காமன்வெல்த் பட்டியலில் இலங்கையை நீக்க வேண்டும்

12.11.13

சட்டசபை அவசர கூட்டத்தில், ‘காமன்வெல்த் மாநாட்டில் பெயரளவில்கூட இந்தியாவில் இருந்து யாரும் கலந்துகொள்ளக்கூடாது’ என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானத்தை தே.மு.தி.க. வரவேற்றுள்ளது.

தே.மு.தி.க. சார்பில் அக்கட்சியின் கொறடா சந்திரகுமார் பேசியதாவது:–

மாமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை தே.மு.தி.க. ஆதரிக்கிறது. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு பிரதமர் செல்லக்கூடாது, இந்தியாவில் இருந்து ஒரு துரும்புக்கூட செல்லக்கூடாது என்பதுதான் மாமன்றத்தின், உலக தமிழர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு தண்டனை கொடுப்பதற்கு பதிலாக ரிவார்டு கொடுக்கும் அளவுக்கு மத்திய அரசு வக்காலத்து வாங்குகிறது. இலங்கை தமிழர்கள் பிரச்சினையை காரணம் காட்டி 400க்கு மேற்பட்ட தமிழக மீனவர்களையும் கொலை செய்ததுடன், பிடித்த படகுகளையும் இலங்கை அரசு நாட்டுடமையாக்கியுள்ளது. இது இந்திய அரசின் கையாளாகாத தனத்தை காட்டுகிறது.

இலங்கையில் இனப்படுகொலை நடந்தது மட்டுமல்ல, மனித உரிமை மீறல்களும் அங்கு நடந்துள்ளது. உலகில் இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்ட நிலை யாருக்கும் ஏற்படக்கூடாது என பிரார்த்திக்கிறோம். காமன்வெல்த் மாநாட்டை காரணம் காட்டி பல்லாயிரம் கோடி முதலீடு இலங்கைக்கு கிடைக்க போகிறது. இதற்கான வாய்ப்பை இந்தியா ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

காமன்வெல்த் மாநாடு பட்டியலில் இருந்து இலங்கையை நீக்க நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாக போராட்ட வேண்டும். அதற்காக இந்த அரசு எப்படிப்பட்ட நடவடிக்கை எடுத்தாலும் தே.மு.தி.க. ஆதரவு அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துக்கள் :