இறந்தவர்களை நினைவுகூர்வதை தடை செய்ய இலங்கையில் எவ்வித சட்டமும் இல்லை

26.11.13

இறந்தவர்களை நினைவுகூர்வதை தடை செய்ய இலங்கையில் எவ்வித சட்டமும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எனவே பொலீசாரோ, இராணுவத்தினரோ அவ்வாறு தடை விதிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

மாவீரர் தின அனுசரிப்பு தொடர்பாக பாதுகாப்பு பிரிவினரின் அறிவித்தல் குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது, “விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாதிகள் என இவர்கள் கூறி வருகின்றனர். மாவீரர் தினத்தில் நினைவுகூர்வது புலிகளை மாத்திரமல்ல. 30 வருட யுத்தத்தில் உயிர் நீத்த பொது மக்களையும்தான். அப்படி பார்த்தால் யுத்தத்தில் அதிகம் பொதுமக்களே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த தமது பிள்ளைகளை நினைவுகூர்வது அந்த மக்கள் அடிப்படை உணர்வு ரீதியானது. அதற்கு தடை விதிக்க முடியாது. ஐக்கிய நாடுகள் சாசனத்தில் கூட அவ்வாறு தடை செய்ய ஏற்பாடுகள் இல்லை. யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் கல்லறைகூட இடிக்க முடியாது என ஐநா சாசனத்தில் உள்ளது. ஆனால் இலங்கையில் உடைக்கின்றனர்.

அரசாங்கம் தமிழ் மக்களுடன் நல்லுறவை பேண விரும்புவதாக அடிக்கடி சொல்கிறது. அப்படியானால் முதலில் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அமைச்சர்கள் அல்லது இராணுவத்தினரின் பிள்ளைகள் இறந்திருந்து அவர்களை நினைவுகூர அரசாங்கம் தடை விதிக்குமா? இவ்வாறு சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :