விக்னேஸ்வரனை சந்திக்க ஜெயலலிதா மறுத்தாரா? சிங்கள ஊடகம்

20.10.13

இலங்கையின் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபட்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வடமாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக இலங்கையில் இருந்து வெளியாகும் சிங்கள பத்திரிகையொன்று தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.
உயர் ராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ள அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இந்தச் சந்திப்பை வடக்கிலிருந்த பிரபல தமிழ் தலைவரான அமரர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் நெருங்கிய உறவினரொருவர் ஏற்பாடு செய்திருந்தார்.
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் வேண்டுகோளின் பேரில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தாம் உத்தியோகபூர்வமாக சந்திக்கவுள்ள முதலாவது வெளிநாட்டு அரசியல் பிரமுகர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா என்று விக்னேஸ்வரனும் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

விக்னேஸ்வரனை சந்திக்க முதலில் ஜெயலலிதா இணக்கம் தெரிவித்திருந்த போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள சிலர் தகவல் வழங்கியதன் காரணமாக இறுதி நேரத்தில் இந்த சந்திப்பை இரத்து செய்த ஜெயலலிதா நான் ஒரு போதும் இலங்கை வரப்போவதில்லை எனவும் இலங்கை அரசுடன் சம்பந்தப்பட்ட தலைவர்களை சந்திக்கப்போவதில்லை என்றும் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்தவருக்கு அறிவித்துள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :