நாங்கள் தீவிரவாதிகள் அல்ல அகதிகள் தான்- தமிழகத்தில் ஈழப் பட்டதாரி இளைஞர்கள்

11.11.13

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வந்த ஆயிரக்கணக்கான தமிழர்களுக்காக அமைக்கப்பட்ட முகாம்களின் எண்ணிக்கை, தற்போது 112-ஆக உள்ளது. இங்கு வசிக்கும் சுமார் 68 ஆயிரம் பேரில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள், இளைஞர்கள். முகாம் தமிழர்கள் சமீபக் காலமாகக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

ஆரம்பக்கல்வி முதல் உயர் கல்வி வரை பயில்கின்றனர். இளங்கலை மற்றும் முதுகலை, தொழில்நுட்பம், பொறியியல் பட்டங்களைப் பெற்றவர்கள் ஏராளம். பட்டம் பெற்றிருந்தாலும், படிப்புக்கு ஏற்ற வேலை என்பது எட்டாக் கனியாகவே உள்ளது.

அகதிகள் என்கிற முத்திரையால் உரிய வேலைக் கிடைக்காமல், கிடைக்கின்ற வேலைக்குச் செல்லும் கூலிகளாக இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட இளைஞர்களில் ஒருவரான திருவண்ணாமலை மாவட்டம் அத்தியந்தல் அகதிகள் முகாமில் வசிக்கும் பொறியியல் பட்டதாரி தேவ ஸ்டாலின்(26) கூறியதாவது:

சிறு வயதில் இருந்து படிப்பு மீது ஆர்வம் அதிகம். 10ம் வகுப்பில் 428 மதிப்பெண், பிளஸ் 2 வகுப்பில் 870 மதிப்பெண் பெற்றேன். செய்யாறில் உள்ளத் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டயம் பெற்று, பின்னர்த் திருநெல்வேலியில் உள்ளத் தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்தாண்டு பட்டம் (கணினி அறிவியல் பிரிவு) பெற்றேன். கல்லூரி நிர்வாகம் கட்டணச் சலுகை அளித்தது. அந்தத் தொகையையும் நடிகர் சத்தியராஜ் செலுத்தி உதவினார்.

பட்டம் பெற்று நல்ல வேலைக்காகப் பெரிய நிறுவனங்களில் விண்ணப்பித்தேன். இலங்கையைச் சேர்ந்த அகதி என்பதால், நேர்காணலுக்கு அழைப்பு வரவில்லை. இதனால், நேஷனாலிட்டி என்ற இடத்தை நிரப்பாமல் விண்ணப்பித்தேன். அதன்பிறகு, நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. அதிலும் தேறிய பின்னர், பிறந்த இடம் இலங்கை என்றதும் பிறகு பதில் அனுப்புகிறோம் எனக் கூறி அனுப்பிவிடுகின்றனர்.

எங்களைத் தீவிரவாதக் கண்ணோட்டத்திலேயே பார்க்கின்ற நிலை இருப்பதால் வேலை வாய்ப்பில் புறக்கணிக்கப்படுகிறோம். ஆனால், பிற நாடுகளில் அப்படியில்லை. அகதிகள் என்பதால், இந்தியாவில் இருந்து வெளி நாடுகளுக்கும் செல்ல முடியாது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்களைப் பழுது பார்க்கும் சிறிய நிறுவனத்தில் சொற்ப ஊதியத்திற்குப் பணியாற்றுகிறேன்.

அகதிகள் முகாம்களில் பிளஸ் 2 தேர்வில் 1170 மதிப்பெண், 10ம் வகுப்பில் 480 மதிப்பெண் பெற்றவர்கள் உள்ளனர். 1000க்கும் மேற்பட்டவர்கள் பட்டம் பெற்றுள்ளனர். என்றாவது ஒருநாள் சொந்த நாட்டுக்குத் திரும்பும் நிலை ஏற்பட்டால் படிப்பு முக்கியமானதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

முகாம்களில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம். அதிகாரிகள் கூப்பிடுகின்றபோது வர வேண்டும். அதனால் பல நேரங்களில் வேலையை இழக்க நேரிடுகிறது. இலங்கை தமிழர்களுக்காகத் தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. அதில் ஈழப் பட்டதாரிகளுக்கும் நல்ல எதிர்காலத்தை அமைக்கும் குரல் ஒலிக்காதா என ஏங்குகின்றனர் இளைஞர்கள்.
தமிழ் ஹிந்து

0 கருத்துக்கள் :