பலாலி விமான நிலையம் விரைவில் தமிழ் மக்களது பாவனைக்காம். சல்மான் குர்ஷித்

8.10.13

படைத்தரப்பின் வசமுள்ள பலாலி விமான நிலையம் விரைவில் தமிழ் மக்களது பயன்பாட்டிற்கான பொது விமான நிலையமாக ஆக்கப்படும். அதே போன்று விரைவில் மன்னார் துறைமுகம் புனரமைக்கப்பட்டு கப்பல் போக்குவரத்துக்களிற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை சென்றிருந்த அவர் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார்.இந்த பயணத்தின் போது வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அவர் சந்தித்துப்பேசினார்.
அதே வேளை யுத்த பாதிப்புக்களை சந்தித்த கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு வர்த்தகர்கள் சிலருக்கும் தமது வீடமைப்பு திட்ட பயனாளிகளிற்கும் அவர் சான்றிதழ்களை வழங்கினார். இந்தப் பயணங்களில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே.சின்ஹா, இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகார் பிரசாத் காரியவசம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
யாழ்.நகரில் இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பேசுகையில் இவ்வாறு தெரிவித்த அவர் தமிழ் மக்கள் மாகாணசபை தேர்தலில் பெற்றுள்ள ஆணையை பலப்படுத்த இந்தியாவுதவுமெனவும் தெரிவித்தார்.முன்னதாக தெல்லிப்பழை பாதுகாப்பு வலயத்தில் விடுவிக்கப்பட்ட பகுதிகிளில் இந்திய அரசினுதவியின் கீழ் கட்டப்பட்ட இரு வீடுகளையும்; அவர் திறந்து வைத்தார். வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடனான சந்திப்பினில் அவருடன் மாவை சேனாதிராசாவும் சுமந்திரனும் பிரசன்னமாகியிருந்தனர்.

0 கருத்துக்கள் :