விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த முன் சத்தியப்பிரமாணம்

7.10.13

இலங்கை நேரம் சற்று முன்னதாக வட மாகாணத்தின் முதலமைச்சராக சிவி விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதற்கான நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது.

வடமாகாணத்தில் கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி அமோக வெற்றியீட்டி 36 அசனங்களில் 28 ஆசனங்களை கைப்பற்றி மேலதிகமாக 2 போனஸ் ஆசனங்களையும் பெற்றிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கமான இலங்கை தமிழரசுக் கட்சியில் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட சி.வி. விக்னேஸ்வரன் 132,255 விருப்பு வாக்குகளை பெற்றார்.
வடக்கு கிழக்கு தேர்தல் வரலாற்றில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற பெருமையும் தமிழரசுக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரனையே சாரும்.

இதன் பின்னதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாணசபைக்கு தெரிவு செய்யபட்ட 28 உறுப்பினர்களும் சி.வி.விக்னேஸ்வரனை வட மாகாண முதலமைச்சராக கடந்த செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி ஏகமனதாக தெரிவு செய்தனர்.

இந்நிலையில் வடமாகாண முதலமைச்சர் சத்தியப் பிரமாணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த வடமாகாண மக்களை கருத்திற் கொண்டு முதலமைச்சர் ஜனாதிபதி முன் சத்தியப் பிரமாணம் செய்யக் கூடாது என கூட்டமைபபின் ஏனைய கட்சிகள் மற்றும் தமிழ் சட்டத்தரணிகள் பகிரங்கமாக வலியுறுத்தினர்.

எனினும் முதலமைச்சர் ஜனாதிபதி முன் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வது நல்லிணக்கத்துக்கான வழி எனவும் அதுவே இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தின் விருப்பம் எனவும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


(2ஆம் இணைப்பு)


வட மாகாண முதலமைச்சராக திரு. சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் முன்னிலையில் அலரிமாளிகையில் வைத்து இன்றுமுற்பகல் 9.30மணியளவில் தமிழில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
முதலில் திரு சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் வட மாகாணசபை உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன், அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
இந்த சத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோரும், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி. விக்னேஸ்வரன், விக்னேஸ்வரன் அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், அரச தரப்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுடன், பிரதமர் டீ.எம்.ஜயரத்ன, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி, அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, ராஜித சேனாரத்ன, மைத்திரபால சிறிசேன, திஸ்ஸ விதாரண, ரவூப் ஹக்கீம், அதாவுல்லா, அஸ்வர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும், பிரபா கணேசன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இது பற்றி கருத்துத் தெரிவித்த புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், தாம் நல்லெண்ண நோக்கிலும், ஒற்றுமைக்காகவுமே இந்நிகழ்வில் பங்கேற்றதாகவும், ஆனாலும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்வது பிழையானது என்ற தனது நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் கிடையாதென்றும் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :