காமன்வெல்த்:தமிழ் மக்களுடைய உணர்வுகளை மதிப்போம்: பிரதமர் கடிதம்

15.10.13

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக தி.மு.க. மற்றும் தமிழ் மக்களுடைய உணர்வுகள் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் மதித்து, பரிசீலித்து உரிய முடிவுகளை எடுப்போம் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கக் கூடாது என்னும் தி.மு.க.வின் நிலையை வலியுறுத்தி தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, நேற்றிரவு 8 மணியளவில் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

சுமார் 25 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின்போது நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்கின்ற கோரிக்கையினை கருணாநிதியின் சார்பில் டி.ஆர்.பாலு வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார்.

சிங்கள இனவெறி அரசு நடத்தும், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்ற தமிழகத்தின் ஒருமித்த குரலுக்கு பிரதமர் செவி சாய்க்க வேண்டுமென்று தமிழகத்தின் பல்வேறு அரசியல் இயக்கங்களும் - பாராளுமன்ற உறுப்பினர்களும் - மாணவர்களும் - உலகத் தமிழின அமைப்புகளும் பல்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து போராடி வருவதை சுட்டிக்காட்டிய டி.ஆர்.பாலு கடந்த 12 நாட்களுக்கு மேல் இதே பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்துவரும் தோழர் தியாகுவின் மோசமாகி வரும் உடல்நிலைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

இவற்றை கவனமுடன் கேட்டறிந்த பிரதமர் மன்மோகன் சிங், 'காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக தி.மு.க. மற்றும் தமிழ் மக்களுடைய உணர்வுகள் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் மதித்து, பரிசீலித்து உரிய முடிவுகளை எடுப்போம்' என்று டி.ஆர்.பாலுவிடம் கருணாநிதிக்கு கடிதம் தந்து அனுப்பியுள்ளார்.

0 கருத்துக்கள் :