ஒரு பிரளயத்தின் பின்னரான பேரெழுச்சி!

30.11.13

ஒரு பிரளயத்தின் பின்னரான பேரெழுச்சி என்று புலம்பெயர் தேசங்களில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகள் குறித்த கருத்து மிகையானது அல்ல. உண்மையிலேயே, புலம்பெயர் தேசங்களில் நடைபெற்ற மாவீரர் தின மண்டபங்கள் மக்கள் திரள்தல்களினால் திணறியது. முன்னர் எப்போதும் நிகழ்ந்திராத அளவிற்கு மாவீரர்களை அஞ்சலிக்க வந்திருந்த மக்கள் கூட்டம் அதிகமானது. 
இந்த வருட மாவீரர் தின நிகழ்வுகளில் புலம்பெயர் தமிழ் மக்கள் அதிக அளவு அக்கறை செலுத்தியதில் பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக, ஈழத் தமிழர்கள்மீதும், அவர்களது உணர்வுகள் மீதும் தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து வரும் சிங்கள ஆட்சியாளர்கள் மீதான ஆத்திரம் புலம்பெயர் தமிழர்களை மீண்டும் களத்தில் இறங்கும் நிலையை உருவாக்கி வருகின்றது. 
இரண்டாவதாக, உலக நாடுகளை ஏமாற்றுவதற்காக நடாத்தப்பட்ட வட மாகாண சபை தேர்தலில், வட தமிழீழ மக்கள் தெளிவான செய்தியினை வழங்கியிருந்தும், சிங்கள ஆட்சியாளர்கள் திரு. சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான வடமாகாண சபையினை இயங்கவிடாது தடுத்து வருகின்றனர். அதனால், தமிழீழம் ஒன்றே தீர்வு என்ற நிலைக்குப் புலம்பெயர் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 
மூன்றாவதாக, புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் சிங்கள புலனாய்வாளர்கள் ஊடான பிளவு முயற்சி முறியடிக்கப்பட்டு, தமிழ்த் தேசிய தளங்கள் மீண்டும் பலப்படுத்தப்பட்டுள்ளதனை தமக்குச் சாதகமா நிலையாகப் புலம்பெயர் தமிழர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனால், கடந்த மூன்று வருடங்களாக சிறிலங்கா அரச பின்புலத்தில் நடாத்தப்பட்டு வந்த போட்டி மாவீரர் தின நிகழ்வுகள் இந்த வருடத்தில் முடிவுக்கு வந்ததுள்ளது. 
இதைவிடவும் முக்கியமாக, சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய மாநாடு புலம்பெயர் தமிழர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. கனடிய பிரதமரின் பகிஸ்கரிப்பும், இந்தியப் பிரதமர் கலந்து கொள்ள எடுத்த பகீரதப் பிரயத்தனம் முறியடிக்கப்பட்டது, மொறிசியர்ஸ் பிரதமரின் இறுதி நேர நிராகரிப்பும், மாநாட்டுக்குச் சென்றிருந்த பிரித்தானிய பிரதமரின் சிறிலங்கா ஆட்சியாளர்கள் மீதான குற்றச்சாட்டும், எச்சரிக்கையும் தமிழர்கள் மத்தியில் மீண்டும் உளவியல் பலத்தை உருவாக்கியுள்ளது. 
ஏன்? என்று கேட்பதற்கு நாதியற்றவாகளாக, முள்ளிவாய்க்கால் கடற்கரை ஓரம்வரை சிங்களத்தால் வேட்டையாடப்பட்டு சிதைந்து போயிருந்த தமிழ் மக்களது உலகின்மீதான நம்பிக்கை மீண்டும் துளிர்விட ஆரம்பித்துள்ளது. உலகம் நீதி வழங்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் போர்க்களம் நோக்கி நகர ஆரம்பித்துள்ளார்கள். 
புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உருவாகியுள்ள இந்தப் பேரெழுச்சி, இப்போதைக்கு ஓயப்போவதில்லை என்ற யதார்த்தம் சிங்கள ஆட்சியாளர்களை இன்னமும் கிலி கொள்ள வைத்துள்ளது. பிரித்தானிய பிரதமர் விதித்துள்ள ஜெனிவா மாநாடு வரையான காலக்கெடுவுக்கு இன்னமும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ளன. அந்த மூன்று மாதங்களுக்குள் போர்க் குற்றச்சாட்டு குறித்த விசாரணைகளை நடாத்தி, குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்படும் என்றோ, போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு சிறிலங்கா அரசு பொறுப்புக் கூறும் என்றோ எதிர்பார்க்க முடியாது. 
இதுவரை காலமும், ஜெனிவா மனித உரிமைகள் மாநாடுகளில் சிங்கள ஆட்சியாளர்களைக் காப்பாற்றி வந்த இந்திய ஆட்சியாளர்கள் எதிர்வரும் மார்ச் மாத மாநாட்டில் சிறிலங்கா சார்பாக நடந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்க முடியாது. இந்திய நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், காங்கிரஸ் ஆட்சியாளர்கள் நேரடியாக மகிந்தாவைக் காப்பாற்றும் முயற்சிக்குத் துணை போய், தமிழகத்தில் கால் பதிக்க முடியாத நிலையை உருவாக்கிக் கொள்ள முயற்சிக்க மாட்டார்கள் என்றே நம்பப்படுகின்றது. 
புலம்பெயர் தமிழர்களது புதிய எழுச்சி, ஜெனிவா மாநாடு நோக்கி நகர்வது உறுதி. இது சிங்கள தேசம் நடாத்தி முடித்த இன அழிப்புப் போரின் கொடூரத்தை உலக நாடுகளுக்கு இன்னமும் தெளிவாகப் புரிய வைக்கப் போகின்றது. 
- சுவிசிலிருந்து கதிரவன்

0 கருத்துக்கள் :