இனி முற்றத்தின் மீது ஒருகல் விழுந்தால் கூட கோட்டையை நொறுக்கி விடுவோம்: வைகோ

17.11.13

விழுப்புரம் தெற்கு மாவட்ட ம.தி.மு.க. நிதி அளிப்பு கூட்டம் கள்ளக்குறிச்சி வி.ஏ.எஸ். திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அவரிடம் விழுப்புரம் தெற்கு மாவட்டம் சார்பில் ரூ. 11 லட்சம் தேர்தல் நிதியை ஒன்றிய, நகர நிர்வாகிகள் கொடுத்தனர். இதை பெற்றுக்கொண்ட வைகோ பேசியதாவது:–

இந்த நிதி அளிப்பு கூட்டத்தில் தெற்கு மாவட்டம் சார்பில் ரூ.11 லட்சம் வழங்கப்பட்டது. ஆனால் பிற கட்சிகள் கோடான கோடி பணத்தை தேர்தலுக்காக செலவு செய்யும் நிலையில், இந்த தொகையை வைத்து எப்படி சமாளிக்கப்போறீர்கள் என்று நீங்கள் யோசிக்கலாம். சிறு உளிதான் பெரும் மலையை உடைக்கிறது.
 நான், திராவிட கழகத்தில் அடிமட்டத்தில் இருந்து வந்தேன். நாம், நிதி கேட்டால் யார் தரப்போகிறார்கள் என்று சிலர் கேட்கவில்லை. தேர்தல், கட்சி நடத்துவதற்கு நிதி கேட்டால் மக்கள் தருவார்கள்.

 காமன்வெல்த் மாநாட்டை எதிர்த்து கடை அடைப்பு போராட்டம் கடந்த 12–ந் தேதி நடந்தது. இதில் தமிழகத்தில் உள்ள 21 அமைப்புகளும் ஆதரவு தெரிவிக்கவில்லை. நான் மட்டும் ஆதரவு தெரிவித்து, கடையடைப்புக்கு கேட்டுக்கொண்டேன். அதை ஏற்று ஆயிரக்கணக்கான கிராமங்களில் 100–க்கு 100 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டது.

 இந்த இயக்கத்தை (ம.தி.மு.க.) 20 ஆண்டுகளாக நடத்திக்கொண்டு வருகிறேன். இனிவரும் காலங்களில் பலமான கட்சிகளுடன் மோதி கட்சி நடத்தவேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். எனவே கட்சி நிர்வாகிகள் கடுமையாக உழைக்கவேண்டும். உழைக்காதவர்கள் பதவியில் இருந்து விலகிக்கொள்ளவேண்டும். கொள்கையை நேசிப்பவர்கள் போராட வரவேண்டும்.

தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பதை தெரிந்த நான், எனது சொந்த நிகழ்ச்சியை கூட பார்க்காமல் உடனடியாக சென்றேன். அங்கு 500 போலீசார் யாரையும் உள்ளே விடாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். என் உயிரே போனாலும் சரி என்று, அவர்களை மீறி உள்ளே நுழைந்தேன். முதல்–அமைச்சர் போட்ட முற்றுகையை வைகோ பட்டாளம் உடைத்து உள்ளே சென்றது. இனி முற்றத்தின் மீது ஒருகல் விழுந்தால் கூட கோட்டையை நொறுக்கி விடுவோம்.

 வருகிற பாராளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க. உறுதியாக போட்டியிடுகிறது. எந்தெந்த தொகுதி என்று இப்போது சொல்ல முடியாது. பின்னர் அறிவிக்கப்படும். தேர்தலில் போராடி வெற்றிபெறுவோம். இளைஞர்களை எதிர்பார்க்கிறோம். மற்ற கட்சியில் இருப்பவர்களை கட்டாயப்படுத்தி சேர்க்க வேண்டாம். அரசியலில் இல்லாத இளைஞர்களை நமது கட்சிக்கு கொண்டுவாருங்கள். இவ்வாறு வைகோ பேசினார்.

0 கருத்துக்கள் :