யாழ்.பல்கலைக்கழகத்தை மூடிய சிறிலங்கா அரசாங்கம்

10.11.13

யாழ்.பல்கலைக்கழகத்தை அடுத்த மாதம் 2ம் நாள் வரை மூடுமாறு, சிறிலங்கா பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளது.

கொமன்வெல்த் மாநாடு சிறிலங்காவில் நடக்கவுள்ள நிலையில், அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் சிறிலங்கா அரசாங்கம் நாளை முதல் ஒருவாரத்துக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

கொமன்வெல்த் மாநாடு நடைபெறும் காலத்தில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், யாழ்.பல்கலைக்கழகம் மட்டும், இந்த மாதம் முழுவதும் மூடப்பட்டிருக்கும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாளை தொடக்கம், டிசம்பர் 2ம் நாள் வரை யாழ்.பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து மாணவர்களையும் விடுதிகளை விட்டு வெளியேறுமாறும் கோரப்பட்டுள்ளது.

எனினும், யாழ்.பல்கலைக்கழகத்தை மூன்று வாரங்களுக்கு மூடுவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவுக்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.

வரும் நவம்பர் 27ம் நாள் மாவீர்ர் நாள் கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையிலேயே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மாவீரர்களை நினைவு கூர்ந்து சுடர்களை ஏற்றிய போது, சிறிலங்கா காவல்துறையினரும்,படையினரும் இணைந்து தாக்குதல்களை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறையும் அத்தகைய நினைவு நிகழ்வு நடத்தப்படுவதைத் தடுக்கவே சிறிலங்கா அரசாங்கம் யாழ். பல்கலைக்கழகத்தை மூடியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

0 கருத்துக்கள் :