அத்துமீறிய அமெரிக்க கப்பலில் சிக்கிய திண்டுக்கல் வாலிபர்

21.10.13

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து பிடிபட்ட அமெரிக்க ஆயுத கப்பலில் இருந்து கைதான திண்டுக்கல் வாலிபர் குறித்து கியூ பிரிவு போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அருகே கடந்த 11ம் தேதி இரவு இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீமேன் கார்டு ஓகியா என்ற அமெரிக்க கப்பல் மடக்கிப் பிடிக்கப்பட்டது.

 இதில் 10 மாலுமிகள், 25 பாதுகாவலர்கள் இருந்தனர். அவர்களிடம் 35 துப்பாக்கிகள் மற்றும் ஆயிரக்கணக்கில் தோட்டாக்கள் இருந்தன. இதுதொடர்பாக கியூ பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கப்பல் கேப்டன் உள்பட 35 பேரை கைது செய்தனர். இவர்களில் 12 பேர் இந்தியர்கள். இதில் ஒருவர் திண்டுக்கல் என்.எஸ்.நகர் தெய்வசிகாமணிபுரத்தை சேர்ந்த தண்டபாணி என தெரியவந்துள்ளது.

இவரது தந்தை ராஜன் 8 ஆண்டு முன் இறந்து விட்டார். தண்டபாணி ஒட்டன்சத்திரம் பாலிடெக்னிக்கில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் டிப்ளமோ படித்துள்ளார். வேலை தேடி கொண்டிருந்த தண்டபாணி சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் நடத்திய நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த 2008ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி அந்த நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

அடிக்கடி கப்பல் கம்பெனியில் இருந்து வேலைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அழைப்பர். ஒரு தடவை வேலைக்கு சென்றால் 500 டாலர் வரை சம்பளம் கிடைக்குமாம். கைதான தண்டபாணிக்கு திருமணம் ஆகவில்லை. தண்டபாணி குடும்பத்தினர் கூறுகையில், ''அவரது வேலையை பற்றி எந்த விவரமும் தெரியாது. வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். மேலும் கடன் தொல்லை உள்ளது'' என்றனர்.

அமெரிக்க ஆயுத கப்பலில் திண்டுக்கல் வாலிபர் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனிப்பிரிவு மற்றும் கியூ பிரிவு போலீ சார் அவரது குடும்பத்தினரிடம் தொடர்ந்து ரகசியமாக விசாரித்து வருகின்றனர்

0 கருத்துக்கள் :