மாவீரர் நாள்: கனவுகள் மெய்ப்பட பயணிப்போம்

27.11.13

இழந்து போன தமிழினத்தின் சுதந்திரக் காற்றை மீண்டும் பெற்றுத்தருவதற்காக தங்கள் உயிர்களைக் கொடை செய்த உன்னதமானவர்களை நினைவில் கொள்ளும் மாவீரர் நாள் ஒடுக்குமுறைகள், அடக்குமுறைகள் மத்தியில் இன்று தமிழ் மக்களால்

கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இன விடுதலைப்போரின் போது மண் விடுதலைக்காக உயிர்விலை கொடுத்தவர்கள் உட்பட்ட இலட்சக்கணக்கான உயிர்கள் விடுதலைப்போராட்ட காலத்தில் தியாகம் செய்யப்பட்டிருக்கின்றன.

விடுதலைக்காக உயிர்விலை கொடுத்தவர்களின் அர்ப்பணிப்பு நிறைந்த நினைவுகளை மீட்டுவதற்குக்கூட இனவாத அரசு தடைவிதித்துவருகிறது. விடுதலைக்காக உயிர் துறந்தவர்களின் நினைவிடங்கள் அனைத்தும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன.
 புலம்பெயர் தேசங்களில் ஆண்டு தோறும் மாவீரர் நாள் நிகழ்வுகள் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலையில் 2008ஆம் ஆண்டிற்குப் பின்னர் தாயகத்திலும் மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பிலான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தீர்மானித்திருக்கின்றன. தேர்தல் காலங்களில் தீவிரம் பெற்றிருக்கும் மாவீரர் விவகாரம் இந்த ஆண்டு மாவீரர் நாள் காலப்பகுதியிலும் பேசப்படுகின்றது. மாவீரர்கள் போற்றப்படவேண்டியவர்கள் காலங்காலமாக வழிபடவேண்டியவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

 ஆனாலும் மாவீரர்களை ஆண்டு தோறும் ஒரு நாள் நினைவு கொள்வதுடன் மாவீரர்களின் எண்ணம் ஈடேறும் என்று எண்ணிவிடலாகாது. மண்ணுக்காக விதையானவர்கள் ஒவ்வொருவரது குடும்பங்களின் பொருளாதார சிரமங்கள் தொடர்பில் ஆராய்ந்து அவற்றுக்கான பரிகாரங்களைக் காணவேண்டும். அதேபோல போர்க்காலத்தில் கொல்லப்பட்டவர்களின் பல்லாயிரம் குடும்பங்கள் இன்றுவரையில் நிர்க்கதியாகவே வாழ்ந்துவருகின்றன.

 சின்னக் குழந்தைகள் முதல் வயோதிபர்கள் வரையில் அங்கவீனர்களாக, வறுமைப்பட்டவர்களாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தொடர்பிலான ஆரோக்கியமான முடிவுகளை எடுக்கவேண்டும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். மக்கள் மற்றும் விடுதலைக்காக போராடி வீழ்ந்தவர்களின் குடும்பங்களின் மேம்பாட்டுக்காக உதவி செய்வது தொடர்பிலான ஒரு சிறந்த வேலைத்திட்டத்திற்கான முன்மொழிவினை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வைக்கவேண்டும். அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து செயற்படுத்தவேண்டும்.

அதேபோல புலத்தில் வாழும் மக்கள் தம்மாலான உதவிகளைப் புரிவதன் மூலம் போர்க்காலத்தில் உயிக்கொடை புரிந்தவர்களின் வாழ்வாதாரத்தினைக் கட்டியெழுப்ப முடியும். இனவிடுதலை என்பது மிக மிக முக்கியமானது தான். ஆனாலும் போரால் பாதிக்கப்பட்டவர்களின் உடனடி வசதி என்பது மிக முக்கியமாகும்.

 தமிழின விடுதலைக்காக உயிர்கொடுத்த மாவீரர்கள் வரிசையில் ஏனைய விடுதலை இயக்கங்களின் விடுதலைவீரர்களும் நினைவுகொள்ளப்படவேண்டியவர்கள். அவர்களின் குடும்பங்கள் தொடர்பிலும் அக்கறை செலுத்துவதன் மூலம் எமது விடுதலைக்கான அடுத்த கட்ட நகர்வுகளை தமிழ் மக்களின் முழுமையான ஆசீர்வாதத்துடன் முன்னெடுக்க முடியும்.

0 கருத்துக்கள் :