தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு சரியா? தவறா??

18.11.13

இலங்கைத் தலைநகர் கொழும்பில் காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. கனடா, மோரீஷஸ் ஆகிய நாடுகளின் பிரதமர்கள் கலந்துகொள்ளவில்லை.

இலங்கையில் நடந்த இனப்படுகொலையையும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த போரின்போது அரங்கேற்றப்பட்ட மனித உரிமை மீறலையும் கண்டித்து, அதற்காக காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பதாக வெளிப்படையாகவே அறிவித்தனர் கனடா, மோரீஷஸ் பிரதமர்கள். இந்தியப் பிரதமர் அப்படி அறிக்கை எதுவுமே வெளியிடாமல், தனக்கு பதிலாக வெளியுறவுத் துறை அமைச்சரைப் பங்கேற்க அனுப்பி வைத்து, தமிழக அரசியல் கட்சிகளுக்குத் தலையையும், இலங்கை அரசுக்கு வாலையும் காட்டி நழுவி இருக்கிறார்.

ஒன்று, புறக்கணித்த ஏனைய இரண்டு பிரதமர்களையும்போல, துணிவுடன் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறலுக்குக் கண்டனம் தெரிவித்து, சர்வதேச விசாரணை கோரியிருக்க வேண்டும். அல்லது, உள்நாட்டு எதிர்ப்பையும் மீறி, இலங்கைக்குச் சென்றிருக்க வேண்டும். பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனைப் போல, யாழ்ப்பாணம், முல்லைத் தீவு, திரிகோணமலை பகுதிகளுக்குச் சென்று, அங்கேயுள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, கொழும்பில் நடந்த காமன்வெல்த் மாநாட்டிலும், இலங்கை அதிபர் ராஜபட்சவிடம் நேரிலும் பிரச்னைகளை எழுப்பி, அதை விவாதப் பொருளாக்கி இருக்க வேண்டும்.

தமிழக அரசியல் கட்சிகள் கூறுவதைப் போல, இந்தியா ஒட்டுமொத்தமாக இலங்கையைப் புறக்கணித்துவிட முடியாது; கூடாது. இந்தியாவின் பல்லாயிரம் கோடி ரூபாய் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக இலங்கை அரசிடம் தரப்பட்டிருக்கும் நிலையில், அந்தப் பணம் முறையாக நம்மவர்களுக்காகச் செலவிடப்படுகிறதா இல்லை தென் இலங்கையை வளப்படுத்த பயன்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டிய கடமை பிரதமருக்கு உண்டு. வடக்கு மாகாணத்தில் புதிதாகப் பதவி ஏற்றிருக்கும் விக்னேஸ்வரன் அரசின் முதல் விருந்தாளியாக பிரதமர் மன்மோகன் சிங் போயிருந்தால், அதில் தவறுகாண எதுவும் இல்லை. ஆனால் இந்தியாவின் எதிர்ப்பை வலிமையாகப் பதிவு செய்திருக்க வேண்டும்.

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு வட மாகாணத்துக்கு விஜயம் செய்த முதல் வெளிநாட்டுப் பிரதமர் என்கிற பெருமையைத் தட்டிக் கொண்டது, ஒரு புறம் இருக்கட்டும். அங்கிருந்த மக்களை சந்தித்தார். வடக்கு மாகாண முதல்வரையும் சந்தித்தார். இலங்கை அதிபர் ராஜபட்சவையும் சந்தித்தார். உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கொழும்பில் பத்திரிகையாளர்களிடமும், அதிபர் ராஜபட்சவிடமும் வெளிப்படையாக வற்புறுத்திவிட்டு நாடு திரும்பி இருக்கிறார்.

காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டாக வேண்டும் என்றோ, அப்படியே கலந்து கொள்வதாக இருந்தாலும் பிரதமர்தான் கலந்து கொள்ள வேண்டும் என்றோ கட்டாயம் எதுவும் இல்லை. இலங்கையில் நடந்தேறிய மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கவும், இனப்படுகொலையைக் கண்டிக்கும் விதத்திலும் இந்தியா காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணித்திருந்தால் அதில் தவறேதும் இல்லை. கனடாவும், மோரீஷஸூம் எதிர்ப்புத் தெரிவிக்குமானால், பிரச்னையுடன் தொடர்புள்ள இந்தியா புறக்கணிப்பதில் என்ன தவறு?

தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு சரியா தவறா என்பதல்ல கேள்வி. இந்தியா ஒரு கூட்டமைப்பாக இருக்கும் நிலையில் மாநில உணர்வுகளுக்கு மதிப்பளித்தாக வேண்டும் என்பதுதான் உண்மை நிலைமை. இலங்கையைப் பகைத்துக் கொள்ள முடியாது என்பதற்காக, இலங்கையில் நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்க்க வேண்டும் என்பதல்ல ராஜதந்திரம். நமது கோரிக்கைகளுக்கு இலங்கை செவி சாய்க்க வைக்க உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தால் முடியவில்லை என்று சொன்னால் கேவலம்.

நமது பிரதமர் வடக்கு மாகாணத்திற்குப் போயிருக்க வேண்டும். நமது செலவில் இலங்கையில் நடக்கும் வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்த்திருக்க வேண்டும். அது அந்த மக்களுக்குத் தன்னம்பிக்கையை அளித்திருக்கும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதுதான் புத்திசாலித்தனம். பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாததில் எனக்கும் வருத்தம்தான்'' என்று பேசியிருக்கிறார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்.

இலங்கையில் நடந்த இனப் படுகொலைக்காகவும், போரின்போது நடந்த மனித உரிமை மீறல்களுக்காகவும் சர்வதேச விசாரணை வேண்டும் என்கிற கோரிக்கையை இந்தியா ஏற்கிறதா இல்லையா என்கிற கேள்விக்கு இதுவரை தெளிவான பதில் தரப்படவில்லை.

அதிபர் ராஜபட்சவுக்கு ஒரு ஆலோசனை- இலங்கைக்கு என்று தனியாக ஒரு வெளிவிவகார அமைச்சர் தேவையில்லை. அந்த வேலையை சல்மான் குர்ஷித் திறம்படச் செய்கிறார்!
நன்றி : தினமணி 18 November 2013

0 கருத்துக்கள் :