1948 ஆம் ஆண்டின் பின்னர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த முதலாவது தலைவர் கமரூன்

16.11.13

போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னர் இலங்கை அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டுமெனவும் இல்லாவிடின் ஐ.நா. விசாரணைக்கு தான் வலியுறுத்துவார் எனவும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது அவர் இதனை தெரிவித்தார்.

நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்ததன் மூலம் 1948 ஆம் ஆண்டின் பின்னர் அங்கு சென்ற முதலாவது வெளிநாட்டு அரசாங்கத் தலைவர் எனும் பெருமையை பெற்றுக்கொண்ட பிரித்தானிய பிரதமர் கமரூன், பின்னர் கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து கலந்துரையாடினார்.

அதன்பின் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பிரித்தானிய பிரதமர் கமரூன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தான் வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறினார். மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க விவகாரங்களில் இலங்கை அரசாங்கம் மேலும் அதிகமாகவும் விரைவாகவும் செயற்பட வேண்டும் என அவர் கூறினார்.

குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினாரென பிரித்தானிய பிரதமர் தெரிவித்தார்.
எனினும், "என்னை மிக தெளிவாக்க விடுங்கள், மார்ச் மாதத்துக்குள் விசாரணை பூர்த்தியடையாவிட்டால் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்துடன் இணைந்து செயற்படுவதற்கும் முழுமையான, நம்பகமான, சுயாதீனமான விசாரணை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எமது நிலையை நான் பயன்படுத்துவேன்" என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கூறினார்.

0 கருத்துக்கள் :