மன்மோகன்சிங் பயணத்துக்கு எல்லா ஏற்பாடுகளும் தயார் - விமானத்தில் ஏறுவது தான் மிச்சம்

4.11.13

கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக இந்திய அரசாங்கம் இன்னமும் முடிவெடுக்காத நிலையில், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கொழும்பு செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக, இந்திய ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் எதிர்ப்புகளையும் மீறி, கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் முடிவு செய்தால், அவர் கொழும்பு செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“இரண்டு முன்னேற்பாட்டுக் குழுக்கள் சிறிலங்கா சென்று அங்கு இந்தியப் பிரதிநிதிகளுக்கான பாதுகாப்பு மற்றும் தங்குமிட வசதிகள் குறித்து ஆராய்ந்துள்ளன.

கொழும்பில் தங்கு விடுதிகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன.
தற்போது, விமானத்தில் ஏறுவது தொடர்பான இறுதி அழைப்பை இந்தியப் பிரதமர் மற்றும் அரசியல் தலைமை விடுப்பது தான் எஞ்சியுள்ளது.” என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

கொமன்வெல்த் மாநாட்டில், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்க வேண்டும் என்றும், கொழும்புடன் பேச்சு நடத்த வேண்டிய தேவை உள்ளதாகவும், இந்திய வெளிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வை வலியுறுத்தவும், கொழும்புடன் ஏற்பட்டுள்ள இடைவெளியைக் குறைக்கவும் இந்தியப் பிரதமரின் பயணம் உதவும் என்றும் சவுத் புளொக்கில் உள்ள இந்திய இராஜதந்திரிகள் நம்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

0 கருத்துக்கள் :