பா.உ.சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்தில் இராணுவ புலனாய்வாளர்கள் மிரட்டல்!

5.11.13

காவல்துறை உடை அணிந்த ஒருவர் அடங்கலாக ஒன்பது பேர் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக் காரியாலயத்திற்கருகில் இன்று இரவு 10:00 மணியளவில் குவிந்துள்ளனர்.

குறித்த இடத்திற்கு வந்த காவல்துறை ஒருவர் மற்றும் எட்டு இராணுவப் புலனாய்வாளர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நீண்ட நாள் செயற்பாட்டாளரான மத்தியாஸ் (76) என்பவர் உறங்கிக் கொண்டிருந்த வேளை மிரட்டும் வகையில் அவரிடம் உங்கள் பாராளுமன்ற உறுப்பினர் எங்கே? அவர் இந்தியா செல்கிறாரா? என மிரட்டியதாகவும் வந்தவர்கள் தாங்கள் வந்த வாகனத்தை விட்டு கீழ் இறங்காமல் இவ்வகையான செயற்பாட்டைச் செய்ததுடன் மிரட்டிவிட்டு சென்றதாகவும் தான் இதனை சிறிதரன் பா.உவிடம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் வினவிய போது,
இராணுவப் புலனாய்வாளர்களும் காவல்துறையினரும் இரவில் எனது அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய தேவை இல்லை, என்பதுடன் இவ்வாறு வருவது என்பது எம்மையும், எமது மக்களுக்கான செயற்பாடுகளையும் மிரட்டுவதற்கு என்பது மட்டும் புலப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில், இது தொடர்பில் தமக்கு தெரியாது என கூறினார், இவ் விடயம் தொடர்பாக தமது கட்சித் தலைமை இரா.சம்பந்தனுக்கு விளக்கவுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி முதல் யாழில் மாபெரும் அறவழிப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அறிவித்திருந்ததுடன் நாளைய தினம் பாராளுமன்ற அமர்வில் பங்கு பற்றுவதற்கு கொழும்பு சென்றுள்ள நிலையில் இவ்வாறான மிரட்டல் இராணுவப் புலனாய்வாளர்களால் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துக்கள் :