தமிழர்களின் எதிரிகள் யார், யார்?மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்

13.11.13

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவர் இடிப்பு கண்டிக்கத் தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இலங்கையில் நடந்த இனப்படுகொலையின் நினை வாகவும், போரில் கொல்லப்பட்ட போராளிகள் மற்றும் தமிழ் சொந்தங்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையிலும் தஞ்சாவூரை அடுத்த விளாரில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவரை தமிழக அரசு இடித்துத் தள்ளியிருக்கிறது.

 தமிழக அரசின் இந்த செயல் தமிழ் உணர்வாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டிருந்த இடம் நெடுஞ்சாலைக்கு சொந்தமானது என்பதால் அது இடிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையின் அடையாளமாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. அப்போது முற்றத்தின் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது என்பதால் தமிழக அரசை அணுகி, அவ்விடத்தை பயன்படுத்தி கொள்ள அனுமதி பெறப்பட்டது. சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் பூங்கா அமைத்து அதை உலகத் தமிழர் பேரமைப்பே பராமரிப்பது என்றும், நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தை பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதியை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொள்வது என்றும் தமிழக அரசுடன் உடன்பாடு செய்து கொள்ளப் பட்டது.

அதன்படி கடந்த சில ஆண்டுகளாக அனுமதி புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது. நடப்பாண்டிற்கு அனுமதியை புதுப்பிக்கக் கோரி பல மாதங்களுக்கு முன்பே மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த அனுமதி முடிவடைந்ததும், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாகக் கூறி முற்றத்தின் சுற்றுச்சுவரை இடித்திருக்கிறது. உலகத் தமிழர் பேரமைப்பால் அமைக்கப்பட்ட பூங்காவும் சிதைக்கப் பட்டிருக்கிறது. சுற்றுச்சுவரை இடித்த அதிகாரிகள் நினைவு முற்றத்திற்கு செல்வதற்கான முதன்மை வாயிலை கம்பி வேலி அமைத்துத் தடுத்திருக்கின்றனர்.

முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகு ஈழத்தமிழர்கள் எப்படி முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டார்களோ, அதேபோல் இப்போது முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமும் கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கிறது. நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதால் தான் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டதாக கூறப்படுவதை ஏற்கமுடியாது. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள நிலங்கள் பல்வேறு தரப்பினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

அவற்றையெல்லாம் அகற்றுவதில் அவசரம் காட்டாத தமிழக அரசு, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவரை மட்டும் அதிகாலையில், 500க்கும் மேற்பட்ட காவல்துறையினரின் பாதுகாப்புடன் இடித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதும் கண்டனத்திற்குரியது.

  தமிழர்களுக்கான நினைவுச் சின்னங்கள் எதுவுமே தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது என்ற முதல்வரது எண்ணத்தின் வெளிப்பாடு தான் இந்த நடவடிக்கை ஆகும். கடந்த ஆட்சியில் கண்ணகி சிலையை அகற்றிய முதலமைச்சர், இப்போது முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவரை அகற்றியிருக்கிறார். இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களை இராஜபக்சே அழிப்பதைப் போலவே, தமிழகத்தில் ஜெயலலிதா செய்து வருகிறார். தமிழர்களின் எதிரிகள் யார், யார்? என்பதை இப்போதாவது தமிழக மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :