மகளின் பரீட்சை பெறுபேற்றை பார்க்க சென்ற பெற்றோர் விபத்தில் . சுன்னாகம் வீதியில் சம்பவம்

1.10.13

மகளின் புலமைப்பரில் பரீட்சைப் பெறுபேற்றை அறிவதற்காக அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு நேரத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்ற அரச ஊழியர்களான கணவன் மனைவி இருவரும் இன்னொரு மோட்டார் சைக்கிளில் மோதுண்டதில் படுகாயமுற்ற நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இன்று செவ்வாய்க்கிமை பிற்பகல் 3.30 மணியளவில் இந்த விபத்து சுன்னாகம் காங்கேசன்துறை வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சுன்னாகத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரான எஸ் நந்தகுமார், அவருடைய மனைவியான உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றுபவரான ந. யாழினி ஆகிய இருவருமே படுகாயத்துடன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களாவார்.
ஆசிரியர் கால் முறிந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மனைவி தலையில் காயத்துடன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளையில் பின்னால் வந்த இந்துமத குருக்கள் ஒருவருடைய மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துக்கள் :