அவுஸ்திரேலியா தூதுவராக நியமிக்கப்படவுள்ள சந்திரசிறி ?

5.11.13

வட மாகாண ஆளுநர் சந்திரசிறி இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதராக நியமனம் பெற்று செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதியின் கோரிக்கையின் பேரில் எதிர்வரும் பொதுநலவாய மாநாடு வரையிலும் வடக்கின் ஆளுநராக நீடித்திருக்க அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 11ம் திகதி இடம்பெறவுள்ள வட மாகாண சபையினது அமர்வில் ஆளுநர் உரையினை ஆற்றுமாறு அவருக்கு வடக்கு முதல்வர் சீ.வி.விக்கினேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
உத்தியோகபூர்வ இவ்வழைப்பினை கருத்தில் கொண்டு அங்கு கலந்து கொண்டு அவர் உரையாற்றவுள்ளார். அதுவே அவரது வடக்கு மாகாண சபையில் கலந்துகொள்ளும் இறுதி அமர்வாக இருக்கலாமென கூறப்படுகின்றது.

ஏற்கனவே முதல்வர் சீ.வி.விக்கினேஸ்வரன் வடக்கு மாகாண சபையின் முதலாவது அமர்வில் தற்போதைய ஆளுநர் முன்னாள் படை அதிகாரியென்ற வகையில் அப்பதவிக்கு பொருத்தமற்றவரெனவும் சிவில் சமூகத்தினை சேர்ந்த ஒருவரை அப்பதவிக்கு நியமிக்கவும் பகிரங்கமாகவே கோரியிருந்தார்.

இதன் பின்னரும் கதிரையை கட்டிப்பிடித்துக கொண்டிருக்க விரும்பவில்லை என அவர் மேல்மட்டத்தினது கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து எதிர்வரும் பொதுநலவாய மாநாடு வரையிலும் வடக்கின் ஆளுநராக நீடித்திருக்க ஜனாதிபதியினால் பணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஆளுநர் சந்திரசிறி இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவராக நியமனம் பெற்று செல்லவுள்ளமை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அவரது இரு மகள்களுடன் குடும்பம் அவுஸ்திரேலியாவிலேயே வசித்து வருகின்றது.

தனது பதவிக்காலமும் உத்தியோகபூர்வமாக இவ்வாண்டின் இறுதியுடன் முடிவுக்கும் வருவதனால், தனது குடும்பத்துடன் அவுஸ்திரேலியா சென்று கடைசிக்காலத்தை கழிக்க உள்ளதாக அவர் தனது நெருங்கிய சக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் அவருக்கு அவுஸ்திரேலிய தூதுவராக நியமனம் வழங்க மஹிந்த அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை வெற்றிடமாகவுள்ள வட மாகாண ஆளுநர் பதவிக்கு மாத்தறையிலுள்ள ஓய்வுபெற்ற இலங்கை நிர்வாக சேவை அதிகாரியொருவர் நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

0 கருத்துக்கள் :