்கள் நினைவுகொள்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக வன்னியில் ரோந்து செல்லும் படையினர் வயல் கரைகளில் உள்ள கார்ததகைப் பூமரங்களை பூக்களுடன் பிடுங்கி எறிவதை காண முடிகின்றது. உருத்திரபுரம் பகுதியிலும் பரந்தன், ஆனையிறவு போன்ற இடங்களிலும் இவ்வாறு இராணுவத்தினர் கார்த்திகைப் பூமரங்களை அழித்து வருகின்றனர்.

துயிலும் இல்லங்களில் மாவீரர்களின் கல்லறைகளை அழித்து இலங்கைப் படையினர் முகாமிட்டுள்ள நிலையில் கார்த்திகை மாதத்தில் பூக்கும் கார்ததிகைப் பூக்களை தமது மாவீரர்களாக மக்கள் நினைவுகூர்ந்தனர். அதன் காரணமாகவே கார்த்திகை மலர்களை படையினர் அழித்து வருகின்றனர். எனினும் கார்த்திகைப் பூமரங்களை எளிதாக அழிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :