நாடாளுமன்றம் வரை சென்ற புலிகளின் ஆவிகளின் உரை: ஜாதிக ஹெல உறுமய

28.11.13

மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

விடுதலைப் புலிகளின் மாவீரர்களை நினைவு கூருவது மற்றும் நினைவு நிகழ்வுகளை நடத்துவது சட்ட விரோதமானது என பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளதால், புலிகளை நினைவு கூர்ந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தி தண்டனை வழங்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் மாவீரர் தினத்தை முன்னிட்டு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிரிழந்த புலிகளின் உறுப்பினர்களுக்கான நினைவிடங்களை அமைக்கவும் மலர் அஞ்சலி, தீபம் ஏற்றுதல், பிரபாகரனின் புகைப்படத்தை காட்சிக்கு வைத்தல், புலிச்சின்னம், புலிக்கொடி ஆகியவற்றை காட்சிப்படுத்த முயற்சிகளை மேற்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவற்றை இன்று நாடாளுமன்றம் வரை கொண்டு வந்துள்ளது.

யாழ்ப்பாணம், கரவெட்டி பிரதேச சபையிலும் உயிரிழந்த புலிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் சிகப்பு மற்றும் மஞ்சள் நிற பூக்களை கொண்டு வழிப்பாடுகளை நடத்தியுள்ளனர்.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு நான்கு வருடங்கள் கழிந்துள்ள நிலையில் விடுதலைப் புலிகளின் ஆவிகளின் மாவீரர் உரையானது கரவெட்டி பிரதேச சபையில் இருந்து நாடாளுமன்றம் வரை எதிரொலித்தமை தொடர்பில் அரசாங்கம் இதனை விட கூடிய கவனத்தை செலுத்த வேண்டும்.

புலிகளின் அரசியல் முன்னணி, புலிகளின் சர்வதேச முன்னணி மற்றும் அவர்களின் ஒத்துழைப்பு முன்னணி என்பவற்றைதோற்கடிக்க அரசாங்கம் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் மறைந்திருக்கும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் வெளியில் வரும் காலம் வெகு தூரத்தில் இருக்காது என்றார்.

0 கருத்துக்கள் :