ஸ்ரீதரனின் எம். பியின் தைரியம் பாராட்டுக்குரியது ; பொதுபலசேனா புகழாரம்

29.11.13

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் தைரியம் பாராட்டுக்குரியது என பொதுபல சேனா அமைப்பு புகழாரம் சூட்டியுள்ளது.

பாராளுமன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை போற்றியும் மாவீரர் தினத்தை பற்றியும் பேசிய ஸ்ரீதரனின் தைரியம் பாராட்டுக்குரியது என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனை ஓர் சுதந்திரப் போராட்ட வீரராகவும் தமிழ் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவராகவும் ஸ்ரீதரன் தனது பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறெனினும், தேசிய சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான மொனரவில கெப்பிட்டிப்பொலவை எந்தவொரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினரும் நினைவு கூர்ந்து பேசவில்லை என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை மிகவும் வெட்கப்பட வேண்டிய ஓர் நிலைமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கெப்பிட்டிபொல நிலமேயின் சிறார்த்த தினமன்று ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினரேனும் அதனை நினைவு கூர்ந்து பேசாமை கவலைக்குரியது என அவர் தெரிவித்துள்ளார். சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீதரனின் உரையை செவிமடுத்துக் கொண்டிருந்ததாகவும், எவரும் இடையூறு விளைவிக்கவில்லை எனவும் அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :