இசைப்பிரியா படுகொலையை கண்டித்து மறியல்: அடையாறில் 75 பேர் கைது

4.11.13

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரில் விடுதலைப் புலிகளின் ஊடகப்பிரிவு நிகழ்ச்சி தொகுப்பாளர் இசைப்பிரியா மிக கொடூரமான முறையில் பாலியல் சித்ரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொடூர காட்சியை சேனல்–4 தொலைக்காட்சி வெளியிட்டது. இது அனைத்து தரப்பினரிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. பல்வேறு அமைப்புகள் இதில் சம்பந்தபட்டவர்களை கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக முன்னேற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் அடையாறில் இன்று திடீர் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

ஆனாலும் தடையை மீறி தென்சென்னை மாவட்ட தலைவர் வேல்ராஜ் தலைமையில் மறியலில் ஈடுபட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கட்சி நிர்வாகள் குமார், பழனி உள்பட 75 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என எதிர்ப்பு தெரிவித்து சேப்பாக்கத்தில் இருந்து பிரசாரம் செய்தபடி தஞ்சை செல்ல மாணவர்கள் கூட்டமைப்பினர் முடிவு செய்தனர். இதனை நடிகர் சத்யராஜ் தொடங்கி வைப்பதாக இருந்தது.

இதற்காக சேப்பாக்கத்தில் மாணவர் கூட்டமைப்பினர் கார்த்திக் தலைமையில் திரண்டனர். தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த 14 பேரை கைது செய்தனர்.

0 கருத்துக்கள் :