இந்தியா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் மூலம் ஈழத்தை உருவாக்க முயற்சி

25.11.13

இந்தியா உள்ளிட்ட மேற்கு நாடுகளுடன் இணைந்து தமிழ் ஈழத்தை உருவாக்கலாம் என்று தமிழ் சமூகத்தின் சில தரப்புக்கள் கருதுகின்றன. யுத்தத்தினால் ஈழத்தை அடைய முடியும் என்று எண்ணியவர்களே தற்போது மேற்கு நாடுகளைக் கொண்டு இதனை அடையலாம் என்று எண்ணுகின்றனர் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பிரிட்டன் சுமத்தும் யுத்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கின்றோம். ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பிரிட்டன் உள்ளிட்ட மேற்கு நாடுகளே யுத்தக் குற்றங்களை செய்துள்ளன. பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க இலங்கை வந்த கமரூன் பொதுநலவாய விதிமுறைமைகளை மீறியுள்ளார் என்றும் அவர் கூறினார்.

இலங்கை ஜனாதிபதி பிரிட்டனுக்கு சென்று வட அயர்லாந்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து உரையாற்றினால் அதனை கமரூன் தலைமையிலான பிரிட்டன் எவ்வாறு நோக்கும் என்று வினவுகின்றோம் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்து ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க மேலும் குறிப்பிடுகையில்,

இந்த நாட்டில் தமிழ்ப் பிரச்சினையை பிரித்தானியாவே உருவாக்கியது. அவர்கள் முதன் முதலாக இந்த நாட்டுக்குள் வரும்போது நாட்டில் பிரிவினைவாத பிரச்சினை இருக்கவில்லை. தமிழ் பிரபுக்களுக்கு அதிக வரப்பிரசாதங்களை வழங்கி இந்தப் பிரச்சினையை பிரித்தானியாவே ஏற்படுத்தியது.

தற்போது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து பிரிட்டன் பேசுகின்றது. இலங்கையில் பிரிட்டன் இருந்த காலத்தில் சுதந்திரத்துக்காக போராடியவர்களை எவ்வாறு பிரிட்டன் நசுக்கியது என்று எங்களுக்குத் தெரியும். யுத்தக் குற்றங்களை பிரிட்டனே மேற்கொண்டுள்ளது.

அது மட்டுமல்ல இலங்கையில் யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறுவதை நாங்கள் முழுமையாக நிராகரிக்கின்றோம். பிரிட்டன் உள்ளிட்ட மேற்கு நாடுகளே ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளன.

இதேவேளை இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள வந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் பொதுநலவாய விதி முறைமைகளை மீறி சம்மந்தமில்லாத விடயம் ஒன்றை கூறிச் சென்றுள்ளார்.

அந்தவகையில் இலங்கை ஜனாதிபதி பிரிட்டனுக்கு சென்று வட அயர்லாந்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து கேள்வியெழுப்பினால் அதனை கமரூன் தலைமையிலான பிரிட்டன் எவ்வாறு நோக்குகம் என்று வினவுகின்றோம். மேலும் இலங்கை வரும் முன்னர் பிரிட்டன் பிரதமர் புலி ஆதரவு புலம்பெயர் மக்களின் ஏழு குழுக்களை சந்தித்துவிட்டே இலங்கை வந்தார்.

இந்தியா உள்ளிட்ட மேற்கு நாடுகளுடன் இணைந்து தமிழ் ஈழத்தை உருவாக்கலாம் என்று தமிழ் சமூகத்தின் சில தரப்புக்கள் கருதுகின்றன. இந்தியாவின் தமிழ்நாட்டைக்கொண்டு ஈழத்தை அடையலாம் என்று எண்ணுகின்றனர். யுத்தத்தினால் அதனை செய்ய முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. தற்போது இவ்வாறான முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர் என்றார்.

0 கருத்துக்கள் :