புலம்பெயர் புலிகளைப் பலவீனப்படுத்தும் முயற்சி வெற்றியாம்.கோத்தபாய

25.11.13

தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பைப் பலவீனப்படுத்துவதற்கு தாம் எடுத்துவரும் முயற்சிகள் எதிர்பார்த்ததைவிட அதிக அளவு வெற்றியை அளித்திருப்பதாக சிறீலங்கா பாதுகாப்புத்துறைச் செயலர் கோத்தபாய ராஜபக்ச அறிவித்துள்ளார்.
கொழும்பு ஏரிக்கரை சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

‘‘புலம்பெயர்ந்த புலிகளால் எமது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் நிலவுகின்றது. வெளிநாடுகளில் புலிகளின் நிதிசேகரிப்புத் தொடர்கின்றது. இதுபற்றி வெளிநாடுகளுக்கு நாம் தெரியப்படுத்தியுள்ளோம்.

அதேநேரத்தில் புலம்பெயர் புலிகளைப் பலவீனப்படுத்தும் முயற்சிகளில் எதிர்பார்த்ததைவிட வெற்றியை நாம் கண்டுள்ளோம். இன்று வெளிநாடுகளில் நான்கு அணிகளாகப் புலிகள் இயங்குகின்றார்கள்.

இதில் எமக்கு எதிரான பிரச்சாரத்தை உருத்திரகுமாரனைத் தலைவராகக் கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், கத்தோலிக்க குரு இம்மானுவேலைத் தலைவராகக் கொண்ட உலகத் தமிழர் பேரவை ஆகியவை மேற்கொள்கின்றன.

மறுபுறத்தில் இங்கு ஆயுதப் போராட்டத்தை இறக்குமதி செய்யும் முயற்சியில் நெடியவன் குழுவும், விநாயகம் அணியும் ஈடுபடுகின்றன.

ஆனால் இந்த நான்கு அணிகளுக்கு இடையில் ஒற்றுமை இல்லை. இவர்களுக்கு உள்ளேயும் ஒற்றுமை இல்லை. புலிகளின் சொத்துகளுக்காக இந்த நான்கு அணிகளும் சண்டை போடுகின்றன. ஒவ்வொரு அணியில் உள்ள தலைவர்களும் சொத்துச் சண்டையில் ஈடுபடுகிறார்கள். இந்த நான்கு அணிகளும் அடுத்த ஆண்டு எட்டு அணிகளாகப் பிரிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இது நாம் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய வெற்றிதான்.’’

இவ்வாறு குறிப்பிட்டிருக்கும் கோத்தபாய ராஜபக்ச, சிறீலங்காவின் ஒருமைப்பாட்டையும், இறைமையையும் பேணுவதற்கு ஆக்கபூர்வமான உதவிகளை கே.பி வழங்கி வருவதாக மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் தமிழ் மருத்துவர்கள், தொழிலதிபர்கள் போன்றோரை கடந்த 2010ஆம் ஆண்டு யூன் மாதம் 14ஆம் நாள் முதல் கட்டம் கட்டமாக கொழும்புக்கு அழைத்து அவர்களுடன் இரகசிய சந்திப்புக்களை கே.பி நிகழ்த்தி வருவதோடு, நாடு திரும்பியதும் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்களுடன் நெருங்கிப் பழகிப் புலம்பெயர் கட்டமைப்புக்களில் இவர்கள் குழப்பம் விளைவித்து வரும் நிலையில் கோத்தபாய ராஜபக்சவின் இவ் அறிவித்தல் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :