தமிழ் மக்கள் சலுகைகளுக்குச் சோரம் போகின்றவர்களல்ல என்பதை அரசு உணர்ந்துள்ளது

21.11.13

(தம்பு கனகசபை ஒரு சட்டததரணி. “ஈழத்தமிழரின் வரலாறும் வாழ்வியலும்” “மகாவம்சம் ஒரு மீளாய்வு” என்ற தமிழ், ஆங்கில நூல்களின் ஆசிரியர். அவர் அண்மைணில் யாழ்ப்பாணம் சென்ற போது வடமாகாண மாண்புமிகு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களை நேர் காணல் கண்டார். எழுத்து மூலம் கேட்ட கேள்விகளுக்கு எழுத்தில் முதலமைச்சர் பதில் அளித்தார். கேள்விகளும் பதில்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் எதிர்கால அரசியல் தந்திரத்தையும் உத்திகளையும் அறிந்து கொள்ள அவரது பதில்கள் துணை செய்கின்றன.)
1) திரு இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலில் உங்கள் முகத்தைக் காட்டி அமோக வெற்றியையீட்டி இருக்கின்றது. இது அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும் கடந்தகால சம்பவங்களுக்கும் ஆன எதிர்வினை என விமர்ச்சிக்கப்படுகின்றது. இத்தகைய சூழலில் உங்களது அரசியல் நல்லிணக்க அணுகுமுறை கடந்தகால அநுபவங்களைப் பார்க்கும்பொழுது பலனளிக்குமென்று நம்புகின்றீர்களா?

பதில்:‍ அரசாங்கம் தாம் வழங்கிய தெருக்களையும் தேர்ந்தெடுத்த சில செயற்திட்டங்களையும் நம்பி மக்கள் தமக்கு ஆதரவு தருவார்கள் என்று நம்பியிருந்தது. ஆனால் மக்கள் தமது துயர் துடைக்க அரசாங்கம் என்ன செய்தது என்பதையே ஆராய்ந்து பார்த்தார்கள். வாக்குக்காக வாரி வழங்க முன்வந்தார்களேயொழிய மக்கள் வறுமையைப் போக்க, வாழ்வாதாரங்களை வளம் பெறச்செய்ய அரசாங்கம் முன்வரவில்லை என்பதை உணர்ந்து தமது உள்ள‌க்கிடக்கைகளைத் தேர்தலில் பிரதிபலிக்கச் செய்தார்கள். அஞ்சல் மூலம் செய்யப்பட்ட வாக்களிப்பில் அரச அலுவலர்கள் கூடத் தமது வெறுப்பை அகிலம் அறியச் செய்துவிட்டார்கள்.

தமிழ் மக்கள் சலுகைகளுக்குச் சோரம் போகின்றவர்களல்ல என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது. அதே சமயம் உலக மக்களும் அதை உணர்ந்துள்ளார்கள். வீரமுள்ள மானத் தமிழர்கள் விவேகம் உள்ளவர்கள் என்பதை உலகறியச் செய்ய வேண்டும். நடந்தவற்றைப் பற்றியே சிந்தித்து நடக்கப் போகின்றவற்றைப் பறிகொடுக்காத நல்லிணக்கப் பாதையில் நாம் செல்லவே விரும்புகின்றோம். அரசாங்கத்தின் மனமாற்றம் ஆறாத புண்களை ஓரளவு ஆறச் செய்யும். ஆனால் எமது குறிக்கோள்களில் நாம் அசட்டை காட்டமாட்டோம்.

2) கடந்தகால அரசுகளுடன் நல்லிணக்கத்துடன் செயல்பட்ட தமிழ் அரசியல் தலைவர்கள் இறுதியில் ஏமாற்றப்பட்டனர். இத்தகைய கசப்பான அநுபவங்களைப் பார்க்கும் பொழுது, குறிப்பாக தற்போதைய அரசாங்கத்தின் கடும்போக்கையும் அவர்கள் செயற்படுத்தும் நிகழ்ச்சி நிரலை மாற்றவோ அல்லது தடுக்கவோ முடியுமென நம்புகின்றீர்களா?

பதில்: சூடுகண்ட பூனை அடுப்பங்கரை அணுகாது என்பது உண்மைதான். ஆனால் நாங்கள் பூனைகள் அல்ல. புரிந்துணரும் புலன் படைத்தவர்கள். சூழல்கள் மாறிவருவதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். உதாரணத்திற்கு உலகோர் எம்மை நாடிவந்து நல்வாழ்த்து நல்கியதை மனதில் கொள்ளவேண்டும். நாம் செல்லும் பாதை கரடுமுரடானதுதான். எத்தருணத்திலும் கால் வாரப்படலாம். ஆனால் எமக்கிருக்கும் மாற்றுபாயம் என்ன? வன்முறையா? வாளாதிருப்பதா? வஞ்சிக்கப்படக்கூடும் என்பதால் வார்த்தைகளை மட்டும் வாரிவிட்டுக் கொண்டிருப்பதுதானா?
எமது மக்களின் வாழ்க்கை முறை வருத்தத்தைத் தருகிறது. வன்முறையாளர்கள் அவற்றை மேலும் வலுவற்ற‌தாகப் பார்க்கின்றார்கள். நீங்கள் வெளிநாடுகளில் இருந்து வாதங்களில் இறங்கியுள்ளீர்கள். நல்லது ஏற்படும் என்று நம்புவோம். நல்லதையே நாடுவோம். அப்பொழுது கடும்போக்குகள் கரையத் தொடங்குவன. நிகழ்ச்சி நிரல்கள் நிலைமாறுவன! நான் அரசியல் வாதியல்ல. ஆன்மீகத்தில் அசையாத நம்பிக்கை கொண்டவன். எங்கள் நம்பிக்கைகள் வீண்போகா!

3) தங்களது சனாதிபதி முன்னிலையிலான சத்தியப் பிரமாணம் வெளிநாட்டு அழுத்தங்களால் மேற்கொள்ளப் பட்டிருக்கலாமென கருதுகின்றனர். இது உண்மையா?

பதில்: நாம் எம் நாட்டில் அதன் சனாதிபதி முன் பதவிப் பிரமாணம் செய்ய வெளிநாட்டு அழுத்தங்கள் தேவையா? எந்தவித வெளிநாட்டு அழுத்தங்களும் எம்மீது பிரோகிக்கப் படவில்லை. நாங்கள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும். அதற்கு அரசாங்கத்தின் அனுசரணை வேண்டும். அத்துடன் எமது தேர்தல் அறிக்கை குறிப்பட்ட “பிளவுபடாத இலங்கையினுள் ஒரு சமஷ்டி அடிப்படை” என்பதின் அர்த்தத்தை அவர்கள் விளங்கிக் கொள்ளச் செய்ய வேண்டியிருக்கின்றது. அவற்றிற்கெல்லாம் நல்லெண்ண அடிப்படையில் நாம் தேர்ந்தெடுத்த உபாயமே மேற்படி செயலாகும். எமது செயலை வெளிநாடுகள் வரவேற்றுள்ளன. இந்தியா தனது வெளிநாட்டு அமைச்சரை எம்மை நாடி வந்து வாழ்த்துக்கள் தெரிவிக்க வழி செய்துள்ளது. எமது தேர்தல் வெற்றி எந்தளவுக்கு எமது மக்களின் வெற்றியோ அதேபோன்று எமது பதவிப் பிரமாண முடிவும். எமது மக்களின் பிரதிநிதிகள் தாமாகவே தமக்கு வகுத்துக் கொண்ட ஒரு முடிவேயன்றி எமக்கு எந்தவித அழுத்தங்களும் எவராலும் தரப்படவில்லை.

4) புலம்பெயர் தமிழர்களும் அமைப்புகளும் சனாதிபதி முன்னிலையிலான சத்தியப்பிரமாணம் பற்றிய அதிருப்தி கொன்றிருக்கின்றமையை அறிய முடிகின்றது. இச்சத்தியப் பிரமாணம் சனாதிபதியின் மேலுள்ள பல குற்றச் சாட்டுக்களை சர்வதேச அரங்கில் தணிக்குமென பலரும் விசனப்படுகின்றனர். இதுபற்றி உங்கள் அபிப்பிராயமென்ன?
பதில்: புலம்பெயர் தமிழர்களும் எம்மவர்கள்தான். அவர்கள் வேறு நாம் வேறல்ல. எனது மாணவர்கள்கூட என்னைத் தேடிவந்து தமது அதிருப்தியைத் தெரிவித்தார்கள். இது சனநாயகத்தில் வரவேற்கப்படவேண்டிய ஒன்று. எனினும் எனது கருத்தை நான் வெளியிடுகின்றேன். கேட்டுவிட்டு என்னை விமர்சியுங்கள்.

முதலாவது நான் பதவிப் பிரமாணம் செய்து கொண்டது குற்றஞ்சாட்டப்பட்ட இராஜபக்ச முன்னிலையில் அல்ல. இலங்கை நாட்டின் சனாதிபதி முன்னிலையில். ஒரு கல்லூரி அதிபர் ஏதோ பிழை செய்தால் அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையை கல்வித் திணைக்களம் முடுக்கி விட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். நான் ஒரு மாணவன். கல்லூரியில் இருந்து விடுபட ஒரு சான்றிதழ் பெறவேண்டியுள்ளது. அதனை அதிபரே கையெழுத்திட்டுத் தரவேண்டும். அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் இருப்பதால் நான் அவரிடம் சென்று சான்றிதழைப் பெறாது இருக்கமுடியுமா? நான் சான்றிதழைப் பெறுவதால் அவரின் குற்ற‌ச் சாட்டுக்கள் திணைக்கள முன் தணிவனவா? அதை விடுங்கள்.
அறிவு பூர்வமாகவும் நாம் பிரச்சனைகளை அணுக வேண்டும். உணர்வு பூர்வமாகவும் அணுக வேண்டும். ஒன்றின் துணை கொண்டு மற்றதை நிராகரிப்பது ஆபத்தான முடிவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் மறந்து விடலாகாது

இரண்டாவது எமது புலம்பெயர் சகோதர சகோதரிகள் எதற்காகப் பதற்றப் படுகின்றார்கள்? சனாதிபதியுடன் சிரித்துப் பேசுவதால் நான் எனது குறிக்கோள்களை மறந்து தமிழ் மக்களின் வருங்காலத்திற்கு உலை வைத்து விடுவேன் என்ற பயம்தானே! எனது அருமைத் தமிழ் மக்களே! என் குறிக்கோள்களில் நான் தவறினால் என்னை நன்றாக விமர்சியுங்கள்! என் கொடும்பாவிகளை எரித்துச் சாம்பலாக்குங்கள்! என்னைப் பதவி இறங்குமாறு வலியுறுத்துங்கள்! ஆனால் என் தந்திரோபாயங்களை விமர்சிக்காதீர்கள்! வீண்பழி சுமத்தாதீர்கள்! அவநம்பிக்கை கொள்ளாதீர்கள்! யுத்திகளும், தந்திரோபாயங்களும் ஆளுக்கு ஆள் வித்தியாசப் படக்கூடும். அவற்றை வைத்து ஒருவன் தனது குறிக்கோள்களில் பலவீனத்தைக் காட்டுகின்றான் என்ற தப்பபிப்பிராயத்திற்கு வந்து விடாதீர்கள். எமது மக்கள் உணர்சி மிக்கவர்கள் என்பதால் அவர்கள் அறிவை சில வேளைகளில் உணர்ச்சிகள் மழுங்கச் செய்து விடுகின்றன. அறிவு பூர்வமாகவும் நாம் பிரச்சனைகளை அணுக வேண்டும். உணர்வு பூர்வமாகவும் அணுக வேண்டும். ஒன்றின் துணை கொண்டு மற்றதை நிராகரிப்பது ஆபத்தான முடிவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் மறந்து விடலாகாது.

மூன்றாவது மேற்படி விமர்சனங்கள் யாரிடம் இருந்து வருகின்றன என்று பார்த்தோமானால் குற்றம் செய்தவர்களைக் கூண்டில் ஏற்ற‌ப் பலவாறான பிரயத்தனங்களில் ஈடுபட்டுப் பல இலட்சக்கணக்கான பணத்தைச் செலவழித்து நிற்கும் எமது உடன் பிறப்புக்களிடம் இருந்தே வருகின்றது. அவர்களின் இடத்தில் நானும் இருந்திருந்தால் நான் கூட அவர்கள் போல் சிந்தித்திருக்கக் கூடும். ஆனால் யதார்த்த நிலையை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஈடுபடுவது நடந்தவற்றிற்குப் பரிகாரம் தேட. நான் ஈடுபடுவது நடக்கப் போவதற்கு அதிகாரம் தேட. உங்கள் மனோ நிலையை நான் பிரதிபலித்துக்கொண்டு இருந்தேன் என்றால் எங்கள் மக்களுக்கு எந்தவித அனுசரணையும் எக்காலத்திலும் கிடைக்காது. அதற்கிடையில் இன ஒழிப்பு இனிதே நடந்தேறிவிடும்.

எனவே எனதருமைத் தமிழ் மக்களே! சந்தேகத்தைக் களையுங்கள். எனது கொள்கைகளில் நான் தவறு செய்தேனா? என்று ஊர்ந்து கவனித்துக்கொண்டிருந்து பிழை விட்டால் கட்டாயம் சுட்டிக் காட்டுங்கள். ஆனால் எனது தந்திரோபாயங்களைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். கைகுலுக்கினால், சிரித்தால், பதவிப்பிரமாணஞ் செய்தால், “துரோகி” என்று தப்புக் கணக்குப் போடாதீர்கள்!

5) சனாதிபதி, இந்திய வெளியுறவு அமைச்சர்களுடான நேர்காணலில் தெரிவுக் குழுவில் பங்குபற்றினால் மட்டும் இனப்பிரச்சனைக்கு தீர்வு எட்ட முடியுமென உறுதியாகக் கூறியிருக்கின்றார். தெரிவுக் குழுவானது வெறும் காலம் கடத்தும் ஒரு முறை மட்டுமல்லாது அதில் எட்டப்படும் முடிவுகள் பெரும்பான்மை சமூக அங்கத்தவர்களின் முடிவுகளாகவே இருக்கும். தெரிவுக்குழு விடயம் ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் நிராகரிக்கப்பட்ட விடயம். இதுபற்றித் தங்களது கருத்தென்ன?

பதில்: நீங்களே உங்களின் கேள்வியில் பதில் கூறிவிட்டீர்கள். பின் ஏன் என் பதில்? தெரிவுக்குழு விடயம் ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் நிராகரிக்கப்பட்ட ஒரு விடயம் என்பதே உண்மை. நானும் எனது செவ்விகளில் அதனைக் கூறிக்கொண்டு வருகின்றேன். பல தடவைகள் பேசியும் இறுதி முடிவு எடுக்காதிருக்கும் ஒரு விடயத்தைப் பல பெரும்பான்மை மக்கள் அங்கம் வகிக்கும் தெரிவுக்குழுவினுள் எடுத்துச் சென்றால் சிறுபான்மையினராகிய சிறிய தொகை தமிழர்களின் கோரிக்கைகளை பெரும்பான்மையினர் ஒரேயடியாக நிராகரித்து விடுவார்கள். பின்னர் எதுவுமே எமக்குக் கிடைக்காது போய்விடும். தெரிவுக் குழுவில் சேர்ந்து கொள்வதாகில் முன்னைய விவாதங்களின் முடிவுகளில் எதனை நாம் தேர்தெடுக்கப் போகின்றோம் என்ற அடிப்படையில் தீர்வுகளை முன்வைத்து ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் விதத்தில் வேண்டுமெனில் உள் நுழையலாம்.
உறுதியளித்த இலங்கை அரசு அதன் உறுதியைக் கைவிட்டதன் காரணத்தை அறிந்து அவ்வாறான காரியத்தின் விளைவுகளையும் தார்ப்பரியத்தையும் விளக்கி நாங்கள் தடம் புரளாமல் பயணம் செய்ய வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறுவதே என் பொறுப்பு

6) 13 ஆவது திருத்தத்தின் அதிகாரங்களின் செயற்பாட்டிற்கு உத்தரவாதம் அளித்த இந்தியா மீதா அல்லது இது பற்றி உறுதியளித்த இலங்கை மீதா உங்களின் அழுத்தம் இருக்கும்?

பதில்: எமது நடவடிக்கைககளை அழுத்தங்கள் என்று கூறாதீர்கள். நான் அரசியல் வாதியல்ல. என்னைப் பொறுத்தவரையில் உண்மையென்ன, உள்நோக்கமென்ன, உரிய நடவடிக்கை என்ன என்று பல தரப்பாருடன் சேர்ந்து பரிசீலிப்பதே உத்தமம் என்று கருதுகின்றேன். உறுதியளித்த இலங்கை அரசு அதன் உறுதியைக் கைவிட்டதன் காரணத்தை அறிந்து அவ்வாறான காரியத்தின் விளைவுகளையும் தார்ப்பரியத்தையும் விளக்கி நாங்கள் தடம் புரளாமல் பயணம் செய்ய வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறுவதே என் பொறுப்பு. அதே போல் இந்திய உத்தரவாதம் எத்துணை அவசியம் என்பதை அவர்களுக்கு எடுத்தியம்புவதும் எனது கடமை. புரிந்துணர்வு ஏற்பட்டால் நல்ல முடிவுகள் கிடைக்கும் என்பது எனது நம்பிக்கை.

7) உலகத் தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமையில் உங்களின் ஆதரவுடன் விட்டுக் கொடுக்காத துணிச்சலான முடிவுகளையும் சனநாயக ரீதியான போராட்டங்களையுமே தமிழ் மக்களின் ஆதரவுடன் செயல்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். இதனை அரசாங்கத்தின் தந்திரங்களுக்குள் சிக்காமல் செயல்படுத்த முடியமா?
பதில்: ஏழாவது கேள்வி ஒரு கேள்வி அல்ல. அது உங்கள் நம்பிக்கை. எங்கள் நம்பிக்கையும் அதுவே. ஒன்றை மட்டும் கூற விரும்புகிறேன். பணம், பதவி, படாடோபம், பலவித ஆடம்பரங்கள், சொகுசு சுகங்கள் – இவற்றை எல்லாம் தாண்டி வந்திருக்கும் மூவிருபதும் பத்தும் தாண்டிய முதிய ஒரு பிறவி நான். அரசியலால் எனக்குக் கிடைப்பதற்கு ஏதுமில்லை – மக்களின் அன்பு மனங்களைத் தவிர!

முடியுமானதை அவர்கட்கு வஞ்சகமின்றிச் செய்வதே எனது குறிக்கோள். இதற்காக அனைவரதும் பிரார்த்தனைகள் எனக்குத் தேவை.
எம்மைச் சுற்றி ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். இச்சூழ்நிலையில் எங்கள் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பது அத்தியாவசியமான‌து

8) ஒரு போரின் பொழுது தன்வலி, துணைவலி, மாற்றான்வலி அறிந்து போரிடவேண்டுமென்பது குறள் வாக்கு. இவ்வணுகுமுறை வன்முறையற்ற போராட்டங்களுக்கும் பொருந்தும். தமிழ்மக்கள் தற்பொழுது பனவீனப் பட்டிருக்கையில் துணைவலியாக தமிழக மக்களுடன், தமிழ் அரசியல் தலைவர்கள், அரசியல் நோக்கங்களுக்காகச் செயல்பட்டாலும் அவர்கள் அளிக்கும் ஆதரவு எங்களது பலத்தைப் பெருக்குவதோடு இலங்கை அரசின் மீது பாரிய அழுத்தத்தைக் கொடுக்குமென்பது பற்றி உங்கள் கருத்தென்ன?
பதில்: இதில் எதுவித கருத்து முரண்பாடுமில்லை. எமக்குப் புலம்பெயர் தமிழர்கள் மட்டுமன்றி தமிழக சகோதரர்களின் ஆதரவும் தேவையென்பதில் சந்தேகமில்லை. எம்மைச் சுற்றி ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். இச்சூழ்நிலையில் எங்கள் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பது அத்தியாவசியமான‌து. எமது நோக்கங்களும் பாதைகளும் பங்கப்படாமல் இருப்பது அவசியம். தமிழக‌ அரசியல் தலைவர்களுக்கு நாங்கள் எதிரானவர்களல்ல.

எங்கள‌து போராட்டத்திற்கு துணைவலி அவசியம். நல்லதீர்வு கிடைக்கும்வரை ஆதரவு அளிப்பவர்களை வரவேற்போம். எமது நோக்கங்களும் பாதைகளும் பாதிக்கப் படாமலிருப்பதும் முக்கியமென நம்புகின்றோம்.

0 கருத்துக்கள் :