எம்மால் கண்களை மூடிக்கொண்டிருக்க முடியாது – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் காட்டம்

19.11.13

கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா வந்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹகியூ நேற்று சிறிலங்காவின் மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் நல்லிணக்க ஆதரவாளர்களை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பில், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருடன் இணை வெளிவிவகார அமைச்சர் ஹியுகோ சுவைரும் கலந்து கொண்டார்.
சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் குறித்தும், சிறிலங்கா மனிதஉரிமை செயற்பாட்டாளர்களின் முயற்சிகளுக்கு பிரித்தானியா இன்னும் எத்தகைய ஆதரவை வழங்க வேண்டும் என்றும் பிரித்தானிய அமைச்சர், விபரங்களை கேட்டு அறிந்து கொண்டுள்ளார்.
இங்கு கருத்து வெளியிட்ட பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹகியூ,
“மனிதஉரிமைகள் நிலைமையை அறிந்து கொள்ளவும், சிறிலங்கா அரசாங்கத்திடம் எமது கவலைகளை நேரில் தெரிவிக்கவுமே நான் முக்கியமாக சிறிலங்கா வந்துள்ளேன்.

இன்று நான் நேர்மையாக நிலைமைகளை பகுப்பாய்வு செய்யும் ஆய்வாளர்களை சந்திப்பதையிட்டு மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.
அவர்கள் எந்த அச்சமும், துன்புறுத்தலுமின்றி சுதந்திரமாக செயற்பட வேண்டும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரியும், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இந்த ஆண்டு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு பிரித்தானியா இணை அனுசரணை வழங்கியுள்ளது.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், காணாமற்போதல்கள் மற்றும் பாலியல் வன்முறைகளுக்கான தண்டனை, சித்திரவதை, போர்க்குற்றங்கள் போன்றவற்றுக்குப் பொறுப்புக்கூறப்படாமல், மீறல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, எம்மால் கண்ணை மூடிக் கொண்டிருக்க முடியாது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

0 கருத்துக்கள் :