இசைப்பிரியா படுகொலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்

4.11.13

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத்துறையில் பணியாற்றிய இசைப்பிரியாவை இலங்கை இராணுவம் படுகொலை செய்த காட்சியை அண்மையில் சனல்4 தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.

இந்தக் கொலையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வன்மையாகக் கண்டித்துள்ளது. இது குறித்து யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சளாருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத்துறையில் பணியாற்றி பின்னர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இசைப்பிரியா என்பவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் என்பதை ஏற்கனவே சனல் 4 தொலைக்காட்சி பட்டவர்த்தனமாகத் தெரிவித்திருந்தது.

இதனை இலங்கை இராணுவம் முதலில் மறுத்தாலும் பின்னர் அவர் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவைச் சேர்ந்தவர் என்றும் அதனால் அவர் போரில் கொல்லப்பட்டதாகவும் இராணுவப் பேச்சாளர் முன்னர் கூறியிருந்தார். ஆனால் இப்பொழுது வெளிவந்திருக்கும் புதிய காணொளிகள் இசைப்பிரியா உயிருடன் கைதுசெய்யப்பட்டு அரைநிர்வாணமாக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதையும் மிகத் தெளிவாக சித்தரித்திருக்கின்றது.

நீ பிரபாகரனின் மகள்தானே என இராணுவத்தினர் கேட்க, தான் பிரபாகரனின் மகள் அல்ல என்பதையும் அவள் அங்கு தெரிவித்திருந்ததை நாங்கள் அதில் காணக்கூடியதாக இருந்தது. இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.

இலங்கை அரசாங்கம் பல்வேறுபட்ட யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டிருந்ததாக ஐ.நாசபையின் மூவர் அடங்கிய நிபுணர்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. ஆதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதாகவும் ஓர் சர்வதேச விசாரணை மூலம் தான் அவற்றைக் கண்டறிய முடியும் என்றும் அந்த நிபுணர்குழு தெரிவித்திருந்தது. இதனையே ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களும் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆகவே அடிப்படையில் இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்களைப் புரிந்துள்ளது என்பது இன்று சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள விடயமாக இருக்கின்றது. கடந்த வருடம் பிரபாகரனின் மகனான பாலச்சந்திரன் என்ற சிறுவன் எவ்வாறு சிறீலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்டார் என்பதை சனல்4 மிகத் தெளிவாக வெளியிட்டிருந்தது.

இப்பொழுது இசைப்பிரியாவின் படுகொலை எவ்வாறு சிறீலங்கா இராணுவத்தால் மூர்க்கத்தனமாக நடாத்தப்பெற்றது என்பதையும் இதே தொலைக்காட்சி தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றது.

பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி, நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரும் இக்கொலையைக் கண்டித்தது மட்டுமன்றி இது பற்றி முழுமையான விசாரணையொன்றை இலங்கை அரசு நடாத்தி பொறுப்புக்கூற வேண்டும் என்றும் இந்திய அமைச்சர்கள் கூறியிருப்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

யுத்தக்குற்றங்கள், மனிதாபிமானத்திற்கெதிரான குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றுடன் இலங்கை அரசிற்கு நேரடியான தொடர்பு இருப்பதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமுறை சுட்டிக்காட்டியிருக்கின்றது. இப்பொழுது அந்தக் குற்றச்சாட்டிற்கு இசைப்பிரியாவின் கொலை ஆதாரம் மேலும் வலுச்சேர்க்கிறது.

இத்தகைய ஒரு அரசிற்கெதிராக சர்வதேச விசாரணையை நடாத்த வேண்டிய ஒரு சூழலில் இலங்கை அரசாங்கம் நடத்தவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மகாநாட்டில் அதன் உறுப்பு நாடுகள் பங்கேற்பதென்பது இலங்கை அரசாங்கத்தின் பாரிய யுத்தக் குற்றங்களை மூடிமறைப்பதற்கே வழிவகுக்கும்.
இலங்கையில் இந்த மாநாடு நடைபெறுவதன் மூலம் அடுத்த இரண்டு வருடங்களுக்கு இலங்கை அரசாங்கத்திற்குக் கிடைக்கவிருக்கும் தலைமைப் பொறுப்பானது சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் இனவிரோத நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் அளிப்பதாகவும் இலங்கை அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்களை உறுப்பு நாடுகள் மூடிமறைப்பதாகவுமே பொருள்கொள்ளப்பட முடியும்.

பொதுநலவாய நாடுகளின் மகாநாடு இலங்கையில் நடப்பதன் மூலம் பொதுநலவாய மாநாட்டின் பிரதான பிரகடனங்களான ஜனநாயகம், மனிதவுரிமை போன்றவற்றின் விழுமியங்களையே கேள்விக்குள்ளாக்கிவிடும்.

யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் யுத்தக் குற்றங்களுக்கோ, காணாமல் போகச் செய்யபட்டோர் தொடர்பாகவோ இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாகவோ எதுவிதமான விசாரணைகளோ முன்முயற்சிகளோ மேற்கொள்ளப்படாத நிலையில் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றே மேற்கண்ட பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வைத் தேடித்தரும் என்று தமிழ் மக்கள் நம்புகின்றனர். இவ்வாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :