இலங்கை பிரச்சினையில் தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம்

16.11.13

இலங்கை பிரச்சினையில் தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாமென்று கேட்டு கொள்கிறேன் என்று மத்திய மந்திரி நாராயணசாமி கூறினார்.

புதுவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தில் உள்ள மத்திய மந்திரிகள், காங்கிரஸ் தலைவர்கள், தி.மு.க. தலைவர் கலைஞர் ஆகியோர் கேட்டுக்கொண்டதன் பேரில் இலங்கையில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளவில்லை. தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாத பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழர்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

காமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவு துறை மந்திரி சல்மான் குர்ஷித் கலந்து கொண்டிருக்க கூடாது என்று சில அரசியல் கட்சிகள் கூறுகின்றன. ஆனால் இலங்கை நமது அண்டை நாடு. மத்திய அரசின் சார்பில் இலங்கையில் உள்ள தமிழர்களின் புணர்வாழ்வுக்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதி வழங்கி உள்ளோம்.

இலங்கை வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கவும், 500 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கும், பள்ளி–கல்லூரியை கட்டுவதற்கும் இந்திய அரசு இலங்கைக்கு உதவி செய்து வருகிறது. அதற்கான வேலைகளும் அங்கு நடைபெற்று வருகின்றன.

இலங்கை தமிழர்களுக்கு அதிகாரம் கிடைக்கவும், தமிழக–புதுவை பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து சிறை பிடிப்பதை தடுக்கவும், இலங்கை தமிழர்கள் நலவாழ்வு பெறவும் காமன்வெல்த் மாநாட்டில் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் கலந்து கொண்டால் தான் தீர்வு கிடைக்கும். இலங்கை வடக்கு மாகாண முதல்–மந்திரி விஸ்வேஸ்வரன் இலங்கை பிரச்சினையில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அதுபோல் இந்த விவகாரத்தை தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாமென்று கேட்டு கொள்கிறேன் என்றார்.

0 கருத்துக்கள் :