நாம் கூட்டுப் பங்காளிகளே தவிர, குத்தகைக்காரர்களல்ல - முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்

26.10.13

கைதடியில் நேற்று நடந்த வடக்கு மாகாணசபையின் முதலாவது அமர்வில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்திய உரையின் முழுவடிவம்.

அமைதியாக ஒதுங்கிய வாழ்க்கை வாழ்ந்து வந்த என்னை சிறிய கால இடைவெளிக்குள் ஒரு நாடறிந்த உலகறிந்த அரசியல்வாதியாக மாற்றிய என் அன்பார்ந்த உள்நாட்டு, வெளிநாட்டு நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் அபிமானிகளுக்கும் என் நன்றிகள் உரித்தாகட்டும்.
நடந்து முடிந்த தேர்தலில் எனக்கு அமோக வாக்குகளை வழங்கி என்னை முன்னணி வேட்பாளர் ஆக்கியமைக்கு யாழ். மாவட்ட வாக்காளர்களுக்கும் மற்றும் பல சிரமங்களுக்கு மத்தியில் வருகை தந்து வாக்களித்த பிறமாவட்டங்களில் வசித்து வரும் யாழ். மாவட்ட வாக்காளர்களுக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகள்.

இவர்கள் யாவருக்கும் என்மேல் இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை என்னைப் பிரமிக்க வைக்கின்றது. அதேநேரத்தில் சாதாரண தமிழ் மக்களின் என தருமைச் சகோதர, சகோதரிகளின் எதிர்பார்ப்பு என்னைச் சில்லிட வைக்கின்றது. இறைவா, இறைவர் யாவரையும் காப்பாற்று என்று உளமார இறைஞ்சுவதை விட என்னால் வேறொன்றும் கூற முடியாமல் இருக்கின்றது. எனினும் எங்கள் யாவர் மனத்திலும் நம்பிக்கை திரும்பி உள்ளது என்பதை உணர்கின்றேன். அது தொடர வேண்டும். அந்த நம்பிக்கை தான் எம்மை எதிர்காலத்தில் காட்டமுடன் வழி நடத்தும்.

இன்று உதயமாவது வடமாகாணத்தின் முதல் மாகாண சபை. ஆனால் அதனை வழி நடத்துவதற்குரிய உட்கட்டமைப்புக்கள் கூட இதுவரையில் முறையாகப் பொருத்தப்படவில்லை. எம்மை எதிர்நோக்கும் பாரிய சவால்களை எதிர்நோக்கக் கூடிய மனித வளங்களையோ பொருள் வளங்களையோ நாம் இன்னும் பெறவில்லை. எனினும் முறையற்ற முன்னைய ஆட்சிமுறை முடிவுற்றுத் தொடர்கின்றது.

இருப்பினும் எமது முதல் மாகாண சபையை வழி நடத்த அதன் கூட்டங்களின் தவிசாளராக மதிப்புடன் செயலாற்ற சீ.வீ.கே.சிவஞானம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கின்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் உறுப்பினர்களில் வயதில் கூடியவர் சிவஞானம், என்னைவிட இரண்டு வாரங்களுக்கு முன் பிறந்தார். அவரை உவப்புடன் உள்ளன்புடன் வரவேற்கின்றேன். அவரின் வயதும் அனுபவமும் எம்மை உரியவாறு வழி நடத்தும் என்பதில் எனக்கு எந்தவித ஐயமுமில்லை.
எமது பிரதி பேரவைத் தலைவர் அன்டன் ஜெகநாதனையும் மனமகிழ்வோடு வரவேற்கின்றேன். முல்லைத்தீவு மக்களின் முதன்மை வேட்பாளராக மக்கள் ஆதரவை முழுமையாகப் பெற்ற அவர் எமது சபையின் பிரதித் தவிசாளராக கடமையாற்றும் அதே நேரத்தில் பல முக்கியமான அரசியற் பணிகளையும் ஆற்றவுள்ளார். அவர்தம் பணிகளைச் சிறப்பாக ஆற்றுவார் என்பதில் எனக்கு சந்தேகம் எதுவுமில்லை.

நாம் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலேயே தேர்தலில் வெற்றி பெற்று வந்துள்ளோம். ஆனால் பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் ஓட்டைகள் உள்ள ஒரு பாத்திரம் போன்று ஒன்றுக்கும் உதவாதது போல் காட்சி அளிக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையை எமதருமை மக்கள் தொடர்ந்து வந்த தேர்தல்களில் ஏற்றதன் காரணத்தினால் பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் குறைபாடுடையது என்பதும் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய தன்மை அதற்கு இல்லை என்பதும் தெட்டத்தெளிவாக விளங்குகின்றது.

சுதந்திரமான மாகாண சபை ஒன்று திறம்பட செயற்பட பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் வழி அமைத்துக் கொடுக்கவில்லை என்பது கவலைக்கிடமாகவே இருக்கின்றது. எனினும் அரசாங்கமானது தமிழ் பேசும் மக்கள் எமக்கு பதின்மூன்றாம் திருத்தச் சட்டம் வகுக்க தேர்தலில் அளித்துள்ள ஆணையை கவனத்திற்கு எடுத்து எம்முடன் சேர்ந்து போருக்குப் பின்னரான மீட்பு நடவடிக்கைகள் புனர்நிர்மாணம், புனருத்தாரணம், புனரமைப்பு மேலும் அபிவிருத்தி ஆகியவற்றில் சிரத்தை காட்டி உரியவாறு அவற்றைத் திறம்பட செயலாற்ற உதவி அளிக்கும் என்று எதிர்பார்க்கின்றேன்.
சர்வதேச நாடுகள் இருதரப்பாரின் ஒத்துழைப்புடன் எமக்கு தொழில் சார் அறிவுரைகளை வழங்கி நிதி வழங்கி மேற்கண்டவற்றை வெற்றிகரமாக நடத்தி முடிக்க எமக்கு பக்க துணையாகவும் பலமாகவும் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

இருந்தும் நாம் சட்டத்திற்கு அமைவாகவே நடக்க முன்வந்துள்ளோம். இருக்கும் பொறிமுறைகளையும் முடியுமான அளவு அனுசரித்து முன்னேற திடசங்கற்பம் பூண்டுள்ளோம். இதன் பொருட்டு குறுகியகால, நீண்டகால நோக்குகளை முன்வைத்து முன்னேற உத்தேசித்துள்ளோம்.
முதல் மூன்று மாதங்களுள் (1) ஜனநாயக முறையையொட்டி குடிமக்கள் நிர்வாகம் நடைபெற ஆவன செய்தலையும் (2) எமது கடமைகளை செவ்வனே தொடர்ந்தியற்ற அதற்குரிய மனித, பொருள் வளங்களைப் பெற முயற்சித்தலையும் (3) எமது மக்களுக்கு தேவையற்ற முந்துரிமை (Priorities), தந்திரோபாயங்கள் (Strategies) ஆகியவற்றின் அடிப்படையில் தெரிந்துகொள்ள வழி அமைத்தலையும் அவை உள்ளடக்குவதாக அமைவன.
இது சார்பாக போருக்குப் பின்னரான எம்மக்களின் தற்போதைய மற்றும் வருங்காலத் தேவைகள் ஆராய்ந்தறியப்படுவன. ஐனநாயக முறையையொட்டிய நடவடிக்கைகள் எனும்போது ஆகக்குறைந்தது பின்வருவனவற்றையாவது அவை உள்ளடக்குவன:

1. இராணுவமானது வடமாகாணத்தில் உடனேயே அதன் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும். மாகாணத்தின் வயது எய்திய குடிமக்கள் ஐவருக்கு ஒருவர் இராணுவப் போர் வீரராக வலம் வரும்போது முறையான படைத்துறை சாரா குடிமக்கள் சார்ந்த நிர்வாகத்தை நாம் முன்நடத்த முடியாது. எமது மக்கள் எமது கட்சிக்கு ஏகோபித்த ஆதரவை வழங்கியதில் இருந்து இராணுவத்தைக் கட்டுப்படுத்தி படிப்படியாக வட மாகாணத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற எங்கள் கொள்கைகளை அவர்கள் மனமார அங்கீகரித்துள்ளமை புலனாகிறது.

படிப்படியாக இராணுவ வெளியேற்றம் பற்றி அரசாங்கமும் கூறி வருவது. (நடைமுறையில் மாற்றங்களை நாம் காணாது விட்டாலும்) மனமகிழ்வை ஏற்படுத்தியது. உரிய பேச்சு வார்த்தையின் பின்னர் திடமான திட்டம் ஒன்றை இது சம்பந்தமாக வட மாகாணசபையினராகிய நாங்களும் அரசாங்கமும் தீட்ட வேண்டி வரும். அப்பொழுது பாதுகாப்பு பற்றிய சீர்திருத்தங்கள் கருத்துக்கெடுப்பட வேண்டும்.

சர்வதேச ரீதியாக கைது செய்யப்பட்டவர்கள் மேலும் சரணடைந்த போராளிகள் ஆகியோர் எவ்வாறு ஆயுத நீக்கத்திற்கும் இராணுவக் கலைப்புக்கும் சமூக இணைப்பிற்கும் உட்படுத்தப்படுகின்றார்களோ அதேபோல் பாதுகாப்பு கோணஞ்சார் சீர்திருத்தங்கள் இராணுவத்தினரைக் குறைத்து பாதுகாப்பு நிறுவனங்களைக் கூடிய தொழிற்திறனுடன் செயற்பட வழிவகுக்கின்றன.
இது சம்மந்தமாக அரசாங்கமானது ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைகளில் மேற்படி போர் வீரர்களை சேர்த்துக் கொள்ள முடியுமா என்பது பற்றியும் ஆராயலாம். போர் வீரர்கள் இராணுவ வாழ்க்கையில் இருந்து குடிமக்கள் வாழ்க்கைக்கு மாற சர்வதேச உதவிகள் பெறக்கூடுமா என்பதை பற்றியும் அரசு ஆராயலாம்.

எமது ஒத்துழைப்பு யாவிலும் அரசாங்கத்திற்கு முழு அளவிலும் வளங்கப்படும் என்பதை இத்தால் அறிவிக்கின்றேன். இராணுவத்தினர் உரியவாறு வாபஸ் பெற்று செல்வதை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தினது கடமை ஆகும். அதே போல் வட மாகாணத்தில் மற்ற இயக்கங்கள் சார்ந்த துணைப்படைகளும் ஆயுத நீக்கத்திற்கும், படைக் கலைப்புக்கும் மீள சமூக இணைப்பிற்கும் உட்படுத்தப்பட வேண்டும்.

தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில் இராணுவத்தை வடமாகாணத்தில் நிறுத்தி வைக்க வேண்டிய நிலைமையை உருவாக்க எம் மக்கள் இனிமேல் எப்பொழுதும் இடமளிக்கமாட்டார்கள் என்று ஆணித்தரமாக நாங்கள் கூறிவைக்கின்றோம்.

இராணுவத்தினரோ துணை இராணுவத்தினரோ இராணுவத்தை வெளியேறாது தடுக்க நாடகங்கள் இயற்றக்கூடும். அவற்றிற்கு எவரும் ஏமாந்து விடக்கூடாது என்று கோருகின்றோம். வடமாகாண தமிழ் மக்களை பொறுத்த வரையில் அவர்கள் தேசியப் பாதுகாப்பு முரணான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டார்கள் என்பதை நாம் மீண்டும் மீண்டும் ஆணித்தரமாக கூறி வைக்கின்றோம்.

2. மக்களின் காணி உரிமைகளை வலியுறுத்தும் முறைமையே ஜனநாயக முறைமை. எனவே இராணுவத்தை படிப்படியாக வெளியேற்றும் செயலானது ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் மேலும் வலியுறுத்த உதவும்.
இராணுவ பாவனைக்காக பொதுமக்களின் காணிகளை அரசாங்கம் சுவீகரிப்பதை நிறுத்த முன்வர வேண்டும். அதுமட்டுமல்ல, இதுவரையில் இராணுவம் கையேற்ற காணிகளை அதன் உண்மையான உரித்தாளர்களிடம் கூடுமான விரைவில் இராணுவம் திருப்பிக் கொடுக்க கால அட்டவணை ஒன்று தயாரிக்கப்படல் அவசியம் என்பதையும் வலியுறுத்துகின்றோம்.

3. தக்க பாதுகாப்புச் சூழலை மக்களுக்காக அமைப்பதானது ஜனநாயக முறைமைக்கு அத்தியாவசியமானது. இது சம்பந்தமாக சட்டத்தின் ஆட்சி (Rule of Law) நிறுவப்படுவது அத்தியாவசியமானது. இச் சூழலை வடமாகாணத்தில் உருவாக்குவதற்கு மக்களின் மொழி அவர்களின் கலை, கலாச்சாரம், வாழ்க்கை முறை ஆகியனவற்றை புரியாத பொலிஸ் படை தொடர்ந்து இருப்பது தடையாக இருக்கின்றது.
எனவே உள்ளூரிலிருந்து தமிழ்பேசும் பொலிஸ் அலுவலர்களைத் சேர்த்தெடுத்து அவர்களுக்கும் போதிய பயிற்சியளித்து அவர்களைப் பொலிஸ் படையினுள் சேர்த்தெடுத்து, பொலிஸ் அதிகாரங்கள் பற்றி பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் கூறியிருப்பனவற்றை முற்று முழுதாக நடைமுறைப்படுத்த நாம் ஆவன செய்யவிருக்கின்றோம். இது சம்பந்தமாக பிராந்திய பொலிஸ் சீர்திருத்தங்கள் எமது கவனத்தை ஈர்ப்பன என்பதை இத்தருணத்தில் கூறிவைக்கின்றேன்.
4. ஜனநாயக முறைமையை வலியுறுத்தத் தேவையான மற்றைய அம்சங்கள் வெளிப்பாட்டுத் தன்மை, பதிலளிக்க வேண்டிய கடப்பாடு மற்றும் சட்டவாட்சிக் கொள்கை என்பன. இவற்றின் அடிப்படையிலேயே வடமாகாண சபை இயங்கும். எனவே இலஞ்ச ஊழல்களுக்கு இடமளிக்கப்படமாட்டாது.
மாகாண சபை உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் கடமைகளும் கடப்பாடுகளும் கட்டமைத்துக் கொடுக்கப்படுவன. அவர்களின் முன்னேற்றம் காலத்திற்குக் காலம் மறு ஆய்வு செய்யப்பட்டு மக்கள் மத்தியில் தெரியப்படுத்தப்படும். எனவே நாங்கள் ஒவ்வொருவரும் கடமையே கண்ணாகக் காரியங்களை ஆற்றப் பழகிக் கொள்ள வேண்டும்.

அலுவலர் நிர்வாகத்தில் அரசியல் குறுக்கீடுகள் அணைத்துக் கொள்ளப்படமாட்டா. மக்களுக்காக மாகாண சபை அலுவலர்களும் உறுப்பினர்களும் கடமையாற்றுகின்றார்களே ஒழிய எமக்காக மக்கள் என்ற எண்ணத்தை இனிமேல் யாவரும் கைவிட வேண்டும். மக்கள் சேவையை மதிக்காது நடக்கும் அலுவலர்கள் அடையாளம் கண்டு சீர்படுத்தப்படுவார்கள்.

5.இராணுவத்திடம் இருந்து பிரிவு படாத ஒருவர் ஆளுநராக இருக்கும் போது முறையான குடிமக்கள் நிர்வாகம் நடைபெற முடியாது. இன்றைய ஆளுநர் எவ்வாறு வெளிப்படையாக வடமாகாண தேர்தல் விடயங்களில் பக்கசார்பாக நடந்து கொண்டார் என்பது நாடறிந்த விடயம். குடிமக்கள் நிர்வாகத்தை உண்மையில் ஜனாதிபதி வரவேற்கின்றார் என்றால் வடமாகாண ஆளுநர் பதவிக்கு தகைமையுடைய இராணுவத்தினர் அல்லாத ஒருவரை நியமிக்கக் கோருகின்றோம்.

போருக்குப் பின்னரான சூழலில் புனர்நிர்மாணம், புனருத்தாரணம், புனரமைப்பு, அபிவிருத்தி ஆகியவை சம்பந்தமான அனுபவத்தையும் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள், இளைஞர்கள், முன்னைநாள் போராளிகள் ஆகியோரின் நல்வாழ்வில் கரிசனையையும் கொண்ட ஒருவரையே ஆளுநராக நியமிக்க வேண்டும் என்று வடமாகாண மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

ஜனாதிபதியின் தற்துணிவு அதிகாரத்தில் உள்நுழைவது எமது நோக்கமல்ல. ஆனால் அபிவிருத்தி வேலைகளில் அனுபவமும், பெண்கள்,குழந்தைகள் போன்றோரின் நல்வாழ்வில் கரிசனையுமுடைய ஒருவரையே ஆளுராக நியமிக்க வேண்டும் என்று இந்த மாகாண மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்பதையும் சொல்லி வைக்க வேண்டியுள்ளது.

ஜனநாயக முறைமையை எம் நிர்வாகத்தினுள் வரவேற்க மேற்கண்ட விடயங்கள் அத்தியாவசியமானவை என்று நாம் கருதுகின்றோம். அதே நேரத்தில் வடமாகாண சபை எப்பேற்பட்ட திட்டமிட்ட மனித, பொருள் வளம் சம்மந்தமானதும் அபிவிருத்தி சம்மந்தமான நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்பதை அடையாளம் காண வேண்டியது அவசிய தேவையும் எமக்குள்ளது.

புலம் பெயர்ந்த எமது உறவுகள் மனித வளம், பொருள் வளம் சம்மந்தமாக எமக்கு நம்பிக்கை உண்டு. எமது அறிவு முதிர்ந்த உடன் பிறப்புக்கள் பலர் வெளிநாடுகளை நாடிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு சென்ற காலங்களில் ஆளாக்கப்பட்டனர் என்பது ஊரறிந்த விடயம். அவர்களில் பலர் வெளிநாடுகளில் நற்பெயரையும் பெற்று வருவது எமக்கு பலத்தை மகிழ்வையும் ஊட்டியுள்ளது.

உங்கள் யாவரது ஒத்துழைப்பும் உதவியும் எமக்கு அவசரமாகத் தேவையாக உள்ளது. நாம் இழந்த எமது பெருமைகளைத் திருப்பிப் பெற வேண்டும் என்றால் இத்தகைய ஒத்துழைப்பும் உதவியும் அவசியம் என்பதில் எந்தவித மயக்கமும் இருக்கத் தேவையில்லை. அவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட எம்மக்களுக்கு உதவி வழங்குவதற்கு ஏதுவாக நடைமுறைச்சாத்திய பொறிமுறை அமைப்பொன்றை ஏற்படுத்த அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

நாம் கேட்பது எம்மை எமது கால்களில் நிற்க வைத்து முன்னேற்ற வேண்டிய உதவிகளையே. வருமானங்களைப் பெருக்கும் வழிமுறைகளை எமக்கு அடையாளம் காட்ட வேண்டுகிறோம். எங்கள் உடன் பிறப்புக்கள் எம்முடன் சொற்ப காலத்திற்கேனும் இங்கு வந்திருந்து முறையாக அபிவிருத்திப் பணிகளில் எம்மை ஈடுபட வைத்துவிட்டுத் திரும்ப வேண்டுகின்றோம்.

தொழிநுட்ப உதவிகளையும் நிதி உதவிகளையும் இது சம்பந்தமாக எமக்கு வழங்கக் கோருகின்றோம். இது சம்மந்தமாக தென்னிந்திய தமிழர்களின் பங்கை நாங்கள் குறைத்து எடை போடவில்லை என்பதை ஆணித்தரமாக எடுத்துக்கூற விரும்புகிறேன். எம்முடன் இணைந்து எம்மை வழிநடத்த அவர்களின் உதவி தேவையாக இருக்கின்றது.

தென்னிந்திய இளைஞர் யுவதிகளின் அரசியல் சார்பற்ற உணர்ச்சி வேகம் எமக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நான் கூறியே தீர வேண்டும். வருங்காலத்தில் தமிழகமும் வடமாகாணமும் பலவிதங்களில் ஒத்துழைக்க வேண்டியிருக்கும் என்பதை இங்கு கூறிவைக்கின்றேன்.
தூர கால நோக்குகளில் முதன்மைத்துவம் பெற்றது அரசியல் தீர்வே. நாங்கள் பிரிவினையை ஏற்கவில்லை என்பதை சிங்கள மக்கள் உணர வேண்டும். உள்ளக சுயநிர்ணயம் ஒரு நாட்டைப் பிரிவுபடுத்தாமல் ஒற்றுமைப் பாதையில் கொண்டு செல்லக்கூடும் என்பதை அரசாங்கமும் சிங்கள மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

நாங்கள் ஒன்றுபட்ட நாட்டின் இறைமையை ஏற்கும் அதே நேரத்தில் தேசிய பாதுகாப்பு, சர்வதேச உறவுகள் போன்றவை மத்திய அரசாங்கத்தின் நெறிப்படுத்தலில் நடைபெற வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அரசியல் யாப்பில் எதேச்சாதிகாரத்திற்குக் கொடுக்கபட்டிருக்கும் அந்தஸ்தை நாம் எதிர்க்கின்றோம்.

எமது எதிர்ப்பு ஜனநாயக ரீதியானது. வன்முறையை நாங்கள் வன்மையாக எதிர்க்கின்றோம். இராணுவத் துணையுடன் நடத்தப்படும் அரச சார்பு குடியமர்த்தல்களை நாம் வன்னையாகக் கண்டிக்கின்றோம். மீள்குடியேற்றம் என்ற போர்வையில் வடமாகாணத்தில் என்றுமே குடியிருக்காத மக்களைக் கொண்டு வந்து குடியேற்றுவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். வடகிழக்கு மாகாணங்களில் திட்டமிட்டு கட்டாயமாக மக்கள் பரவலை மாற்றி அமைக்கும் அரசு சார் நடவடிக்கைகளை நாம் எதிர்க்கின்றோம்.

இலங்கை நாட்டின் குடிமக்கள் என்பதில் சிங்கள மக்கள் பெருமை கொள்வதற்கு ஒப்பாக நாங்களும் பெருமை அடைகின்றோம் என்பதைச் சிங்கள மக்கள் தங்கள் மனதிற்கு எடுப்பார்களானால் நாங்கள் கூட்டுப் பங்காளிகள் என்ற முறையிலேயே அவ்வாறு பெருமை கொள்கின்றோமே தவிர குத்தகைக்காரர்களாக அல்ல என்பதையும் அவர்கள் மனதில் நிலைநிறுத்திக் கொள்வார்களாக.

இது சம்பந்தமாக 23மே 2009 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளருக்கும் தற்போதைய ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற சம்பாசனையில் ஜனாதிபதி தமிழர் பிரச்சினையைத் தீர்க்க பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்ல முடிவெடுத்துள்ளதாக கூறியதை இத் தருணத்தில் நினைவுறுத்துகிறேன்.

இன்னொரு முக்கியமான விடயத்தை இங்கு குறிப்பிட வேண்டும். அதாவது வடமாகாணத்தில் இருந்து 1990ஆம் ஆண்டில் பலவந்தமாக அகற்றப்பட்டதால் மற்றைய மாகாணங்களில் குடியேறிய முஸ்லிம் மக்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளில் நாம் ஈடுபடுவோம்.

போரானது எம்மையும் சிங்கள மக்களையும் வெகுவாகப் பாதித்துள்ளமை எல்லோராலும் மனத்திற்கெடுக்கப்பட வேண்டும். அதேநேரம் தமிழ் பேசும் மக்கள் முகம் கொடுத்து வரும் மிகக் கொடூரமான பாதிப்புக்களை சிங்கள மக்களும் உலக மக்களும் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் மேலும் மேற்படி அவலங்களைப் பெருக்கி சினங்களை வளர்த்துக்கொண்டு போவதில் அர்த்தமில்லை.

பிரபாகரன் பற்றி தேர்தல் காலத்தில் நான் கூறிய ஒரேயொரு வார்த்தை எவ்வாறு சில மக்கள் மனதில் உற்சாகத்தையும் வேறு சில மக்கள் மத்தியில் கொடுஞ்சினத்தையும் வெளிப்படுத்தியதென்பதை யாவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதை அறிந்து தான் நான் கெப்பெட்டிபொல திசாவையைப் பற்றி அதேநேரத்தில் கூறி வைத்தேன்.

எம் ஒவ்வொருவரினதும் காட்சிகோணமே (Perspective) இப்பேற்பட்ட மனோநிலைகள் என்பதை உணரும் காலம் இப்பொழுது உதயமாகவுள்ளது. கெப்பெட்டிப்பொல திசாவே என்ற ஒரே மனிதன் எவ்வாறு ஆங்கிலேயர் மத்தியில் வெறுப்பையும் தற்கால சிங்கள மக்கள் மத்தியில் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளார் என்பதை உணந்து எமது சினங்களைத் தணிய வைக்க நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

போர், போட்டி போன்றவை எம்மை எதிரும் புதிருமாக நிற்க வைப்பன. ஆனால் புரிந்துணர்வும் அன்பும் எம்முள் ஒற்றுமையை வளர்ப்பன.
அரசாங்கத்திற்கும் வடமாகாண சபைக்கும் இடையில் ஒத்துழைப்பை ஏற்படுத்த முடியுமானால் ஜனநாயகத்தை எமது வடமண்ணில் நிலைபெறச் செய்யலாம். மக்களின் அவலங்களைப் போக்க ஒருமித்துச் செயலாற்றலாம். நாங்கள் ஒத்துழைப்புக் கரத்தை நீட்ட ஆயத்தமாக உள்ளோம்.

உயரிய இராஜதந்திரத்தைக் காட்ட அரசாங்கத்திற்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. நேசக்கரம் நீட்டுவார்கள் என்று எண்ணுகின்றேன். எமது எதிர்தரப்பு சகோதரர்களுக்கும் எமது நேசக்கரத்தை நீட்டுகின்றோம் அவர்களில் அனேகர் ஏற்கனவே எங்களுக்கு ஒத்துழைப்பு நல்குவதாகக் கூறியுள்ளமை மனமகிழ்வை ஏற்படுத்துகின்றது.

வடமாகாணத்தை முன்னேற்ற சர்வதேச ரீதியில் போருக்குப் பின் வெற்றிகரமாக கைக்கொள்ளப்பட்ட கொள்கைகளையும் நடைமுறைகளையும் கவனத்தில் எடுத்து தேசிய மற்றும் பிராந்திய கொள்கைகளை உருவாக்க நாம் திடசங்கற்பம் பூண்டுள்ளோம். இது சம்பந்தமாக கொள்கைக்கூற்றொன்றை (policy statement) சில வாரங்களில் நாங்கள் முன் வைப்போம்.

எம்மைப் பொறுத்தவரையில் நாம் நாட்டவிருக்கும் அத்திவாரக் கற்கள் நீதி, நல்லாட்சி, நம்பிக்கை, சமத்துவம் சுதந்திரம் என்பனவாகும். எமது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு பாதுகாப்பு,கல்வி, வேலை வாய்ப்பு என்பவற்றை நோக்கியே நாம் அமைக்கப்போகும் பாதைகள் செல்வன.
சிங்களப் பொதுமக்களுடனே தான் எமது பாலங்கள் கட்டப்படுவன.

நாம் அமைக்கப் போகும் துறைமுகங்கள் எமது தூரதேசத்து உறவுகளையும் நலன் விரும்பிகளையும் எம் நாட்டிற்கு கொண்டு வருவன. கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் நோக்கியே எமது அழகு சார் செயற்பாடுகள் வளர்க்கப்படுவன. எமது கண்காட்சிகள் எமது அறிவை, எமது மொழியை, எமது புதுமை காணும் இயல்பை நோக்கியே ஆற்றுப்படுத்தப்படுவன.

சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் காலனித்துவப் பிடிக்குள் அமிழ்ந்திருந்த எம் நாட்டு மக்களைக் கரையேற்ற நாம் தான் தலைமைத்துவம் அளித்தோம். வீழ்ந்திருக்கும் எம் மக்களைக் கரையேற்ற மீண்டும் நாமே சவால்களை ஏற்று முன்னேற உள்ளோம்.
எல்லோரையும் இறையருள் பேணிப் பாதுகாப்பதாக.
நன்றி வணக்கம்.

0 கருத்துக்கள் :