காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது பற்றி பிரதமரே முடிவு செய்வார்: காங்கிரஸ்

5.11.13

இலங்கை தலைநகர் கொழும்பில் காமன்வெல்த் நாட்டு தலைவர்களின் மாநாடு, 15-ந்தேதி தொடங்குகிறது. இறுதிக்கட்ட போரில், தமிழர்கள் கொல்லப்பட்டதை கண்டிக்கும் வகையில், இம்மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளக்கூடாது என்று தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தி உள்ளன. மாநாட்டை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என்று பிரதமர் மன்மோகன்சிங்கிடம் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் நேரில் வலியுறுத்தினார். மத்திய மந்திரிகள் வி.நாராயணசாமி, ஜெயந்தி நடராஜன் ஆகியோரும் இதே கருத்தை தெரிவித்தனர்.

இந்நிலையில், இப்பிரச்சினையில் முதல்முறையாக காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் மீம் அப்சல் கூறியதாவது:-

இது ஒரு உணர்வுப்பூர்வமான பிரச்சினை. இதுபோன்ற பிரச்சினைகளில், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தித்தான், எங்கள் நிலைப்பாட்டை இறுதி செய்வோம். அரசின் நிலைப்பாடுதான் எங்களின் நிலைப்பாடு.

எனவே, காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது பற்றிய முடிவை பிரதமரிடமே விட்டுவிடுகிறோம். அவரே முடிவு எடுப்பார். நாங்கள் கருத்து சொல்வது சரியல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துக்கள் :