சேனல்-4’ இயக்குனருக்கு விசா வழங்க மறுத்தது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கை

6.11.13

தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி :- பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், இசைப் பிரியா போன்றவர்களைக் கொடுமையாக சிங்கள ராணுவம் கொலை செய்ததை ஆதாரப் பூர்வமாக வீடியோ எடுத்த சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் இயக்குநருக்கு இந்தியா; விசா வழங்க மறுத்து விட்டதாகச் செய்தி வந்திருக்கிறதே?

பதில் :- இனவாத இலங்கையின் சுய உருவத்தைத் தோலுரித்துக் காட்டிய நிறுவனத்தின் இயக்குனர் கெல்லம் மெக்ரே இந்தியாவிற்கு வருவதற்காக எட்டு மாதங்களுக்கு முன்பே விசா வழங்கக்கோரி விண்ணப்பம் கொடுத்ததாகவும், ஆனால் இந்திய அரசு மறுத்துவிட்டது என்றும் தெரிவித்திருக்கிறார்.

தற்போது மீண்டும் இசைப்பிரியா கொலை செய்யப்பட்ட காட்சிகளை டெல்லியிலே வெளியிடுவதற்காக நவம்பர் 6ஆம் தேதி வருவதற்கு விசாவுக்காக விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பத்தையும் இந்திய அரசு நிராகரித்துள்ளது என்பதை அவரே வெளியிட்டிருக்கிறார்.

மேலும் அவர், இலங்கையில் போர்க் குற்றங்கள் நடந்தது உண்மை. அங்கே போரின்போது மனிதாபிமானத்திற்கு எதிரான செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன என்றும் கூறியிருக்கிறார். கெல்லம் மெக்ரேவுக்கு “விசா” மறுத்தது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கை மட்டுமல்லாமல், “சீப்பை எடுத்து ஒளிய வைத்திடும்” மலிவான தந்திரமாகும்.

இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்

0 கருத்துக்கள் :