ஜெயலலிதா எடுத்து வைக்கும் அடிகள் மகிந்த கூட்டத்திற்கு வலிக்கின்றதா..?

3.11.13

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியுள்ளது. இந்தத் தீர்மானத்தை வாக்கெடுப்பிற்கு விட்டபோது, ஒருவர்கூட எதிர்ப்பு குரல் எழுப்பவில்லை.
தீர்மானத்தை தி.மு.க., தே.மு.தி.க. மட்டுமல்ல மத்தியை ஆளும் கொங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைவரும் கட்சி வேறுபாடின்றி ஏகமனதாக வரவேற்றிருக்கின்றனர்.

சிறீலங்காவில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என வலியுறுத்தித் தமிழகத்தில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா தீர்க்கமான ஒரு முடிவை எடுத்திருக்கின்றார்.
 அத்துடன், பெயரளவில் கூட இந்த மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்பதையும் அவர் தனது தீர்மானத்தில் வலியுறுத்தியிருக்கின்றார்.

2011ம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்ற கையுடன், தமிழ் மக்கள் மீது ஈவு இரக்கமற்ற முறையில் தாக்குதல் நடத்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும், இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும், தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்பி சிங்களர்களுக்கு இணையாகக் கண்ணியமாக வாழவகை செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தி, அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து சிறீலங்கா அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டசபையில் கொண்டுவந்தவர்.

அதனைத்தொடர்ந்து சிறீலங்கா இராணுவத்தினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கவும், சிங்களவர்கள் தமிழ்நாட்டில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளவும், மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, சிறீலங்கா இராணுவத்தினருக்கு, இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாட்டில் இராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதையும், விளையாட்டுப் போட்டிகளில் சிங்களவர்கள் பங்கேற்பதையும் தடுத்து நிறுத்தியவார்.

அதன் பின்னர் சிறீலங்கா ‘நட்பு நாடு’ என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இலங்கை இனப்போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன்விசாரணை நடத்தவேண்டும் என்றும், இந்தச் சர்வதேச விசாரணையின் அடிப்படையில் போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள், சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுகொடுக்கவும், தமிழர்கள் மீதான அடக்குமுறையை சிறீலங்கா அரசு நிறுத்தும் வரை அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியதுடன், ஈழத்தமிழர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ‘தனி ஈழம்’ குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு குழுவில் தீர்மானத்தினை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் ஈழத் தமிழர்கள்

சார்பாக மிகமுக்கிய தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தார்.
இந்நிலையில்தான், பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்பதை மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் மூலமாக வலியுறுத்தி வந்த முதலமைச்சர் ஜெயலலிதா, பொதுநலவாய மாநாட்டில் கனடா கலந்துகொள்ள மறுத்திருப்பதைச் சுட்டிக்காட்டி, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பெயரளவில் கூடக் கலந்துகொள்ளாது, முற்றிலுமாக மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதுடன், இலங்கை தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாகவும் வாழ சிறீலங்கா அரசு நடவடிக்கை எடுக்கும் வரை பொதுநலவாயக் கூட்டமைப்பில் இருந்து சிறீலங்காவை தற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி  தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த வாரம் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றார்.

 முதலமைச்சரின் இந்தச் செயலுக்கு உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் இருந்து நன்றியும், பாராட்டுக்களும் குவிந்த வண்ணமுள்ளன.
ஆனால், வழமைபோல் இந்திய மத்திய அரசோ தமிழகச் சட்டமன்றத் தீர்மானத்தைப் புறந்தள்ளிவிட்டு, பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளவது உறுதி என்று தெரிவித்துள்ளது.

 பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால்தான் தமிழக மீனவர்கள் பிர்ச்சினை குறித்து பேசமுடியும். எனவே இந்த மாநாட்டில் தான் கலந்துகொள்வது உறுதி என்று அண்மையில் இலங்கை சென்று திரும்பிய இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் குறித்து எத்தனையோ சந்திப்புக்களையும் மாநாடுகளையும் சிறீலங்கா அரசுடன் நடத்தி, இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்காது என்று உறுதியளித்த இந்தியா, தொடரும் சிறீலங்காவின் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்கத்தான் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதாகக் கூறுவது எத்தனை பெரிய ஏமாற்று என்பது சொல்லித்தான் புரியவேண்டும் என்பதல்ல.
ஆனால், இந்த மாநாட்டில் எவ்வாறாயினும் கலந்துகொண்டேயாகவேண்டிய சிங்கத்தின் வாலைப் பிடித்தவனின் கதையாக நிர்ப்பந்தத்தில் இருக்கின்றது இந்தியா. ஆனால், தமிழகத்தைச் சாட்டாக வைத்துத்தான் (தமிழக மீனவர்கள்) இந்த மாநாட்டில் பங்கேற்கமுனைவது, தமிழக அனைத்துக் கட்சிகளையும் மக்களையும் கொச்சைப்படுத்தும் ஒரு செயற்பாடன்றி வேறில்லை.

இந்தியாவின் இந்த நிலை புரிந்ததால்தான், இந்தியாவை அங்கிருந்துகொண்டே சீண்டிப்பார்க்க முடிகின்றது சிறீலங்காவினால். முதல்வர் ஜெயலலிதா அம்மையாரின் தீர்மானம் வெளியான கையுடன், பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணித்தால் தனிமைப்படுத்தப்படும் என இந்தியாவிற்கான சிறீலங்காத் தூதர் பிரசாத் கரியவாசம் எச்சரிக்கின்றார்.
இந்தியப் பிரதமர் பங்கேற்காமல் தவிர்த்தால், இதனால் ஏற்படப்போகும் விளைவுகள் குறித்து பரிசிலீப்போம். மாநாட்டினை தவிர்த்தால் சர்வதேச சமூகத்தில் இருந்து இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு விடும் என்று அவர் எச்சரிக்கின்றார். சிறீலங்காத் தூதரின் இந்தக் கருத்து கொங்கிரஸ் தலைவர்களையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமது கண்டனங்களைக் கொங்கிரசினர் வெளியிட்டு வருகின்றனர்.

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நிறைவேற்றி வரும் தீர்மானங்கள் சிறீலங்காவை ஏதோவொரு வகையில் பாதித்தே வருகின்றன. அவர் சிறீலங்கா ஆட்சியாளர்களுக்கு எதிராக எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிகளும் மகிந்த கூட்டத்திற்கு வலிக்கவே செய்கின்றது. மகிந்தவிற்கு விழுகின்ற அடிகள் அவரைப் பின்தொடருகின்ற அனைவருக்கும் விழுகின்றது. அதன் பிரதிபிலப்புத்தான் கரியவாசத்தின் கதறல்.

ஒரு காலத்தில் தமிழகத் தலைவர்களைக் கோமாளிகள் என்று வர்ணித்துக் கொக்கரித்த சிங்களப் பேரினவாதம், இப்போது அதற்கான வினையை அறுவடை செய்துவருகின்றது. இந்த இடைவெளிக்குள் தமிழர்கள் தங்கள் விடுதலைக்கான வழித்தடங்களைத் தேடுவதே சாலச்சிறந்தது.

ஈழமுரசு

0 கருத்துக்கள் :