இன்று கொழும்பில் கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாடு ஆரம்பம்

15.11.13

அனைத்துலக அளவில் எழுந்துள்ள கடுமையான விமர்சனங்கள், எதிர்ப்புகளுக்கு மத்தியில், கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாடு சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இன்று கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.

முன்னர் பிரித்தானிய முடியாட்சிக்குட்பட்டிருந்த 53 நாடுகள் அங்கம் வகிக்கும், கொமன்வெல்த் அமைப்பின் தலைவர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்தித்துக் கொள்ளும், 23வது மாநாடே, இன்று கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிகழ்வில் பங்கேற்க, பிரித்தானிய மகாராணியின் பிரதிநிதியாக, இளவரசர் சாள்ஸ் நேற்று கொழும்பு வந்துள்ளார்.

மேலும், பங்களாதேஸ், பாகிஸ்தான், பிரித்தானியா, அவுஸ்ரேலியா, நியுசிலாந்துள் உள்ளிட்ட பல நாடுகளின் பிரதமர்களும், வேறு பல நாடுகளின் அதிபர்களும், சில நாடுகளின் துணை அதிபர் அல்லது துணைப்பரதமர், அல்லது அமைச்சர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க கொழும்பு வந்துள்ளனர்.

இன்று காலை 10.15 மணி தொடக்கம் 11.15 மணி வரை மாநாட்டின் தொடக்கவிழா இடம்பெறவுள்ளது.

நெலும் பொகுண மகிந்த ராஜபக்ச அரங்கில் இந்த நிகழ்வு இடம்பெறும்.

இதில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பிரித்தானிய இளவரசர் சாள்ஸ், கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

இதையடுத்து,11.15 தொடக்கம் 11.30 மணி வரை, இளவரசர் சாள்ஸ் மற்றும் நாடுகளின் தலைவர்கள், கூட்டாக ஒளிப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வு இடம்பெறும்.

இதன் பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்க நினைவு கண்காட்சி நிலையத்தில் 11.45 தொடக்கம், பிற்பகல் 1.15 வரை, கொமன்வெல்த் தலைவர்களின் அமர்வு இடம்பெறவுள்ளது.

இந்த மாநாட்டுக்காக கொழும்பு விழாக்கோலம் பூண்டுள்ளதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாநாடு நாளை மறுநாள் ஞாயிற்றுககிழமை வரை தொடர்ந்து நடைபெறும்.

0 கருத்துக்கள் :