போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை அவசியம்: பிரித்தானிய பிரதமர்

8.11.13

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணைகள் உரியமுறையில் முன்னெடுக்கப்படாவிட்டால் சர்வதேச விசாரணைகள் தேவை என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் கொழும்பு மாநாட்டை புறக்கணிக்குமாறு கெமரோனுக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்

பிரித்தானியாவிலுள்ள தமிழ் சமூகம் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்குமாறு கெமரோனுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
அத்துடன், மஹிந்த ராஜபக்சவுக்கு அடுத்த இரண்டு வருடங்களுக்கு பொதுநலவாய நாடுகளின் தலைமைத்துவத்தை வழங்கக்கூடாது என்றும் தமிழ் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தநிலையில் தாமும் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள கொலைகள் மற்றும் சித்திரவதை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொதுநலவாய மாநாட்டின் மூலம் தாக்கங்களை கொண்டுவரவுள்ளதாக கெமரோன் குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணிப்பதால் இலங்கை மீது அழுத்தங்களை கொடுக்க முடியாது. அந்த அரசாங்கம் மேற்கொண்டதாக கூறப்படும் போர்க்குற்றச்செயல்கள் தொடர்பில் அழுத்தங்களை மேற்கொள்ள முடியாது.

எனவே ராஜதந்திர ரீதியில் இந்தப்பிரச்சினையை அணுக வேண்டியுள்ளதாக கெமரோன் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பிரித்தானிய தமிழர் பேரவை கெமரோன் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்காமை குறித்து தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது

0 கருத்துக்கள் :