இசைப்பிரியாவின் குரல்மொழி கேட்கின்றதா..? .?.?.?.?.?

2.11.13

இந்த நிமிடம் மனதில் தோன்றி மறையும் எண்ண அலைகளின் வீச்சை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.  இசைப்பிரியா....! காற்றிலாடும் கொடியாய் கண்முன்னே தோன்றி மறைகின்றது இசைப்பிரியாவின் உருவம். 


கிளிநொச்சி வீதிகளில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இசைப்பிரியாவின் தோற்றமே மனதில் நிலை பெற்றுவிட்டது. சிங்களக் காமுகப் படைகளால் சீரழிக்கப்பட்டு பிணமாக வீழ்த்தப்பட்டிருந்த காட்சிகள் ஏற்படுத்திய வலியைவிட இன்று ஏற்பட்ட காயத்தை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை.

உடல் மொழியில் கூட அடுத்தவரை அச்சுறுத்தும் தொனியற்று பெயரிற்கேற்றாற்போல நடமாடிய எங்கள் சகோதரி இசைப்பிரியாவின் இறுதி நிமிடங்கள் ஆன்மாவை அசைத்துவிட்டன.

சிங்கள மிருகங்கள் நிர்வணப்படுத்தி அழைத்துச் செல்லும் சகோதரி இசைப்பிரியாவின் இறுதி நிமிடங்களை பார்த்தால் எண்ணங்கள் தறிகெட்டு அலைமோதுகின்றது. எதையும் செய்துவிட முடியாத கையறுநிலையை எண்ணி உள்ளம் குமுறுகின்றது.

ஒட்டுமொத்த தமிழினத்தின் விடுதலைக்காகத்தானே போராடினோம். ஏன் எம்மை கைவிட்டீர்கள்....? என்னை இந்தக் கோலத்தில் பார்ப்பதற்காகவா கனத்த மௌனத்தோடு இறுதி யுத்தத்தில் எத்தனை தமிழர்களது தலைகள் சாய்க்கப்படுகின்றது என எண்ணிக் கொண்டு இருந்தீர்களா....? என செவிப்பறைகள் அதிர சகோதரி இசைப்பிரியா கேட்பது எனக்கு கேட்கின்றது. அருமைத் தமிழ் உறவுகளே உங்களிற்கு கேட்கிறதா....?

குறிப்பாக இந்தியாவில் இருக்கும் ஒன்பது கோடி தமிழர்களிற்கு கேட்கின்றதா....? நீங்கள்தான் பாத்திரவாளிகள். உங்கள் திருநாடான பாரத தேசமே அனைத்துக்கும் மூல காரணம். அதனை அனுமதித்தது உங்கள் மௌனம்.

அன்று மட்டுமல்ல இன்றும் கூட ஒன்றுதிரள மறுக்கின்ற உங்கள் வறட்டுக் கௌரவம்தான் சகோதரி இசைப்பிரியாவை நிர்வான உடலாக்கி உலக தரிசனம் செய்ய வைத்துள்ளது.

இன்னும் எத்தனை எத்தனை கொடுமைகளை பார்க்க இருக்கின்றோமோ.....?

தயவு செய்து யாரையும் குற்றவாளியாக்கவோ, சபிக்கவோ முற்பட்டு உங்கள் கடமையை தட்டிக்கழித்துவிடாதீர்கள். மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் சபதமேற்க வேண்டும். இந்த அக்கிரமத்திற்கு காரணமானவர்களை தண்டிப்போம் என உறுதியேற்றுக் கொள்ளுவோம்.

இசைப்பிரியா உள்ளிட்ட பெண்போராளிகள் சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்ட புகைப்பட்ங்கள் முன்னர் வெளிவந்தபோது சந்தித்த பெண் போராளிகளது ஆதங்கம் நினைவிற்கு வருகின்றது.

அண்ணை(தலைவர்) அண்டைக்கு தலையிடாட்டி அவங்களிற்கு நடக்கிறதே வேற… கடல் சண்டை ஒன்றில் கைது செய்யப்பட்ட சிங்கள கடற்படை சிப்பாய்களை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என்ற தலைமையின் கட்டளைக்கமைய தமது ஆத்திரங்களை அடக்கிக் கொண்டு அவர்களை கரையில் கொண்டுவந்து ஒப்படைத்த நிகழ்வு குறித்தே அப்போது ஆத்திரத்துடன் ஆதங்கப்பட்டனர் அந்தப் பெண்புலிகள்.

போரில் சிக்கிய இராணுவத்தினரை போர் மரபிற்கிணங்க மனிதாபிமானத்தோடு நடத்திய விடுதலைப் புலிகளின் செயல் இப்படியான சந்தரப்பங்களில் எம்மாலேயே ஏற்றுக்கொள்ள முடியாது போகின்றது.

தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர்-சுப.தமிழ்ச்செல்வன் அண்ணாவின் ஆறாவது ஆண்டு நினைவு நாள் நளை என்றாலும் கடந்த சில நாட்களாகவே அவரது நினைவுகள் என் சிந்தையில் இடையூறுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கையில் இன்று சகோதரி இசைப்பிரியாவின் அந்தரித்த கோலத்தைபார்து வெஞ்சினம் ஏற்படுகின்றது.

என்ன செய்வது எங்களது கைகள் கட்டப்பட்டுக் கிடக்கின்றனவே. என்ன செய்யச்சொல்கின்றீர்கள்…? நீதியை நீங்கள் தருகின்றீர்களா…? தர மறுப்பீர்களேயானால் அழுதுவடித்த முகத்தோடு மூலையில் முடங்கிக்கிடப்போம் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். 

ஏய் சர்வதேசமே! உன் மௌனத்தை கலைத்து சாட்டையைக் கையிலெடு தாமதமின்றி. தமிழினப் படுகொலைக் குற்றவாளிகளை தண்டிக்க நீ தயங்கினால் வரலாற்று வழியில் மீண்டும் எம் கையில் அந்தப் பொறுப்பை ஏற்கத் தயங்கமாட்டோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
 ம.செந்தமிழ்

0 கருத்துக்கள் :