லண்டன் வருமாறு கமரொன் விக்னேஸ்வரனுக்கு அழைப்பு .

20.11.13

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கையும், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொனையும் சந்திக்கவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் யாழ்ப்பாணம் வந்திருந்த பிரித்தானிய பிரதமர் டேவிட்  கமரொன், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்த போது, வடக்கில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க  பிரித்தானியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அதேவேளை, பிரித்தானியப் பிரதமருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுக்கள் தொடர்பான விபரங்களை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் பரிமாறிக் கொள்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

எனினும், இந்த இரண்டு பயணங்களும் எப்போது என்று இன்னமும் இறுதியான முடிவு எடுக்கப்படவில்லை.” என்றும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனை புதுடெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை பிரித்தானியாவுக்கு வருமாறு, பிரதமர் டேவிட் கமரொன் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை, யாழ்.பொது நூலகத்தில், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொன், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை சந்தித்துப் பேசியிருந்தார்.

இந்தச் சந்திப்பின் போதே, லண்டனில் இலக்கம் 10, டௌணிங் வீதியில் உள்ள தனது இல்லத்துக்கு வருகை தருமாறு, வடக்கு மாகாண முதல்வருக்கு, டேவிட்  கமரொன் அழைப்பு விடுத்துள்ளார்.

0 கருத்துக்கள் :