வடக்குத் தேர்தலின் பின் படையினர் மீது சீண்டல்; கொந்தளித்தார் இராணுவத்தளபதி

16.10.13

வட மாகாண சபைத் தேர்தலின் பின்னர் இராணுவத்தினரைச் சீண்டும் செயற்பாடுகள்   அதிகரித்துள்ளன. இதன் மூலம் எமது நாட்டைப் பிளவுபடுத்தும் நிலை ஏற்பட்டால், இராணுவம் அதனைத் தடுக்க - பதிலடி கொடுக்க - எப்போதுமே தயாராக இருக்க வேண்டும் - இவ்வாறு இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் தயாரத்நாயக்க தெரிவித்தார்.

இராணுவத் தளபதியாகப் பொறுப்பெடுத்த பின்னர் வட பகுதிக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள அவர் யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினருடனான சந்திப்புக்களை முடித்துக் கொண்டு வவுனியா மாவட்டத்துக்குச் சென்றிருந்தார்.

வன்னிப்பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே  மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது;

சில ஆண்டுகளுக்கு முன்னர் நாம் பதுங்கு குழிகளில் இருக்கும் போது எமக்கு எதிரான நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டனர்.

அத்துடன் இராணுவத்தினரை நோகடிக்கும் செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுத்தனர். அப்போதெல்லாம், எமது இராணுவத்தினர்  மிகவும் அமைதியாகவும் பக்குவமாகவும் செயற்பட்டனர்.

அதன் பின்னர் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டிய தேவை ஏற்பட்ட போது, எமது இராணுவத்தினர் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டு நாட்டுக்கான பணியை மேற்கொண்டு  பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்தனர்.

இதன் பின்னர் இடம்பெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் அரசு தோல்வியடைந்தது. மக்களுக்காக இராணுவத்தினர் பெரும் சேவைகளை செய்த போதிலும் அரசுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்தனர்.

ஆனால் நாம் அரசியலுக்கு அப்பால் இந்த நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில்  வெற்றி கண்டுள்ளோம் என்பதில் பெருமையடைகின்றோம்.

தேர்தலின் பின்னர் இராணவத்தினரைச் சீண்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. அவ்வாறான நிலை ஏற்பட்டு நாடு பிளவுபடும் நிலைமை தோன்றினால் எமது இராணுவம் அதனைத் தடுக்க தயாராக இருக்க வேண்டும்.

இராணுவத்தினருக்கு உள்ளே இருக்கும் சிலரும் சூழ்ச்சிகள் மூலம் குழுப்பங்களை ஏற்படுத்த சிலர் முற்படுவர். எனவே படையினர் அனைவரும் விழிப்பாக செயற்பட வேண்டும்.

தொப்பை இராணுவம்
இராணுவத்தில் இருப்பவர்களுக்கு தேகாரோக்கியம் முக்கியம். சிலர் பெருத்த வயிறுடன் காணப்படுகின்றனர். அவ்வாறானவர்கள் எமக்குள் இருந்தால் பதவியுயர்வுகள் கிடைக்காது என்பதை ஞாபகப்படுத்துகின்றேன் - என்றார்

0 கருத்துக்கள் :