முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்ததால் மதிமுக ஆர்ப்பாட்டம் - வைகோ அறிவிப்பு

14.11.13

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ‘’தஞ்சைக்கு அருகில் விளார் சாலையில், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் முன்னின்று மூன்று ஆண்டு காலம் எண்ணற்ற சிற்பிகள், சித்திரக் கலைஞர்கள், கட்டடக் கலைஞர்கள் அர்ப்பணிப்பு உழைப்பால், முள்ளிவாய்க் கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது.

இந்த இடத்தில் பூங்கா அமைப்பதற்கு, நெடுஞ்சாலைத் துறையிடம், 2011 ஆகஸ்ட் மாதம் முற்றத்தின் சார்பில் விண்ணப்பம் தரப்பட்டு, அனுமதியும் வழங்கப்பட்டு உள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத் திறப்பு நிகழ்ச்சிகள், நவம்பர் 10 ஆம் நாள் முடிவுற்ற பிறகு, மூன்றாம் நாளில், 13 ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு, மூன்று பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு, அந்தப் பூங்கா சுற்றுச் சுவரை இடித்தனர். கருங்கல் நீரூற்றுகளையும், முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற அறிவிப்பு கற்பலகையையும் உடைத்து நொறுக்கினர். பூங்காவில் இருந்த செடிகளையும், முள்ளிவாய்க்கால் முற்றம் முழுமைக்கும், இரவில் பிரகாசமான வெளிச்சத்தைத் தந்த விளக்குக் கம்பத்தையும் பிடுங்கி எறிந்தனர்.

தடுக்க முயன்ற தமிழ் உணர்வாளர்களையும், பழ.நெடுமாறனையும், கைது செய்தனர். அங்கே திரண்டு வந்த பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

இதை கேள்விப்பட்டவுடன், நான் தோழர்களோடு மதுரையில் இருந்து விரைந்தேன். போலீஸ் தடைகளை உடைத்துக் கொண்டு, முள்ளி வாய்க்கால் முற்றத்துக்குள் சென்று, ‘இது தமிழர்களின் சொத்து; இதை உடைக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை என்று கூறி, பகல் 12 மணி முதல், இரவு 9 மணி வரை அங்கேயே இருந்தேன்.

முள்ளிவாய்க்கால் முற்றத்தைக் காக்கின்ற உறுதியோடு, அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நவம்பர் 16 சனிக்கிழமை அன்று, காலை 11 மணி அளவில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுகிறேன். ம.தி.மு.க. தொண்டர்களும், தமிழ் உணர்வாளர்களும் பெருந்திரளாகப் பங்கு ஏற்க அழைக்கிறேன்’’என்று கூறப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :