சீமான் அறிக்கை:ராஜீவ் காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து

8.11.13

திருப்பூரில் ராஜீவ் காந்தி சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சி ஓர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதில் செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:-


திருப்பூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களின் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் நாம் தமிழர் கட்சிக்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது. சிலை உடைப்பு போன்ற அத்துமீறிய காரியங்களில் நாம் தமிழர் கட்சித் தம்பிகள் ஒருபோதும் ஈடுபடுவது கிடையாது. எத்தகைய எதிர்ப்பையும் ஜனநாயக முறையில் மட்டுமே தெரிவிக்கத் தெரிந்து வைத்திருக்கும் நாம் தமிழர் கட்சித் தம்பிகளை ராஜீவ் காந்தி சிலை தகர்ப்பு விவகாரத்தில் சம்பந்தப்படுத்திப் பேசுவது கண்டிக்கத்தக்கது.


சிங்கள பேரினவாத அரசு முழு ஆயுதப் பலத்தோடு ஈழத்தை அழித்தபோதும், இனவெறிக் கொடூரங்களை நிகழ்த்திய போதும் அதனைக் கண்டித்து ஜனநாயக வழிமுறைகளிலேயே நாம் தமிழர் கட்சி போராடியது. இன்றைக்கும் சிங்கள அரசின் மனிதாபிமானமற்ற அரக்கத்தனங்களையும், அதற்குத் துணை போகும் இந்திய அரசின் இரட்டை வேடப் பின்னணிகளையும் ஜனநாயக வழிநின்றே நாங்கள் எதிர்த்து வருகிறோம். பல லட்சக்கணக்கான பிணங்களின் மத்தியில் பிறந்தவர்கள் நாங்கள். தம்பி பாலச்சந்திரனின் கொடூரக் கொலை, தங்கை இசைப்பிரியாவின் நெஞ்சை உலுக்கும் வல்லுறவுப் படுகொலை என அடுத்தடுத்து நிகழ்ந்த பேரவலக் கொடுமைகளை நினைத்து நினைத்து கண்ணீர் உகுக்கும் கையறு நிலைப் பிள்ளைகள் நாங்கள். இடியாக இறங்கிய இத்தனைத் துயரங்களிலும் பழியாக நாங்கள் எதையும் செய்தது இல்லை. கதறி அழுததையும் கண்டனக் குரல் எழுப்பியதையும் தவிர்த்து, உணர்வு மீறிய உபாதைச் செயல்களில் எங்கள் பிள்ளைகள் ஒருபோதும் ஈடுபட்டது இல்லை. அடிமைப்பட்டுக் கிடக்கும் எம் இனத்தின் அத்தனை விதமான மீட்சிக்கும் போராடுகிற நாங்கள் அறிவை ஆயுதமாகவும் மக்களாட்சியைப் பாதையாகவும் கொண்டு இயங்குகிறோம். மொழி விடுதலை, சமூக விடுதலை, பொருளாதார விடுதலை, இழந்துவிட்ட உரிமை மீட்பு, மண் வளம் காப்பு என ஆகப்பெரிய கடமைகளைத் தோளில் சுமந்து கொண்டிருக்கும் நாங்கள் ஒருபோதும் வன்முறைகளையோ, ஆயுதப் பயன்பாட்டையோ நம்பியவர்கள் இல்லை. ஆனால், தமிழர்கள் என்றாலே ஆயுதப் பற்றாளர்கள், வன்முறை மீது தீராத காதல் கொண்ட மனநோயாளிகள் என்பதுபோல் காட்டுகிற முயற்சி நடக்கிறது. லட்சக்கணக்கான எங்கள் இன மக்கள் செத்து விழுந்தபோது கூட எங்களுக்குள் எரிந்த கோப நெருப்பை எங்களின் மீதே கொட்டி நாங்கள் எரிந்தோமே தவிர, எவர் மீதும் நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை. கொடூரப் போரில் ஈவு இரக்கமற்ற படுகொலைகளை சிங்கள வெறியாளர்கள் நிக்ழ்த்தியபோதும் தமிழகத்தில் இருந்த ஒரு சிங்களவர்களைக்கூட நாங்கள் சீண்டியது இல்லை. இங்கே வழிபட வந்த புத்த பிக்குகளையோ, வணிகம் செய்ய வந்த சிங்களவர்களையோ,படிக்க வந்த சிங்கள மாணவர்களையோ நாங்கள் ஒருபோதும் தாக்கியது இல்லை; தகராறு செய்தது இல்லை. தம்பி முத்துகுமார் என அடுத்தடுத்து எங்களுக்கு நாங்களே தீவைத்து மடிந்தொமே தவிர, ஒரு சிங்களவர் மீதும் நகக்கீரல்கூட எங்களால் ஏற்பட்டது இல்லை.ஒரு புழுவை அடித்தால்கூட அது வெடித்துத் துடித்து தன எதிர்ப்பைக் காட்டுகிறது. ஆனால், தமிழக மீனவர்கள் தாக்கப்படும் துயரங்கள் அலை அலையாய்த் தொடரும் நிலையிலும் அமைதியின் வழிநின்று மட்டுமே நாங்கள் போராடுகிறோமே தவிர, திருப்பியடிக்கும் நடவடிக்கைகளை நாங்கள் தவறியும் கடைப்பிடித்தது இல்லை. தமிழர்களுக்கு எதிரான அத்தனை கொடூரங்கள் நிகழ்ந்த போதும் மழையில் நனைந்தோம், முற்றுகை இட்டோம், உண்ணாவிரதம் இருந்தோமே தவிர, பிறர் பாதிக்கும் செயல்கள் எதையுமே நாங்கள் செய்ததது கிடையாது. ஜனநாயகத்தின் பிள்ளைகளாக நாங்கள் அறவழியில் நின்று போராடுகிறோமே தவிர, வன்முறை வழிநின்று நாங்கள் ஒருபோதும் தீர்வு தேடியது கிடையாது.


டெல்லியில் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட கொடூரத்தை கண்டித்து கொந்தளித்த டெல்லி, எங்களின் தங்கை இசைப்பிரியா கற்பழித்துக்  கொல்லப்பட்ட அவலத்துக்கு ஐயோ என ஒரு வார்த்தை சொல்லவில்லையே என்கிற வருத்தமும் கோபமும் எங்களுக்கு இருக்கிறது. யாருமற்ற அநாதைகளாக, எல்லோராலும் கைவிடப்பட்ட அபலைகளாக இருக்கிறோமே என்கிற ஆதங்கத்தைச் சுமந்தபடி அமைதி வழியில் நிற்கிற பிள்ளைகள் நாங்கள். அடிமை சிறுபான்மை தேசிய  இனத்தின் பிள்ளைகளாகி விட்டோமே என்கிற கவலை எங்களை மிகுந்த பொறுப்புணர்வோடும் கடமை உணர்வோடும் முன்னகர்த்தி வருகிறதே தவிர, வன்முறை எண்ணத்தை எங்களுக்குள் ஒருபோதும் அது விதைத்தது இல்லை.  வன்முறை எங்கள் பாதையும் அல்ல; எங்கள் பயணமும் அல்ல. கடயை உடைப்பது, கல் எறிவது எல்லாம் காட்டுமிராண்டி வேலைகள் என எண்ணுபவர்கள் நாங்கள். பண்பாடான அரசியலை மிகுந்த கண்ணியத்தோடு மேற்கொள்ளும் எங்கள் இயக்கத் தம்பிகள் ஒருபோதும் வன்முறை விவகாரங்களில் ஈடுபட மாட்டார்கள். வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் எங்கள் இயக்கத் தம்பிகளாக இருக்கவும் மாட்டார்கள்.


திருப்பூரில் முன்னால் பிரதமர்  ராஜீவ் காந்தியின் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் ஈடுபடவில்லை. எத்தகைய இடர்களிலும் வன்முறை நன்முறையாக அமையாது என்கிற வழிகாட்டலுடன் வார்க்கபட்டிருக்கும் எங்கள் கட்சி உறுப்பினர்கள் ஒருபோதும் இத்தகைய செயல்களில் ஈடுபட மாட்டார்கள். இனத்தில் விழுந்த ரணங்களை எல்லாம் மனத்தில் சுமக்கும் எங்கள் பிள்ளைகள் அறவழியில் நின்றே எத்தகைய உரிமைக்குரல்களையும் எழுப்புவார்கள். திருப்பூர் ராஜீவ் காந்தி சிலை தகர்ப்புக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எவ்வித்தத் தொடர்பும் இல்லை என்பதை இதன் மூலமாகத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.


இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் குறிப்பிட்டு உள்ளார்.

0 கருத்துக்கள் :